செவ்வாய், 9 ஜூன், 2009

பூந்தளிர் - மறக்க இயலாத சிறுவர் இதழ்!

_______________________________________________________________________________

பதினைந்து நாட்களுக்கு முன்னால் எனது அலைபேசியில் CELEBRATE-969 என்ற தகவல் குறுஞ்செய்தியாக அ.கொ.தீ.கவின் பிராந்திய தலைமையகத்திலிருந்து வந்தது. நமக்கு ஃபிளைட் 731, ஃபார்முலா X13, 007, 009, 001 ஏன் A-Z கூட தெரியும். CELEBRATE-969 என்றால் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நண்பர் விஸ்வா சொன்னார் 969 என்பது 2009ம் வருடம் ஜுன் மாதம் 9 ம் தேதியை குறிக்கும் என்றும், அன்றுதான் (அதாவது இன்றுதான்!) தன்னிகரில்லா தானைத்தலைவரும், நடமாடும் காமிக்ஸ் களஞ்சியமும், அ.கொ.தீ.காவின் நிறுவன மற்றும் நிறுவிய நிர்வாகத் தலைவருமான டாக்டர் செவனின் பிறந்த நாள் என்று! மேற்படி விவரப்படி தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு தமிழ் கூறும் நல்லுகத்திற்கு இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்!

_______________________________________________________________________________

தமிழக சிறுவர் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்த இதழ் பூந்தளிர்! இதுவரை இதன் இடத்தை நிரப்ப ஒரு இதழ் கூட தமிழில் வரவில்லை. நம்மில் பெரும்பாலோனோருக்கு காமிக்ஸ் வடிவம் என்பது அறிமுகமானதே பூந்தளிர் இதழால்தான் என்பது என் கருத்து! எழுத்துக் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த அக்கால சிறுவர் இதழ்களிடையே படக்கதைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு பக்கங்களை ஒதுக்கி ஏறக்குறைய ஒரு காமிக்ஸ் போலவே வெளி வந்த ஒரு அறிவுப் பெட்டகம்தான் பூந்தளிர்.

Poontalir - Wrappers

பூந்தளிர் முகிழ்ந்த வரலாறு

கேரளாவில் பூம்பட்டா (Poompatta-வண்ணத்துப்பூச்சி) என்ற சிறுவர் இதழை வெற்றிகரமாக நடத்தி வந்த பைகோ (PAICO) நிறுவனம் சிறுவர் இதழ்களின் பொற்காலமான 1984ம் வருடம் அக்டோபர் முதல் தேதியன்று 'குழந்தைகளுக்கான புதுமைப் பத்திரிக்கை' என்ற ஸ்லோகத்துடன் பூந்தளிரை மாதம் இருமுறை இதழாக தொடங்கியது. அப்போது ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மஞ்சரி போன்ற சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இதே காலக்கட்டத்தில் கேரளாவில் 9 சிறுவர் இதழ்கள் பூந்தளிரை போன்ற உள்ளடக்கத்துடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 1987ஐ போலவே 1984ம் வருடமும் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் தவர்க்க இயலாத ஒரு வருடம் ஆகும். ஏனெனில் இந்த வருடத்தில் தான் ராணிக்காமிக்ஸ் அழகியைத் தேடி தனது பயணத்தை தொடர்ந்தது, லயன் காமிக்ஸ் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறியதும் இந்த ஆண்டுதான். மேத்தா காமிக்ஸ் வெளிவரத்தொடங்கிய ஆண்டும் 1984தான்.

Inauguration

ரூ. 2/- விலையில் 260, கோல்டன் டவர்ஸ், ராயப்பேட்டை ரோடு , சென்னை 14 என்ற முகவரியில் இருந்து வெளிவந்தது பூந்தளிர். அப்போது 20, 25 பைசாக்கள் தான் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட் மணி என்பதை இங்கு நினைவில் கொள்ளவும்.

Dinesh- Poontalir பைகோ நிறுவனத்தின் தினேஷ் வி.பை பூந்தளிரின் (கௌரவ) ஆசிரியராக இருந்தார். துணை ஆசிரியராக நமது வாண்டுமாமாதான் நியமிக்கப்பட்டார். சிறுவர் இலக்கியம் என்றால் பாடல்கள், விடுகதைகள்,Vandumama சிறுகதைகள் என்ற நிலையை மாற்றி சித்திரங்களின் மூலம் கதை சொல்வதே குழந்தைகளை எளிதில் கவரும் என்பதை பூந்தளிரின் மூலம் நிரூபித்து காட்டினார் வாண்டுமாமா. பூந்தளிர் வெறும் கதைகளை மட்டும் வெளியிடும் பொழுது போக்கு இதழாக அல்லாமல் ஒரு அறிவூட்டும் இதழாக (Edutainment) வாண்டுமாமாவின் கைவண்ணத்தில் வெளிவந்தது.

பூந்தளிர் வெளிவந்த காலக்கட்டத்தில் சிறுவர் இதழ்களில் படக்கதைகள் (Comics) வெளிவந்தாலும் அவை சிற்சில பக்களுக்கு தான் வெளிவரும். ஏனெனில் தமிழகத்தில் காமிக்ஸ்களை உருவாக்கும் திறன் கொண்ட ஓவியர்கள் மிகச்சிலரே இருந்தனர். நான் அறிந்த வரையில் செல்லம், வினு (கோகுலம்) , சுப்பு (ரத்னபாலா), ஜெயராஜ் (ரேகா காமிக்ஸ்), ரமணி (கோகுலம்), தாமரை (தினமணிக் கதிர், ரத்னபாலா), ஷங்கர் (அம்புலிமாமா, இராமகிருண விஜயம்), ஸ்ரீகாந்த் (பொன்னிக் காமிக்ஸ்) போன்ற தமிழக ஓவியர்கள் காமிக்ஸ் துறையில் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இவர்களுள் ஓவியர் செல்லம் அவர்களின் படைப்புகள் தமிழ் காமிக்ஸ் உலகில் எல்லோரின் கவனத்தை பெரிதும் கவர்ந்தவை ஆகும்.

Arivu Potti & Contents

வாண்டுமாமா அடிப்படையில் ஓர் ஓவியர், இதழ் வடிவமைப்பாளர் , சிறுவர் இலக்கியங்களைப் படைப்பதில் சாதனைப் படைத்தவர், அயல்நாட்டு இலக்கியங்களை தமிழ் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், சிறுவர் இலக்கிய உலகில் புது புது உத்திகளை புகுத்துவதில் மன்னர். சிறுவர் இலக்கியத்தில் அவர் தொடாத துறைகளே இல்லை எனலாம். இவ்வளவு தகுதிகளை கொண்ட வாண்டுமாமாவுக்கு பைகோ நிறுவனம் மிகுந்த சுதந்திரத்தையும், பூந்தளிரை ஒரு முன்மாதிரி சிறுவர் இதழாக கொண்டுவர வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தது.

இந்திய காமிக்ஸ் உலகின் பிதாமகன் ஆனந்த்பை -ஆல் (Anand Pai) உருவாக்கப்பட்ட அமர்சித்திரக்கதா (Amar Chitra Katha), டிங்கிள் (TINKLE) ஆகியவற்றின் வெளியீட்டாளர்களான இந்தியா புக் கௌஸ் (India Book House) உடன் வியாபார ஒப்பந்த செய்திருந்தது பைகோ நிறுவனம். எனவே டிங்களில் வெளிவந்த காமிக்ஸ் படைப்புகள் வாண்டுமாமா வின் சுவையான மொழிப்பெயர்ப்புடன் பூந்தளிரில் வெளியாயின.

டிங்கிள் பத்திரிக்கையில் அயல்நாட்டு காமிக்ஸ்களுடன் போட்டி போடும் வகையில் எண்ணற்ற காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள், கதைகள் உருவாக்கப்பட்டன. மிகவும் திறமைவாய்ந்த நிறைய ஓவியர்களுக்கு டிங்கிளில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்களுள் காக்கை காளியை உருவாக்கிய பிரதீப் சாத் (Pradeep Sathe), சுப்பாண்டியை உருவாக்கிய வி. பி. ஹால்ப், (V.B. HALBE), ஹோட்ஜாவுக்கு உயிர் கொடுத்த ராம் வாயிர்கர் (RAM WAEERKAR), மற்றும் மகாரா (MAKARA), திலிப் கடம் (DILIP KADAM). நான்ரே (M.N.NANGRE) போன்றோர் முக்கியமானவர்கள்.

Tinkle

டிசம்ர் 1980ல் 28 பக்கங்களுடன் ரூ. 2.50 விலையில் மாத இதழாக முழு வண்ணத்தில் வெளிவந்தது டிங்கிள். இரண்டு வருடங்களுக்கு பின் மாதம் இருமுறை ஆனது (Jan 1983). கிட்டத்தட்ட 67 டிங்கிள் இதழ்கள் பூந்தளிர் வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்து விட்டன. இதனால் காமிக்ஸ் கதைகளுக்கு வற்றாத நீரூற்றாக டிங்கிளை பூந்தளிர் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

லூயிஸ் எம். ஃபெர்னான்டெஸ் (Luis M. Fernandes -script writer), பிரதீப் சாத் (Illstrator) கூட்டணியின் காக்கை காளியும், ஆனந்த் பை, மோகன்தாஸ் கூட்டணியின் கபீஷும்தான் பூந்தளிரின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த முக்கியமான காமிக்ஸ் பாத்திரங்கள்.

Kabish 001

Kabish 002

பூந்தளிர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கபீஷ். தன் மந்திர வாலின் வாலின் உதவியால் எதிரிகளிடம் இருந்து வன விலங்குகளை காக்கும் கபீஷ் கதைகள் ரங் ரேகா என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு வெளியிடப்பட்டன. ஆரம்ப கால டிங்கிள் இதழ்களில் கூட கபீஷ் கதைகள் வெளிவரவில்லை குறிப்பிடத்தக்கது. இக்கதைகளில் கபிஷ் நண்பர்களாக கரடி பபூச்சா, மான் பிந்து, கழுகு பஞ்சா, முயல் முத்து, அதன் அத்தை காரணி, யானை பந்திலா, வில்லன்களாக நரி சிகால், மந்த புத்தியுடைய புலி பீலு, வேட்டைக்காரன் தோப்பையா ஆகியோர் வருவர்.

Kali

காக்கை காளி என்ற காமிக்ஸ் பாத்திரம் பூந்தளிர் வாசகர்களால் மறக்க இயலாத ஒன்று. இக்கதைகளில் வரும் அப்பாவி முதலை துப் துப் அதனுடைய வில்ல நண்பன் நரி சமந்தகன் ஆகியோரின் சதிகளை காளி முறியடிப்பதுதான் கதை. பெரும்பாலான சமயங்களில் முதலை துப் துப்பின் முட்டாள் தனத்தை (அல்லது அப்பாவி தனத்தை)பயன்படுத்தியே காளி சமந்தகனின் திட்டங்களை முறியடிக்கும்.

முதல் வருட இதழ்களில் சுப்பாண்டி, தந்திகார மந்திரி, வேட்டைக்கார வேம்பு போன்ற காமிக்ஸ் பாத்திரங்கள் வெளிவரவில்லை. ஏனெனில் மூல இதழான டிங்கிளில் கூட அவை அப்போது உருவாக்கப்படவில்லை. ஹாட்ஜா தனி கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.

விலங்குகள், பறவைகள் பற்றி காமிக்ஸ் வடிவில் விளக்கும் அஸ்வின், பிரதீப் சாத் கூட்டணியின் இரண்டு காமிக்ஸ் ஸ்டிரிப்புகள், (உ.தா: புலியைச் சந்தியுங்கள், கரடியை சந்தியுங்கள்), லூயிஸ் எம். ஃபெர்னான்டெஸ், ஆனந்த் மாண்ட் கூட்டணியின் அறிவியல் உண்மைகளை விளக்கும் காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகள் இவற்றுடன் காமிக்ஸ் வடிவ நாட்டுப்புறக் கதைகளும் டிங்கிளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு பூந்தளிரில் வெளியிடப்பட்டன.

Meet - Kuil - Tinkle

Meet - Kuil

இந்தியா புக் கௌஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'DOG DETECTIVE RANJA' என்ற காமிக்ஸ் கதைகள் Partp Sharma, Luis M. Fernandes, Pradeep Sathe கூட்டணியால் உருவாக்கப்பட்டு டிசம்பர் 1983லிலேயே டிங்கிளில் வெளிவரத்தொடங்கின. இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு துப்பறியும் ரஞ்சன் என்ற பெயரில் பூந்தளிரில் வெளியிடப்பட்டன.

Ranjan, Hodja

டிங்கிளில் காமிக்ஸின் கதை எழுதியவர், ஸ்கிரிப்ட் எழுதியவர், ஓவியர் இவர்களின் பெயர்களை வெளியிடுவார்கள். பூந்தளிரிர் அவை தவிர்க்கப்பட்டிருக்கும். விதிவிலக்காக கபீஷ் கதைகளில் மட்டும் உருவாக்கியவர்களின் பெயர்கள் இடம்பெற்றன.

அச்சும், வடிவமைப்பும்

பூந்தளிர் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே அளவில்தான் அதாவது ஒன்றுக்கு எட்டு (1x8) என்று சொல்லப்படும் 140 செ.மீ. x 200 செ.மீ அளவில் இரண்டு வண்ணங்களில் வெளியிடப்பட்டது. எழுத்துருக்களின் வண்ணம் கருப்பாகவும் பின்னனி வண்ணம் காவி, பச்சை, சிவப்பு என மாறி மாறியும் அச்சிடப்பட்டன. இந்த இருவண்ண முறை நமது லயன் குழும இதழ்களிலும், இரத்னபாலா இதழிலும் பின்பற்றப்பட்டது.

முதல் சில ஆண்டுகள் பூந்தளிர் ஒவ்வொரு எழுத்தாக கோர்த்து அச்சிடும் முறையான டிடில் பிரஸ் முறையில்தான் அச்சிடப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் அச்சில் இப்போதுள்ள (ஆப்செட் முறை) நேர்த்தி இருக்காது. ஆசிரியர் குழு சென்னையில் இருந்தாலும் கொச்சியில் உள்ள பைகோ அச்சகத்தில் தான் பூந்தளிர் அச்சிடப்பட்டது.

வாண்டுமாமா இயற்கையாகவே நல்ல ஓவியராகவும், வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். மேலும் அவருக்கு கிடைத்த ஓவியர்கள் குழு திறமைசாலிகளாக இருந்ததால் வடிவமைப்பில் பூந்தளிர் சமகால இதழ்களை விட நேர்த்தியாக இருந்தது.

போட்டிகள்

பூந்தளிரில் 'பூந்தளிர் அறிவுப் புதிர் போட்டி' என்ற பெயரில் குறுக்கெழுத்துப் போட்டி தொடர்ந்து வெளிவந்தது. சரியாக எழுதிய மூன்று நபர்களுக்கு ரூ. 50 பகிர்ந்து வழங்கப்பட்டது. இதை தவிர ஒட்டுப் படப்போட்டி, கதையின் முடிவை ஊகிக்கும் போட்டி என வகை வகையான போட்டிகள் பூந்தளிர் நடத்தப்பட்டன.

அயல்நாட்டுப் படைப்புகள்

'எட்டுத் திக்கும் உள்ள இலக்கியங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்போம்' என்ற பாரதியின் கூற்றை தமிழ் சிறுவர் இலக்கிய உலகில் மெய்யாக்கியவர் வாண்டுமாமா. நமது நாட்டை போலவே கிரேக்கமும் எண்ணற்ற புராணக்கதைகளை கொண்டது. பூந்தளிரின் முதல் 21 இதழ்களில் தொடராக வெளிவந்த கிரேக்க புராணக் கதைகளின் மொழிப்பெயர்பும், வரையப்ட்ட சித்திரங்களும் படிப்பவரை மெய்மறக்கசெய்யும். இத்தொடருக்கு வரையப்பட்ட சித்திரங்கள் ஓவியர் செல்லத்தின் பாணியை ஒத்திருப்பதை காண்க.

Serial - Greek's Story

வாசகர் கடிதங்கள்

ஆரம்பக் கால இதழ்களில் வாசகர் கடிதங்கள் இடம் பெற்றாலும் பின்பு அவை மறக்கப்பட்டன. எழுத்தாளர் பூவண்ணன், அரவக்குறிச்சிப்பட்டி எம்.அசோக்ராஜா, திருச்சி ராஜி ராதா போன்ற வெகுஜன பத்திரிக்கைகளிலும் எழுதிப் புகழ்பெற்றவர்கள் கூட பூந்தளிரில் வாசகர் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

Reader's Voice - Story Artist

கேரள மாநில நாட்டுப் புறக்கதைகள்

டிங்கிளின் ஆங்கிலப்பதிப்பில் இருந்து எப்படி காமிக்ஸ் ஸ்டிரிப்புகள் பெறப்பட்டதோ அதே வழியில் பூந்தளிரின் அண்ணனான பூம்பட்டாவிடம் இருந்து மலையாள நாட்டுப்புறக்கதைகள் பெறப்பட்டு பூந்தளிரில் வெளியிடப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையான கதைகளுக்கு சந்திரா என்பவர் ஓவியங்களை வரைந்திருப்பார்.

எளிய வழியில் ஆத்திசூடி, நன்னெறி

சிறுவயதில் பள்ளியில் ஔவையின் ஆத்திசூடி, நன்னெறி பாடல்களை வாத்தியார் சொல்ல படித்திருக்கிறோம். ஆனாலும் அதில் ஒரு இயந்திரத் தனம் இருக்கும். பாடலை முதலில் சொல்லி விட்டு பிறகு கருத்தை சொல்வார்கள். கருத்து மனதில் ஒட்டாது. (பாடலும் ஒட்டாது என்பது வேறு விஷயம்).

Nalvali

ஆனால் பூந்தளிரில் வாண்டுமாமா கதை சொல்வது போல பாடலின் கருத்தை முதலில் தனது தேன் சொட்டும் வார்த்தைகளால் சொல்லி விட்டு பிறகு பாடலை சொல்வார். பாடலில் உள்ள கடின வார்த்தைக்கு எளிய பொருளையும் சொல்வார். அதிலும் குறிப்பாக ஓவியர் செல்லத்தின் சித்திரங்கள் வாண்டுமாவின் கருத்தை பசு மரத்து ஆணி போல மனதில் பதிக்கும்.

சிறுகதைகள்

தொடக்கக் கால பூந்தளிர் இதழ்களில் கேரள நாட்டு எழுத்தாளர்கள் படைத்த சிறுகதைகள் இதழுக்கு மூன்று நான்கு என்ற அளவில் வெளிவந்தன. மெல்ல மெல்ல தமிழ் நாட்டுக் கதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் பொதுக் கட்டுரைகள்

கதைகள் மட்டுமன்றி அறிவியல் உண்மைகள், உலக நடப்புகள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். இதனால் பூந்தளிரில் நிறைய அறிவியல் கட்டுரைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. பதினோராவது இதழில் இருந்து வெளிவந்த இந்த நாளில் அன்று நடந்து என்ற தொடர் வரலாற்று நிகழ்வுகளை உரிய புகைப்படங்களுடன் வெளியிட்டது. எனக்கு தெரிந்து மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட பூந்தளிர் பக்கங்கள் இவைகள்தான்.

Serial -  GK - Antha Naalil Intru

விளம்பரங்களை பற்றிய ஒரு கட்டுரையில் செல்லத்தின் சித்திரங்கள் கட்டுரையை படிக்காமலே கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதை விளக்கும் பாங்கை கீழே காணுங்கள்.

GK

ஓவியர்கள்

முதல் ஆண்டு முழுக்க பூந்தளிரில் ஆதிக்கம் செலுத்திய ஓவியர்கள் நமது செல்லம், உமாபதி, ராமு, சுதர்ஸன், விசு, உதய், பவித்ரா போன்றவர்கள். ஓவியர் கல்பனா ஆத்திச்சூடிக்கும், பாடல்களுக்கும் முதல் சில இதழ்களுக்கு மட்டுமே வரைந்திருப்பார் பின் அந்த பணியை செல்லம் தொடர்ந்தார்.

செல்லத்தை பொருத்தவரை முதலில் துணுக்குகள், சிரிப்புகளுக்கு மட்டுமே சித்திரங்களை வரைந்தார். பின்பு தொடர்கதைகள், சிறுகதைகள், பாடல்களுக்கு வரையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதழுக்கு இதழ் செல்லத்தின் கைவண்ணம் பூந்தளிரில் அதிகரித்துக்கொண்டே வந்தன.

ஓவியர் உமாபதி (அவரது பெயர் குறிந்து சற்றே சந்தேகம் உண்டு. ஏனெனில் அவரது கையெழுத்தை ஜமாபதி என்று கூட படிக்கலாம்). நீண்ட காலம் பூந்தளிர் படைப்புகளுக்கு உயிரூட்டிய இவர் தொடக்கக் காலத்தில் வந்த வாண்டுமாமாவின் புலிக்குகைத் தொடருக்கு சித்திரம் தீட்டினார்.

Serial - Story - Pulikkugai

ஓவியர் ராமு அக்காலக் கட்டத்தில் வெகுஜன இதழ்களில்(குறிப்பாக தினமணிக்கதிர்) புகழ்ப்பெற்று விளங்கினாலும் பூந்தளிரிலும் சிறுகதைகளுக்கும் பாடல்களுக்கும் சித்திரங்களை தீட்டித் தந்தார்.

எழுத்தாளர்கள்

கெளசிகன், மூர்த்தி ஆகிய பெயர்களிலும் தொடர்கள், மொழி மாற்றுக் கதைகள், அயல்நாட்டு இலக்கியங்கள், அறிவியல், வரலாற்றுக் கட்டுரைகள் போன்றவற்றை வாண்டுமாமா படைத்து வந்தார். இவருடன் பி.வி. கிரி, கே. இராதாகிருஷ்ணன், பாபநாசம் குறள் பித்தன், கே. விஸ்வநாதன், சிற்பி சோமு, வித்வான் வி. துரைசாமி, தமிழ்முடி, டாக்டர் என். ஸ்ரீதரன், திசை முத்து, பூவண்ணன், வண்ணை கணேசன், போன்ற எழுத்தளார்கள் கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

கவிஞர்கள்

இதழுக்கு இரண்டு சிறுவர் பாடல்கள் பூந்தளிரில் வெளிவந்தன. (நான் ஒரு பாடலை கூட படித்ததில்லை.) திருச்சி வாசுதேவன், தளவை இளங்குமரன், புலேந்திரன், வானம்பாடி, ஆர்.பி. சாரதி, தமிழ்முடி, இமயபாரதி, அழகனார், ரவி வர்மா, சித்திரப்பிரியா, அழகு பழனிச்சாமி, கா.பி. தங்கவேலன், குன்றக்குடியான் போன்ற கவிஞர்களின் படைப்புகள் பூந்தளிரில் தொடர்ந்து வெளிவந்தன.

புதிய முயற்சிகள்!

'அதிர்ஷ்டக் குழந்தைகள்' என்ற தலைப்பில் சிறந்த குழந்தைகளின் புகைப்படங்களை பரிசுகளுடன் (ரூ. 30, 20, 15) வெளியிடப்பட்டன. கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், ஓவியங்கள், விடுகதைகள் போன்ற சிறுவர்களின் படைப்புகள் 'உங்கள் பக்கம்' என்ற தலைப்பில் வெளியிட்டன. வாசகர்களின் அறிவு பூர்வமான கேள்விகளுக்கு 'நீங்கள் கேட்டவை' என்ற தலைப்பின் கீழ் பதில்கள் வெளியாயின. அவற்றில் சில கேள்விகள் மீண்டும் மீண்டும் அச்சேறியதையும் காணமுடிகிறது.

Interaction 00

பள்ளி மாணவர்களுக்கு சித்திரம் தீட்டும் போட்டிகள் பள்ளிகளில் நடத்தப்பெற்றன. தமிழத்தின் எல்லா பகுதிகளிலும் இப்போட்டி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தாலும் சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டது.

Interaction 01

ஆனால் மேற்கண்ட முயற்சிகள் ஒரு சில இதழ்களுடன் முடிந்து போனது ஏன் என்று புரியவில்லை.

நடப்புச் செய்திகள்

ஆரம்பகால பூந்தளிர் இதழ்களில் பள்ளிகளில் நடந்த விழாக்கள், சிறுவர் சிறுமியர்களின் சாதனைகள், விழாக்களைப் பற்றிய நடப்புச் செய்திகள் (Current News) வெளியிடப்பட்டன. இதுவும் காலப்போக்கில் குறைந்துக் கொண்டே வந்து விட்டன.

பரிசுகள்

தற்காலத்தில் புத்தகங்களுக்கு ஒட்டும் லேபிள்கள், டைம் டேபிள்கள் போன்றவை எளிதில் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் 80களில் வண்ண லேபிள்கள் என்பது பட்டிணத்தோடு தொடர்புடைய சில பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே கிட்டக்கூடியவை. அத்தகையை சூழ்நிலையில் பூந்தளிர் பரிசாக அளித்த லேபிள்கள் வாசகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இந்த அறிவிப்புக்கு இரண்டு முழுப் பக்கங்களை ஒதுக்கப்பட்டிருப்பதையும கவனிக்கவும்.

Gift01

காலத்திற்கு ஏற்றார் போல பூந்தளிர் தனது வாசகர்களுக்கு அளித்த மேலும் சில சுவாராஸ்மான பரிசுகள் கீழே.

Gift02

பெரியவர்களாலும் படிக்கப்பட்ட பூந்தளிர்!

பூந்தளிரை எனக்கு அறிமுகப்படுத்தியது எனது அப்பாதான். அப்பாவும் பெரியப்பாவும் பூந்தளிர் படிப்பார்கள். எனது அப்பா, சித்தப்பா, பெரியப்பா ஆகியோர் திருச்சிக்கு அடிக்கடி செல்வார்கள். அவர்கள் மூலமாக பூந்தளிரை 1986ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாங்கினேன். சில சமயங்களில் பக்கத்து ஊரான மண்ணச்சநல்லுருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது நானே பூந்தளிரை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். அந்த மகிழ்ச்சிக்கு இணை ஏது?

துரைராஜ் என்ற எனது ஆசிரியர் பள்ளிப்பருவத்தில் என்னுடன் பூந்தளிர் படிப்பார். அவருக்காகவே பூந்தளிரை பள்ளிக்கு எடுத்துச் செல்வேன். அறிவுப் புதிர் போட்டியில் என்னால் நிரப்ப இயலாதக் கட்டங்களை அவர்தான் நிரப்பித் தருவார். எல்லா கட்டங்களையும் நிரப்பி விட்டாலும் கூட சில சமயங்களில் மட்டுமே பூந்தளிருக்கு அவற்றை அனுப்பி வைப்பேன். ஒரு முறை கூட பரிசு வாங்கியதில்லை. ஆனாலும் இங்கு பெற்ற அறிவினால் இந்தியா டுடே, வாரமலர் இதழ்களில் தலா இரண்டு முறை பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

சுருங்க சொல்ல வேண்டுமானால் மாணவப் பருவத்தில் உள்ள சிறுவர்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை எளியை நடையில் சித்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அளித்தது. எனவே தான் பூந்தளிர் படிப்பதை பெரியவர்கள் ஊக்குவித்ததோடு அவர்கள் படிக்கவும் செய்தார்கள்.

சிரிப்பு மற்றும் செய்தித் துணுக்குகள்

பூந்தளிரில் இடம் நிரப்பிகளாக (Fillers) சுவராஷ்யமான செய்திகளும், சிரிப்புகளும் வெளியிடப்பட்டன. கீழேயுள்ள ஸ்கேனில் முதல் துணுக்கு உங்களுக்கு ஆர்வமூட்டும் என்று நினைக்கிறேன். சிரிப்புகளில் விசு, உதய் இவர்களின் ஓவியப் பாணி ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.

Fillers

மேலும் பொதுஅறிவை வளர்க்கும் செய்திகள் முழு பக்கத்திலும் வெளியிடப்பட்டன. செல்லத்தின் சித்திரங்கள் படிக்கும செய்திகளுக்கு மேலும் சுவையூட்டுவதாக அமைந்திருந்தன. பூனையிடம் இருந்து தப்பிக்கும் எலி என்ற வசனமற்ற காமிக்ஸ் பூந்தளிரின் ஒவ்வொரு இதழிலம் இடம்பெற்றன.

Do You Know01

தொடர்கள்

யானைகளை மையமாகக் கொண்ட கதைகள் மற்றும் யானைகளை பற்றிய துணுக்குகளுடன் வெளிவந்த 'யானைக்கதைகள்', கிரேக்கப் புராணக்தைகள் ஆகியத் தொடர்கள் வாண்டுமாமாவால் எழுதப்பட்டன. கே. இராதகிருஷ்ணன் 'வீரன் விஜயவர்மன்' என்ற தொடர்கதையை எழுதினார். பூந்தளிரின் 13ம் இதழில் இருந்து வெளியான வாண்டுமாமாவின் 'புலிக்குகை' ஒரு புகழ்ப்பெற்ற தொடர்கதையாகும்.

Serial - Story - Yaanai Kahtai

விளம்பரங்கள்

முதலாண்டுப் பூந்தளிரில் முழுக்க முழுக்க பைகோ நிறுவனத்தின் விளம்பரங்கள் மட்டுமே வெளியாயின. ஒரே ஒரு முறை சந்தனுவின் ஓவியப்பயிற்சி பற்றிய விளம்பரம் வெளியானது. மகாபாரதக் கதையை 60 இதழ்களாக பூந்தளிர் அமர் சித்திரக் கதை வெளியிட்டது. அதனை பற்றிய இரண்டுப்பக்க விளம்பரம் உங்களின் பார்வைக்கு.

Maha

சென்னையில் பைகோ பொம்மை உலகம் என்ற நிறுவனத்தையும் பைகோ நிறுவனம் நடத்தியது. இதைப் பற்றிய விளம்பரங்களும் பூந்தளிரில் வெளிவந்தன. மேற்படி நிறுவனத்திற்கு சென்று பொம்மைகள் வாங்கிய பாக்கியவான்கள் யாரேனும் நமது வட்டத்தில் உண்டா என தெரியவில்லை?

In House -Advt 03

பின் அட்டையில் பூந்தளிர் மற்றும் பூந்தளிர் அமர்சித்திரக்கதைகளின் விளம்பரங்கள் மிகவும் அட்டகாசமாக இருக்கும். செல்லத்தின் கைவண்ணத்தை கீழே காணுங்கள்.

In House Advt 01

In House Advt 02

மொழிப்பெயர்ப்பு

வாண்டுமாமாவின் மொழிப்பெயர்ப்பு வெகு இயல்பாக உறுத்தாத வகையில் இருக்கும். விஜயன், வாண்டுமாமா இவர்களின் திறமையை இந்திரஜால் காமிக்ஸ்களின் தமிழ் பதிப்பை படித்து ஒப்பிட்டால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

வெகுஜன இதழ்களின் பாதிப்பு

துக்ளக், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் கற்பனைச் செய்திகளை தினசரி வடிவில் வெளியிட்டு (பெரும் பாலும் நடப்பு செய்திகளை கலாய்க்கும் பாணி) வாசகர்களை மகிழ்விக்கும். பூந்தளிரும் ஒருமுறை மகாபாரத நிகழ்வுகளை செய்தித்தாள் வடிவில் வெளியிட்டு அசத்தியது.

Maha01 Maha02

புதிர்கள், விளையாட்டுகள்

அக்காலக் கட்டதில் பிரபலமாக இருந்த வித்யாசங்களை கண்டறிதல், புள்ளிகளை இணைத்து உருவங்களை உருவாக்குதல், வழிக் கண்டுபிடித்தல் போன்றவற்றுடன் டிங்கிளில் வெளிவந்த TINKLE TRICKS & TREATS என்ற பகுதி 'பூந்தளிர் புதிர்கள்' என்ற பெயரில் வெளிவந்தன. வாண்டுமாமா அவற்றை எப்படி எடிட் செய்துள்ளார் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

Poontali Puthir - Tinkle

Poontali Puthir

பள்ளிப் பருவத்தில் காகிதங்களில் உருவங்கள் செய்வது, எளிய மேஜிக் செய்வது, விளையாட்டுப்பொருட்கள் செய்வது போன்றவை மற்றவர்களிடம் இருந்து நம்மை உயர்த்தி வைக்க பயன்பட்டன. எங்கள் பள்ளியில் நான் மட்டுமே பூந்தளிர் வாசகன். பூந்தளிரில் வெளிவந்த எத்தனையோ விஷயங்கள் என்னை மற்றவர்களை விட ஒரு படி உயர்த்தியே வைத்திருந்தன.

Vilaiyaattu

பூந்தளிரின் போற்றத்தக்க 'லெட்டரிங்'

தொடக்கால பூந்தளிரில் வெளியான காமிக்ஸ் கதைகளில் வசனங்கள் கைகளால் எழுதப்பட்டன. இரண்டு திறமைமிக்க எழுத்தோவியர்கள் (Lettering Artists) பூந்தளிரில் பணிப்புரிந்து இருக்க வேண்டும். நான் அறிந்தவரையில் இவ்வளவு அழகான, சீரான எழுத்துத்திறனை தமிழில் எங்கேயும் கண்டதில்லை. மிகவும் போற்றத் தக்கவகையில் லெட்டரிங் பணியை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்பது சற்றே வருத்தற்குரிய செய்திதான்.

Lettering

முதல் வருடத்தின் சிறந்த காமிக்ஸ் கதை!

முதல் வருடத்தில் எத்தனையோ காமிக்ஸ் கதைகள் பூந்தளிரில் வெளிவந்திருந்தாலும் கதை, ஓவியத் தரம், கதை போதிக்கும் நீதி என எல்லாவற்றிலும் என்னை கவர்ந்தது 'புண்ணிகோடி' என்ற கர்நாடக நாட்டுபுறக் கதைதான். இதனை கதையாக்கம் செய்தவர் சுப்பா ராவ் (Subba Rao), சித்திரம் தீட்டியவர் சந்திரநாத் (K. Chandranath). உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் தாய், கன்று, புலி ஆகிய பாத்திரங்களின் கண்களை காணுங்கள்.

BestStory01

BestStory02

BestStory03

எப்படி? எப்படி?

பூனைக்கு எலி பகையானது எப்படி? நாய் மனிதனுக்கு நண்பனாது எப்படி? குதிரை மனிதனுக்கு அடிமையானது எப்படி? வானில் மனிதக்கூட்ட வடிவ நட்சத்திரங்கள் தோன்றியது எப்படி? என இயற்கை நிகழ்வுகளுக்கு கற்பிதம் செய்து கதை சொல்வதும், கேட்பதும் எல்லோருக்கும் பிடித்தவை. இது போன்ற நிறைய கதைகள் காமிக்ஸ் வடிவிலும், எழுத்துக் கதைகளாகவும் பூந்தளிரில் வெளிவந்துள்ளன. ஒத்த கதையம்சம் கொண்ட இரு கதைகளை இரண்டு வடிவங்களில் கீழே காணுங்கள்.

Story - Comic 01

Story - Comic 02

Story - Comic 03

Story - Comic 04

இன்னும் பல செய்திகள்...

  • மேலே நீங்கள் படித்த விமர்சனம் பூந்தளிர் முதலாண்டு இதழ்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

  • ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக வெளிவந்த பூந்தளிர் ஆறாம் ஆண்டில் 3 இதழ்களுடன் நின்று போனது. இதற்கு தொழிலாளர்கள் பிரச்சினைதான் காரணம் என்று அப்போது கூறப் பட்டது.

  • சில ஆண்டுகளுக்கு பின்னர் பார்வதி பதிப்பகத்தால் வாண்டுமாமாவை ஆசிரியராக கொண்டு பூந்தளிர் மீண்டும் வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர் அதுவும் நின்று போனது சோகத்தின் உச்சம்!

  • பூந்தளிர் போலவே பூம்பட்டா இதழும் தற்போது வெளிவரவில்லை.

மேலும் அறிந்து கொள்ள...

1. காமிக்காலஜி 2. The Hindu 3. The Hindu - Madurai

58 கருத்துகள்:

  1. திரு.அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    வணக்கம். பயங்கரவாதி டாக்டர் செவனின் பிறந்த நாள் சிறப்பு பதிவில் முதன்மை கருத்துக்களை பதிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

    பூந்தளிரின் முதல் வருடத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்தது உங்கள் பதிவு. நீங்கள் குறிப்பிடும் இந்த முதல் வருட இதழ்களில் பல புத்தகங்கள் என்னிடம் இல்லை என்பது வருத்தத்தை அளித்தாலும், விரைவில் அவற்றை பிடித்து விடுவேன்.

    திகட்ட, திகட்ட தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் எடிட் செய்ய இயலாத தகவல்களே. அதுவும், நீங்கள் தந்த ஸ்கான் பக்கங்களும் அருமை.

    சில பக்கங்கள் மறக்க இயலாதவை. குறிப்பாக அந்த விளம்பரங்கள் குறித்தான பகுதியும், ஓவியர் செல்லத்தின் கை வண்ணத்தில் பூந்தளிர் இதழின் பின் அட்டை விளம்பரமும். தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு இந்த பாணி விளம்பரம் நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன்: முத்து காமிக்ஸ் வாரமலர் விளம்பரமும் இதனைப் போலவே அமைந்து இருக்கும்.

    அற்புதமான இந்த பதிவிற்கு பாராட்டுக்கள். வாசகர்கள் இந்த பதிவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் : ஆண்டு இறுதியில் தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் வழங்கப் படும் விருதுகளில் இது இடம் பெற்று இருக்கும் என்பதில் அய்யமும் உண்டோ?

    Happy birth Day Doctor.

    பதிலளிநீக்கு
  2. திரு.அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    //வெகுஜன இதழ்களின் பாதிப்பு-துக்ளக், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் கற்பனைச் செய்திகளை தினசரி வடிவில் வெளியிட்டு (பெரும் பாலும் நடப்பு செய்திகளை கலாய்க்கும் பாணி) வாசகர்களை மகிழ்விக்கும். பூந்தளிரும் ஒருமுறை மகாபாரத நிகழ்வுகளை செய்தித்தாள் வடிவில் வெளியிட்டு அசத்தியது//

    சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆனது. இந்த யுத்தி வாண்டு மாமா அவர்களின் கை வண்ணமே. இதனைப் போல பல சிறப்பு அம்சங்களை புகுத்தியதால் தான் சிறுவர் இலக்கியவாதிகளில் அவர் முதன்மையானவராக போற்றப் படுகிறார். பிற்கால இதழ்களில் அவரே பல பெயர்களில் எழுதியதை யாரால் மறக்க இயலும்? ஒரு குறிப்பிட்ட காலத்தில் பூந்தளிர் இதழ் முழுவதுமே இரண்டே இரண்டு நபர்களால் மட்டுமே இயங்கியது (வாண்டுமாமா, செல்லம்).

    பின் குறிப்பு: நேற்று இரவுதான் நானும் என்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி உள்ளேன். அதனால் என்னுடய பதிவு இன்று இரவுதான் வலையேறும். எதிர் பாராத இந்த பயணத்தினால் பல பதிவுகள் தடைபட்டு விட்டன.

    பதிலளிநீக்கு
  3. தோழர் அ.வெ அவர்களே,

    உங்களுக்கு வந்த குருன்ச்செய்தியைப் போலவே இந்த பதிவைப் பற்றியும் எனக்கு ஒரு தகவல் வந்தது - இன்று காலையில். இங்கு வந்து பார்த்தால், காலைப் பொழுதில் இனியதொரு மகிழ்ச்சி. இந்த பதிவைப் பற்றி நான் இனிமேலும் கூற எதுவுமே இல்லை.

    வெகு விரைவில் நீங்கள் ரத்தன பாலா பற்றியும் (குறிப்பாக விண்வெளி அண்ணல்) அதன் சார்பில் வெளிவந்த வண்ண காமிக்ஸ் இதழ் ரத்னா காமிக்ஸ் பற்றியும் பதிவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த ரங் ரேகா தான் இந்தியாவின் முதல் காமிக்ஸ் சிண்டிகேட் ஆகும். இவர்களுடன் திரு முல்லை தங்கராசன் அவர்கள் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படிதான் கபீஷ், வாயு வேக வாசு, புத்தக பிரியன் பிரபு, மற்றும் பல முத்து மினி காமிக்ஸ் கதைகள் வந்தன. இவை அனைத்தும் நடந்தது எழுபதுகளில் என்பதும் குறிப்பிட தக்கது.இப்போது நீங்கள் தகவல்களை வெளியிட்டு விட்டதால் மற்றவர்களின் பணி சுலபமாகி விட்டது.

    நீங்கள் வைரஸ் எக்ஸ் புத்தகத்தில் வந்த முதல் கபீஷ் கதையை வெளியிடுவீர்கள் என்று நினைத்தேன். இந்த கதையில் தான் கபீஷ் ராம பக்தர் அனுமாரிடம் தவம் செய்து தன்னுடைய வாலை அனுமாரைப் போலவே நீளும் தன்மை கொண்டதாக மாற்றிக் கொள்ளும் வரத்தை பெற்றது.

    பதிலளிநீக்கு
  5. //பூந்தளிரின் போற்றத்தக்க 'லெட்டரிங்'// நீங்கள் இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவே இட வேண்டும்.

    பத்திரிக்கை உலகில் இவர்களை போல 'லெட்டரிங்' செய்தவர்கள் வெகு குறைவே என்பது என்னுடைய கருத்து.

    பதிலளிநீக்கு
  6. அய்யம் வெங்கி அவர்களே, ஒரு வழியாக ஒப்பற்ற சிறுவர் மாத இதழான பூந்தளிரை பற்றி இணையத்திலும் முதன்மையாக தகவல் பதிந்தமைக்கு நன்றி. பக்க்த்திற்கு பக்கம் வண்ண கலவை, காமிக்ஸ் கதைகள், அருமையான மொழிபெயர்ப்பு, கதைகள், போட்டிகள் என்று தாங்கி வந்த இதழ்கள் இன்றும் நியாபகத்திலும், சேகரிப்பிலும் இருந்து மனதை நிறைத்து கொண்டிருக்கிறது. இப்படி பட்ட மாத இதழ்கள் இக்கால குழந்தைகளுக்கு வாய்க்கவில்லையே என்பது என்னுடைய ஒரே ஆதங்கம்.

    உங்களிடம் தொலைபேசியில் அளவாடிய நாளிலுருந்தே, இந்த பதிவை எதிர்பார்த்திருந்தேன். பூந்தளிர் பற்றி ஒரு பதிவை நானும் காமிக்கியலில் ஆங்கிலத்தில் இட எண்ணி இருந்தாலும், அதன் முதல் வருடத்தில் வெளியான புத்தகங்கள் முழுவதும் கைவசம் இல்லையென்பதால், விவரங்களை தேடி ஒரு முழுமையான பதிப்பை வெளியிட முடியாமல் இருந்தது. இப்போது உங்கள் தயவில் அந்த பதிவு பூர்த்தியாகி விடும். சில காலம் கழித்து வெளியிட எண்ணி உள்ள அந்த பதிவிற்கு, உங்களுடைய இந்த பதிவில் இருந்து சில சாராம்சங்கள் எடுக்க இப்போழுதே முன்னுரிமை வாங்கி கொள்கிறேன். :)

    சிறப்பான பதிவு, காமிக்ஸ் பேராசிரியர் வெங்கிக்கே உரிய நடையில். பதிவிற்கு நன்றிகள் நண்பரே.

    ÇómícólógÝ

    பதிலளிநீக்கு
  7. அய்யம் வெங்கி அவர்களே, அடுத்தாக ரத்னபாலா பற்றியும் ஒரு பதிவை விரைவில் இடுங்கள். பூந்தளிர் தரத்திற்கு இல்லையென்றாலும் வழவழப்பான அந்த அட்டை மற்றும் வித்தியாசமான சித்திரக்கதைகள் இன்றும் நியாபகத்தில் தங்கும் ஒரு விடயம்.

    அடுத்தது, பாலமித்ரா.... இனி வாசகர்களுக்கு பழைய நினைவுகளை அள்ளி தெளிக்கும் பொற்காலம் தான் உங்கள் வலையகம்.

    பதிலளிநீக்கு
  8. தோழர்,

    காமிக்ஸ் பதிவர்களில் நீங்கள் ஒரு ஊற்று போல. நீங்களே பிறப்பிடம் உங்களின் பதிவுகளுக்கு. அதுவுமில்லாமல் உங்கள் பதிவுகளை படித்தவுடன் ஒரு உற்சாகம் பீறிட்டு கிளம்புகிறது என்னுள்.

    இந்த பதிவினில் எதனையும் குறிப்பிட்டு கூறுவதானால் பதிவு முழுவதையுமே கூற வேண்டி இருப்பதால், அந்த முயற்சியை தவிர்க்கிறேன்.

    தொடர்ந்து இதனைப் போன்றே பதிவிட்டு எங்களை மகிழ்வியுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஒரே பதிவில் இரண்டு மூன்று கம்மேன்ட்டுகளை இடுவது இப்போது வழமையாகி விட்டதால் இதோ, இரண்டாவது கமெண்ட்: அடுத்த பதிவு எப்போது? மற்றவர்களைப் போல நீங்களும் அதனை சைட் பாரில் இடலாமே?

    பதிலளிநீக்கு
  10. பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    உலகத் தரம் வாய்ந்ததொரு ஆராய்ச்சிக் கட்டுரையை என்னுடைய பிறந்த நாள் பரிசாக தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அளித்தமைக்கு நன்றிகள்!

    உங்கள் பதிவை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ரசித்துப் படித்து மகிழ்ந்து கொண்டிருந்த காரணத்தாலேயே பின்னூட்டமிட இவ்வளவு தாமதம்! அதுவுமின்றி பிறந்த நாள் கொண்டா(களியா)ட்டங்களில் ஈடுபட்டிருந்ததால் மீண்டு வரத் தாமதமாகிவிட்டது! மன்னிக்கவும்!

    பூந்தளிரின் முதல் வருடத்தை இதை விட சிறப்பாக யாராலும் தொகுத்து வழங்கிட இயலுமா என்பது சந்தேகமே! இது போன்ற அரிய களஞ்சியங்களை விரைவில் புத்தக வடிவிலும் காணப்போகிறோம் என்பதை நினைத்தாலே மனம் மீண்டும் கள்ளுண்ட குரங்கு போல ஆவல் கொள்கிறது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    பதிலளிநீக்கு
  11. //இது போன்ற அரிய களஞ்சியங்களை விரைவில் புத்தக வடிவிலும் காணப்போகிறோம் என்பதை நினைத்தாலே மனம் மீண்டும் கள்ளுண்ட குரங்கு போல ஆவல் கொள்கிறது!//

    தலைவரே,

    உங்கள் விருப்பம் அடுத்த ஆண்டுதான் நிறைவேறும் போல தெரிகிறது. நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவற்றை சரி செய்தாயிற்று. இருந்தாலும் பூர்வாங்க முயற்சிகளை முடித்து விட்டு புத்தக வடிவில் கொணர சிறிது கால அவகாசம் தேவைப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  12. //இது போன்ற அரிய களஞ்சியங்களை விரைவில் புத்தக வடிவிலும் காணப்போகிறோம் என்பதை நினைத்தாலே மனம் மீண்டும் கள்ளுண்ட குரங்கு போல ஆவல் கொள்கிறது!//

    வாவ்,

    இட்ஸ் அமேசிங்

    இட்ஸ் எ மெடிகல் மிராக்கில்.

    பதிலளிநீக்கு
  13. //ஏன் A-Z கூட தெரியும்.// அப்ப உங்களுக்கு கேபிடல் A-Z மட்டும்தான் தெரியுமா? ஸ்மால் a-z தெரியாதா?

    ஜுடோ ஜோஸ்.
    Judo Josh can strangle you with a cordless phone.

    பதிலளிநீக்கு
  14. அன்புடையீர்,

    கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா2 மே, 2012 அன்று PM 5:03

      dear sir,
      we were the readers of poontalir. Really i am very glad when i read your useful And precious information about poontalir.How one will feel, if she gets the information about the lost friend, like that only we got the experience today.Thanks a lot for your stuff to visualize the image of our dear and unforgottable friend poon...

      நீக்கு
  15. அய்யம்பாளையம் வெங்கி சார்,

    இந்த பதிவை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அற்புதம்.

    குறிப்பாக அந்த மகாபாரத பத்திரிக்கையை படித்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன்.


    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    பதிலளிநீக்கு
  16. வெங்கி சார்,

    நீங்கள் உங்கள் பதிவுத் தொடரில் பூந்தளிர் அமர் சித்திரக் கதையையும், பைகோவின் மற்றுமொரு வெளியிடான பைகோ கிளாசிக்ஸ் பற்றியும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    பதிலளிநீக்கு
  17. வெங்கி சார்,

    உங்கள் பதிவிலேயே இது தான் டாப் என்று கூற நினைத்தால் அடுத்த பதிவில் நீங்கள் இதனை விட சிறப்பாக செய்து எங்களை அசத்துவதே உங்களின் பாணியாக அமைந்து விட்டது.

    தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    பதிலளிநீக்கு
  18. பூந்தளிர் மற்றும் ஆங்கில டிங்கிள் இதழ்களுக்கு முன்னோடி இங்கிலாந்தில் வந்த லுக் அண்ட் லேர்ன் பத்திரிகை ஆகும்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    பதிலளிநீக்கு
  19. மதிப்பிற்குரிய நண்பர் அ.வெ. அவர்கட்கு,

    முழுமையான, தரமான பதிவு. ஒர் இதழின் சகல அம்சங்களையும் சிறப்பாக உங்கள் பதிவில் உயிர்க்க வைத்து விட்டீர்கள்.உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் உன்னதமான பதிவுகளை.

    பதிலளிநீக்கு
  20. sir,

    hope u dont mind me posting the download links here:

    suppandi digest in english: http://www.mediafire.com/?ejkjd1lmqbi

    துப்பறியும் ரஞ்சன் = http://www.mediafire.com/?dm52kwvyyz2

    பதிலளிநீக்கு
  21. []கிங் விஸ்வா

    //ஒரு குறிப்பிட்ட காலத்தில் பூந்தளிர் இதழ் முழுவதுமே இரண்டே இரண்டு நபர்களால் மட்டுமே இயங்கியது (வாண்டுமாமா, செல்லம்)//

    உண்மை! வாண்டுமாமா + செல்லம் கூட்டணி தமிழ் சிறுவர் இலக்கிய உலகத்திற்கு அளித்த பங்களிப்பு மகாத்தானது; மறக்கவியலாதது!

    //ஆண்டு இறுதியில் தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் இது இடம் பெற்று இருக்கும் என்பதில் அய்யமும் உண்டோ?//

    தங்களின் நம்பிக்கைக்கும் பரிந்துரைக்கும் நன்றி!

    [] ஒலக காமிக்ஸ் ரசிகன்

    //வெகு விரைவில் நீங்கள் ரத்தன பாலா பற்றியும் (குறிப்பாக விண்வெளி அண்ணல்) அதன் சார்பில் வெளிவந்த வண்ண காமிக்ஸ் இதழ் ரத்னா
    காமிக்ஸ் பற்றியும் பதிவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.//

    முயற்சிக்கிறேன் நண்பரே! முயன்றால் முடியாததும் உண்டோ!

    //நீங்கள் வைரஸ் எக்ஸ் புத்தகத்தில் வந்த முதல் கபீஷ் கதையை வெளியிடுவீர்கள் என்று நினைத்தேன்.//

    கபீஷ் குறித்து தனிப் பதிவு ஒன்று எழுதும் எண்ணம் உண்டு. அப்போது உங்களது அபிலாஷை நிறைவேற்றப்படும். தகவலுக்கு நன்றி!

    //பூந்தளிரின் போற்றத்தக்க 'லெட்டரிங்'// நீங்கள் இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவே இட வேண்டும். //

    நான்தான் என்றில்லை. நம்மில் ஒருவர் தமிழ் லெட்டரிங் ஆர்டிஸ்டுகள் குறித்து ஆராயலாம்.

    [] ரஃபீக் ராஜா

    //இப்படிபட்ட மாத இதழ்கள் இக்கால குழந்தைகளுக்கு வாய்க்கவில்லையே என்பது என்னுடைய ஒரே ஆதங்கம்.//
    பத்திரிக்கைத் துறையில் தற்காலத்தில் வசதிகள் நிறைந்துள்ளன. அர்ப்பணிப்புள்ள பத்திரிக்கை முதலாளிகளுக்குதான் பஞ்சம்! என்ன செய்வது? நாம் கொடுத்து வைத்தவர்கள்!

    //உங்களுடைய இந்த பதிவில் இருந்து சில சாராம்சங்கள் எடுக்க இப்போழுதே முன்னுரிமை வாங்கி கொள்கிறேன்.//

    இது உங்கள் சொத்து! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

    []காமிக்ஸ் ப்ரியன்

    // உங்கள் பதிவுகளை படித்தவுடன் ஒரு உற்சாகம் பீறிட்டு கிளம்புகிறது என்னுள்.//

    விஷயம் என்னில் இல்லை. நான் எடுத்துக்கொண்ட பொருளில்தான் உள்ளது! உங்களுக்கு உற்சாகம் வழங்கிய வார்த்தை - பூந்தளிர்!

    //அடுத்த பதிவு எப்போது? மற்றவர்களைப் போல நீங்களும் அதனை சைட் பாரில் இடலாமே?//

    ம்ம்..ஹும்! சாத்தியமில்லை நண்பரே! முந்தையப் பதிவுகளில் நான் கொடுத்த சில உறுதிமொழிகளை இன்னும் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லையே!

    [] பயங்கரவாதி டாக்டர் செவன்

    //உலகத் தரம் வாய்ந்ததொரு ஆராய்ச்சிக் கட்டுரையை என்னுடைய பிறந்த நாள் பரிசாக தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அளித்தமைக்கு நன்றிகள்!//

    தலைவரோட பிறந்த நாளுக்கு இதுகூட செய்யாவிட்டால் எப்படி?

    [] ஜுடோ ஜோஸ்

    //அப்ப உங்களுக்கு கேபிடல் A-Z மட்டும்தான் தெரியுமா? ஸ்மால் a-z தெரியாதா? //

    பாட்டெழுதி பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். பாட்டில் குறை கண்டுபிடித்து பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்!

    [] பூங்காவனம்

    //கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது//

    எனது வலைப்பூவில் விளம்பரங்கள் இல்லை என்ற குறையை தீர்த்து வைத்த புண்ணியவதி நீங்கள்!

    [] புலா சுலாகி

    //அந்த மகாபாரத பத்திரிக்கையை படித்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன்//

    வாண்டுமாமாவின் அற்புதமான முயற்சி அது! நன்றி!

    //பதிவுத் தொடரில் பூந்தளிர் அமர் சித்திரக் கதையையும், பைகோவின் மற்றுமொரு வெளியிடான பைகோ கிளாசிக்ஸ் பற்றியும் சேர்த்துக் கொள்ளுங்கள்//

    நிச்சயமாக அப்படியொரு எண்ணம் உண்டு நண்பரே!

    [] ஷங்கர் விஸ்வலிங்கம்

    //உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் உன்னதமான பதிவுகளை//
    நன்றி! நண்பரே நன்றி! காமிக்ஸ் நண்பர்களின் உற்சாக வார்த்தைகள்தான் நம்மை போன்ற பதிவர்களை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகின்றன!

    [] ரவீந்தர்
    கரும்பு சாப்பிட கூலி கேட்பார்களா என்ன? இணைப்புகளுக்கு நன்றி நண்பரே! இணைப்புகளை பதிவின் இறுதியில் அளித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  22. the best comics post till date on tamil comics with complete details.

    hats off to you.

    continue your great work.

    பதிலளிநீக்கு
  23. Moonless Night
    //why my comments are not appearing here?//

    Sorry for the inconvenience. I changed the setting wrongly. Now it's ok!

    பதிலளிநீக்கு
  24. Hello Venkateswaran,

    Great work. I am also missing the Poontalir, Rani Comincs & Lion Comics of the 80s. Lucky that I happened to view this blog.

    Great effort behind this post. It shows the love you have for Poontalir. It is very sad Poontalir was abandoned and this generation is not lucky to have books of that value.

    Thanks for the post.
    Sudhakar.

    பதிலளிநீக்கு
  25. மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள். குழந்தைகளுக்கான பத்திரிகைகளில் கிட்டத்தட்ட ருஷ்ய மிஷாவுக்கு நிகராகப் பூந்தளிரைச் சொல்லலாம். குழந்தைகளுக்கான தமிழ்ப் பத்திரிகைகளில் பூந்தளிர் அளவுக்குக் கவர்ச்சிகரமானது வேறெதுவும் இருந்ததாக நினைவில்லை. பூந்தளிர் வரத் தொடங்கியதும் கோகுலத்தைக் கழற்றி விட்டது நினைவிருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  26. Hi,
    its really nice article (post). it kindles my childhood memories. i am blessed with parents who encourages reading. they brought me this (poontalir). Thank you verymuch.

    பதிலளிநீக்கு
  27. யார் ஸார் நீங்க!!! அப்படியே என் 4ம் வ‌குப்பு நாட்க‌ளை க‌ண் முன்னாடி கொண்டு வ‌ந்த‌த‌ற்கு என் நெஞ்சார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.. இன்னும் அந்த‌ திகைப்பிலிருந்த்து என்னால் வெளியே வ‌ர‌வே முடிய‌வில்லை.. அத்தனை பூந்த‌ளிர் இத‌ழ்க‌ளும் ஒரு கால‌த்தில் ப‌த்திர‌ப் ப‌டுத்தி வைத்திருந்தேன்..பின்ன‌ர் தொலைத்தும் விட்டேன். மிக்க ந‌ன்றி சார்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் திரு. வெங்கடேஸ்வரன்,

    தங்கள் பணி மகத்தானது.சிறப்பான தொகுப்பு.
    அம்புலிமாமா இணையதளம் தற்போது முற்றிலும் மேம்படுத்தப்பட்டு, புத்தம் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முகவரி: www.ambulimama.com.
    1947ம் ஆண்டு முதல் இன்று வரை அனைத்து இதழ்களையும் சேர்த்துள்ளோம். இதழ் தொடங்கியதில் இருந்து வெளியான அத்தனை விளம்பரங்களும் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    அம்புலிமாமாவின் அதிகாரப்பூர்வ வலைப்பூ: www.ambulimamatamil.blogspot.com. உங்கள் கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  29. தோழர்!

    தொடர்ச்சியாக எழுதவும். அப்படியே நிறுத்திவிட்டால் எப்படி?

    உங்கள் ஆர்.டி.முருகன் தங்கையின் திருமணத்தில் சந்தித்த நினைவு அப்படியே இருக்கிறது. இப்போது கொஞ்சம் சதை போட்டுவிட்டீர்களா? :-)

    அன்புடன்
    லக்கி

    பதிலளிநீக்கு
  30. அம்புலிமாமா இதழ்களை தொகுத்து வலை தளத்தில் வழங்குவதை போன்று பூந்தளிர் மற்றும் பிற காமிக்ஸ் ( லயன், முத்து) ஆகியவற்றை தொகுத்து எதாவது வலை தளத்தில் உள்ளதா. இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  31. Hello..great and detailed article. Do you also have details about Pappa Manjari? I used to read that magazine when i was a child and am very interested in obtaining the old issues of the same. Any kind of help / suggestion / direction is greatly appreciated.

    Chitra

    பதிலளிநீக்கு
  32. எனது நீண்ட நாள் ஆசை மீண்டும் இந்த பூந்தளிர் தளிர்க்க வேண்டும் என்பது தான் 1985 ஆண்டுகளில் நான் படித்த இந்த புத்தகம் இப்போது எனது குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைபடுகிறேன் ஏனெனில் இப்போது உள்ள குழந்தைகள் புத்தகங்களை படிப்பதை ஏன் பார்ப்பதை கூட தவிர்க்கிறார்கள் அந்த அளவிற்கு தொலைகாட்சி பெட்டி அவர்களை கட்டி வைத்திருக்கிறது. 27 வயது நிரம்பிய நான் இது வரை எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமை ஆகாமல் இருக்க இது போன்ற புத்தகங்கள் தான் காரணம் அதை நான் தற்போதைய சிருவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  33. i had read poonthalir in my school days but it is very sad that today's children had no chance to read it

    பதிலளிநீக்கு
  34. hi sir,
    thanks a lot for bringing our old friend in front our eyes.

    பதிலளிநீக்கு
  35. venki sir,
    we realy missed the nice magazine like poontalir. we need as same as the book like poontalir for this generation. Is this possible to get the magazine like poontalir with the pictures?

    பதிலளிநீக்கு
  36. I need poontalir book in online link.Any one have that?

    பதிலளிநீக்கு
  37. arpudam. artcle puts me back in to my childhood days.

    பதிலளிநீக்கு
  38. poonthalir such a great magazine that I had been read in my school days wow!

    பதிலளிநீக்கு
  39. poonthalir such a great magazine that I had been read in my school days wow!

    பதிலளிநீக்கு
  40. Sir, today when we are discussing upon "palamuga mannan joe", I stumbled upon your blog on Punthalir and Vandumama...atleast I felt like getting a chance to speak to a friend I lost long ago.,..especially the "Murugan" ad on punthalir is still green in my memory. thanks much -A-

    பதிலளிநீக்கு
  41. engu indha puthagangal kidaikkum????? nan oru kalathil poontharir books ku adimai

    Magesh

    பதிலளிநீக்கு
  42. i need all the books from the date of publishing.how can i get it.i v.much love this book.

    பதிலளிநீக்கு
  43. Hi Sir, Where can I buy May 1987 1-15 book of Poontalir? I am keen to buy that book.

    பதிலளிநீக்கு
  44. /////இப்படிபட்ட மாத இதழ்கள் இக்கால குழந்தைகளுக்கு வாய்க்கவில்லையே என்பது என்னுடைய ஒரே ஆதங்கம்.//
    பத்திரிக்கைத் துறையில் தற்காலத்தில் வசதிகள் நிறைந்துள்ளன. அர்ப்பணிப்புள்ள பத்திரிக்கை முதலாளிகளுக்குதான் பஞ்சம்! என்ன செய்வது? நாம் கொடுத்து வைத்தவர்கள்!

    ஐயா... நான் மாணவர் குரல் என்று ஒரு கையெழுத்து இதழை (முதல் இரண்டு இதழ்கள் மட்டுமே கையெழுத்து. மற்றவை தட்டச்சு) இரண்டு ஆண்டுகள் நடத்தினேன். இதழ் அதிலும் சிறுவர்களுக்கு, மாணவர்களுக்கு நடத்தவேண்டும் என்ற தவிப்பு அடங்கவில்லை. கடந்த நான்கைந்து மாதங்களாகத் தீவிரத் தவிப்பில் உள்ளேன்.

    பூந்தளிர் என்ற பெயரில் நடத்தலாமா? அந்தப் பெயரைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் உண்டா?

    பதிலளிநீக்கு
  45. நன்று. பூந்தளிர் மறக்க முடியாத வாசிப்பு.

    பதிலளிநீக்கு
  46. 40 கடந்த என் வயதில் இந்தக் கட்டுரையே பாலமித்ராவையும்,பூந்தளிரையும் கையில் வைத்திருந்த காலத்திற்க்கு எடுத்துச் செல்கிறது.. எனது குழந்தைகளுக்கு கதை சொல்லியாகிறேன்..நன்றி

    பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!