செவ்வாய், 14 ஏப்ரல், 2009

தமிழ் காமிக்ஸ் முன்னோடிகள் - ஆர்.வி!


நீண்ட...... நெடுங்காலத்திற்கு பின் மீண்டும் சந்திக்கிறேன். இனி இந்த தொய்வு இருக்காது. இடைப்பட்ட காலத்திற்குள் நண்பர்கள் எவ்வளோவோ சாதித்துள்ளார்கள். நான் சற்றே பின் தங்கி விட்டேன். இருப்பினும் உங்களை தொட்டு விட முயற்சிக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அன்பு நண்பர் விஸ்வா-விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Writer R.V
தமிழ் காமிக்ஸ் படைப்புகளில் பெரும்பான்மையான படைப்புகள் பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டவையே! நமது லயன் குடும்ப வெளியீட்டாளர்களின் பங்கு குன்றில் இட்ட விளக்கு போல யாவரும் அறிந்ததே. இவர்களுக்கும் முன்னால் ஒரு சில படைப்பாளர்கள் தமிழ் கலாச்சார பின்னணி கொண்ட கதைகளை உள்ளூர் ஓவியர்களை கொண்டு காமிக்ஸ் வடிவில் படைத்துள்ளனர். அவர்களில் முதன்மையானவர் 'ஆர். வி.' என்று அழைக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன். ஆயிரம் பிறைகள் கண்ட ஆர். வி 20 நாவல்கள், 500 -க்கும் மேற்பட்ட சிறுகதைகளை படைத்துள்ளார். 1950-70 - களில் 'கண்ணன்' என்ற சிறுவர் இதழில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

Kannan 
குழந்தைகளுக்காக 25-க்கும் மேற்பட்ட நாவல்களையும் 15-க்கும் மேற்பட்ட காமிக்ஸ்-களையும் ஆர். வி. படைத்துள்ளார். சிறுவர் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர் ஆர். வி. கண்ணன் சிறுவர் இதழ் 1930-களில் தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய கலைமகள் குழுமத்தால் வெளியிடப்பட்டது. ஆர். வி. படைத்த 'இரு சகோதரர்கள்' என்ற சித்திரக்கதையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எண்பதுகளில் பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்களில் ஒரு சில பக்கங்களில் வந்த கதைகள் போன்றதுதான் இந்த கதை.

சித்தியால் கொடுமைப் படுத்தப்பட்ட இரு இளவரசர்கள் அரண்மனையை விட்டு வெளியேறுகிறார்கள். போகும் வழியில் ஒரு பாறை மேல் இளைப்பாறும்போது ஒரு பூதம் தோன்றி மூத்தவன் (குமார்) மன்னன் ஆவான் என்றும் இளையவன் (சுகுமார்) மந்திரி ஆவான் என்றும் கூறி மறைகிறது. வழியில் தம்பியை பிரியும் குமார் யானையால் ஒரு நாட்டின் மன்னனாக தேர்ந்தெடுக்கப் படுகிறான். தொலைந்து போன தம்பியை தேட முனைந்து அதில் தோல்வி காண்கிறான். இதற்கிடையே பாம்பால் தீண்டப்பட்டு மரணம் அடையும் சுகுமார் ஒரு மந்திரவாதியால் காப்பற்றப்பட்டு ஒரு கிழவியை சந்திக்கிறான். அரக்கனை கொன்றால் நாட்டில் பாதியும், தனது மகளையும் தருவதாக அந்த நாட்டின் மன்னன் அறிவித்து இருந்தான். கிழவியும் அந்த அரக்கனால் கஷ்டபடுவதை அறிந்து அரக்கனை கொல்கிறான். ஆனால் ஒரு ஏமாற்று பேர்வழி சுகுமாரை ஏமாற்றி அரசை அடைகிறான். சுகுமாரை கொல்லவும் முனைகிறான். தப்பிய சுகுமார் கப்பலில் நாடுகளை சுற்றுகிறான். திறமையான சிற்பியாகவும் மாறுகிறான். ஒரு நாள் ஒரு நாட்டின் மந்திரி தனது மகளுடன் கப்பலுக்கு வர அவளிடம் காதல் வயப்படுகிறான் சுகுமார். மந்திரி சுகுமாரை கொல்ல முனைய அவன் மன்னனிடம் நீதி கேட்க போகிறான். அப்போது மன்னன் தனது அண்ணன்தான் என்பதை அறிகிறான். மந்திரி தனது மந்திரி பதவியையும் மகளையும் சுகுமாருக்கு அளிக்கிறான். முன்பு ஏமாற்றியவனை வென்று அவனது ராஜ்யத்தை அண்ணனின் ராஜ்யத்துடன் இணைக்கும் சுகுமார் மன்னனின் மகளை அண்ணனுக்கு மணம் முடிக்கிறான். பிறகு என்ன? சுபம்தான்!
ஸ்ரீ என்பவர் சிறப்பாக சித்திரங்களை தீட்டியுள்ளார். இருபது பக்கங்களில் கருப்பு வெள்ளையில் வானதி பதிப்பகத்தால் இந்த காமிக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. 1973 -ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்த இந்த காமிக்ஸ் மிக நேர்த்தியாக பதிக்கபெற்றுள்ளது. சிறுவர் இலக்கியத்தில் வானதி நிறுவனம் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
001 002
003  004
005
006
007
008
009
010
011
நன்றி: ஆர்.வி., வானதி பதிப்பகம், ஸ்ரீ, தினமணி-சிறுவர்மணி, கிங் விஸ்வா மற்றும் இணைய நண்பர்கள்