ஞாயிறு, 16 நவம்பர், 2008

அம்புலிமாமாவின் முதல் இதழ்

'வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சு!', 'சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தன் போல..!', 'சரியான அம்புலிமாமா கதையாயிருக்கு!' போன்ற சொற்றொடர்கள் தமிழக வெகுஜனங்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. மேற்கண்ட சொற்றொடர்களின் பிரபலத்திற்கு காரணம் அம்புலிமாமா! கடந்த 61 வருடங்களாக தமிழக குழந்தைகளுக்கு தளராது சேவை செய்து வரும் சிறுவர் மாத இதழ்.

தமிழக குழந்தை இலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக அம்புலிமாமாவின் இந்த சாதனை முறியடிக்கப்படவேயில்லை. அதற்கான வாய்ப்புகளும் இனி இல்லை. ஏனெனில் அம்புலிமாமா தற்போது நவீனமயமாக்கபட்டுள்ளது. எழுத படிக்க தெரிந்த பெரும்பாலான தமிழர்களுக்கு அம்புலிமாமாவை படிக்கும் வாய்ப்பு ஒருமுறையேனும் கிட்டியிருக்கும்.

எங்கிருந்துதான் இவர்களுக்கு கதைகள் கிடைக்கின்றனவோ என்று வியக்கும் அளவுக்கு எண்ணிலடங்கா கதைகளை வெளியிட்டு கொண்டேயிருக்கிறார்கள்.
புராணம், பஞ்ச தந்திரம், நாட்டுப்புறக்கதைகள், அயல்நாட்டு கதைகள், பறவை, விலங்கு கதைகள், மாயாஜால கதைகள், இதிகாசங்கள் என அம்புலிமாமாவில் வெளிவராத கதைகளே இல்லை எனலாம்.

பெரும்பாலும் சிறுவர் பத்திரிகைகளில் ஒரு கதைக்கு ஒரு படம் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் அம்புலிமாமாவில் ஒரு பக்கத்திற்கு ஒரு படம் வீதம் அதுவும் வண்ணத்தில் வெளியிடுவார்கள். சித்திரங்களின் தரம் கண்ணில் ஒற்றிகொள்ளும் படி அற்புதமாக இருக்கும். எனது நினைவுகளின் படி சங்கர் என்பவரின் ஓவியங்கள் அம்புலிமாமாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இருக்கின்றன.

1947 - ஜூலை மாதம் முதல் அம்புலிமாமா வெளிவந்தது. சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். புதிய இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள், கட்டமைப்புகள் செய்யப்பட வேண்டும் போன்ற விவாதங்கள் சூடுபிடித்த நேரம் அது. ஒரு நாட்டின் வருங்கால தூண்கள் தற்கால குழந்தைகள்தான். அவர்களுடைய குழந்தைப் பருவம் குதூகலமாக, வண்ணமயமாக, வளமான கற்பனைகளுடன், எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன், தேசப்பற்றுடன் அமைய வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமே நாகி ரெட்டி, சக்கரபாணி ஆகிய நற்சிந்தனையாளர்களால் அம்புலிமாமா தொடங்கப்பட்டது.

அச்சுத்துறையின் வளர்ச்சிக்கு முன்னர் நிலவொளியில் சிறுவர்களுக்கு கதை சொல்லும் புராதான வழக்கமே இருந்தது. எனவே கதை சொல்லுதலை நிலவுக்கு தொடர்புப் படுத்தி அம்புலிமாமா (நிலவு) என்று பெயரிடிருக்கலாம் என்பது எனது எண்ணம். முதல் இதழின் சில பகுதிகளை பார்ப்போம்.அட்டை: 165 x 215 மில்லி மீட்டர் அளவு கொண்ட பல வண்ண அட்டை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், அந்த காலத்திலேயே அடிப்படை வண்ணங்களுடன் கூடுதலாக வெள்ளி (சில்வர்) வண்ணத்தில் அச்சிட்டு அட்டையை மெருகேற்றியுள்ளனர். இதனை ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.

விலை: ஆறு அணா. மொத்தப்பக்கங்கள்: 68 (அட்டைகள் நீங்கலாக). துரதிஷ்ட வசமாக என்னிடம் கடைசி அட்டையும், நான்கு பக்கங்களும் இல்லை.

முதல் புன்னகை என்ற தலைப்பில் ஓர் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. அவசியம் படித்து பாருங்கள். அசந்து போவீர்கள்! (இறுதி பகுதி இல்லை, மன்னிக்கவும்)
இதழ் முழுவதும் தெளிவான படங்கள் அழகுற அச்சிடப்பட்டுள்ளன. இதழை முழுக்க படித்தால் வெளியீட்டாளர்களின் உழைப்பை புரிந்து கொள்ளலாம். தற்போது வெளிவரும் சில சிறுவர் இதழ்களின் தரத்தை, சித்திரங்களின் தெளிவை முதல் அம்புலிமாமவுடன் ஒப்பிடவே முடியாது. 61 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி அசத்தியிருக்கிறார்கள்!அன்றைய சந்தா விவரங்கள். சுவராஸ்யமாக இருக்கிறது அல்லவா?சென்ற ஆண்டு அம்புலிமாமாவின் வைர விழா. 61 ஆண்டுகள் ஆனாலும் வடிவமைப்பில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. உள்ளடக்கமும், இதழ் அளவும் சற்றே மாறியுள்ளது. வைர விழா சிறப்பிதழில் வெளியான ஆசிரியர் உரைகளை படியுங்கள். நிறையவே ஆர்வம் கொள்வீர்கள்; அம்புலிமாமாவை வாங்க ஓடுவீர்கள்!


சென்ற வார தினத்தந்தியின் 'சிறுவர் தங்க மலரில்' அம்புலிமாமாவின் 61 ஆண்டுகால சாதனையை குறிப்பிட்டுயிருந்தார்கள். (நன்றி: மன்னர் விஸ்வா) அதனையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


உங்களுடைய ஆர்வத்தை பொறுத்து அம்புலிமாமாவின் முதல் இதழின் பிறப்பகுதிகளை இனி வரும் இடுகைகளில் காணலாம்.

எனது முந்தய இடுகைக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி! உங்களது பின்னூட்டத்திற்கு எனது பதில்களை இங்கே காணுங்கள்.

காமிக்ஸ் டாக்டரின் புதிய இடுகை ரொம்பவும் அசத்துகிறது! அவசியம் நீங்களும் ஒரு நடை போய் பார்த்துட்டு வாங்க!

மன்னர் விஷ்வா ஜேம்ஸ் பாண்டுடன் மர்ம கோட்டைக்கு போய் வந்திருக்கிறார். அவருடைய அனுபவங்களை இங்கே காணலாம்.

மீண்டும் சந்திப்போம்...

ஞாயிறு, 9 நவம்பர், 2008

காலத்தால் முந்தியது காமிக்ஸ் கலையே!

தமிழ் கூறும் நல்லுலகில் 'காமிக்ஸ்' என்றாலே அது சின்னப்பசங்க சமாச்சாரம் என்ற எண்ணம் ஆழ வேருன்றி உள்ளது. இங்கு மட்டுமல்ல உலகெங்கும் அப்படிதான் இருந்திருக்கிறது. காலப்போக்கில் அந்த தவறான எண்ணம் மேலைநாடுகளில் மாறி விட்டிருக்கிறது. இங்கு மட்டும் காமிக்ஸ் வாசிப்பு அங்கீகரிக்கப்படாமலேயே தொடர்கிறது.

உண்மையில் காமிக்ஸ் வடிவில் செய்தி சொல்வது என்பது நமது ஆதி முன்னோர்களிடம் இருந்தே பரிணமித்து வந்திருக்கிறது. குகைச்சுவர்களில் தங்கள் அனுபவத்தில் கண்ட நிகழ்வுகளை குறியீடுகளாக வரைய தொடங்கிய மனிதன் பின்னர் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சித்திரங்களாக வரைய தொடங்கினான். இதுவே காமிக்ஸ் வடிவத்தின் தொடக்கம் என்று கூறலாம்.

03IndianCaveArt

ஆதி குறியீடுகள் எழுத்துக்களாக, மொழிகளாக பரிணாமம் அடைந்தபின் சித்திரங்களின் தேவை சற்றே குறைந்தது. மன்னர்களின் காலத்தில் அவர்கள் தங்களது புகழை, கலாச்சாரத்தை, கடவுளர்களின் கதையை காலங்கள் கடந்தும் நிலைக்க செய்ய விரும்பினர். இப்பணிக்கு சித்திரங்களும் சிற்பங்களுமே பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

04Athi_Comics_02

நமது கோயில்களில் உள்ள சித்திரங்களும் சிற்பங்களும் எதோ ஒரு கதையை இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருகின்றன. சித்தன்ன வாசல் ஓவியங்களும் கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், கீழப்பழூர் போன்ற எண்ணற்ற கோயில்களில் உள்ள சிற்பங்களும் நமது முன்னோர்களின் தொடர்பியல் திறனுக்கு சான்று பகிர்கின்றன.

மகாபலிபுரத்தில் உள்ள மகிசாசுர மர்த்தினி அசுரனை வதம் செய்யும் காட்சி, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புராணக் காட்சிகளை '3D' காமிக்ஸ்களாக கீழே காணுங்கள்.

'படம் பார்த்து கதை சொல்வது' நமக்கொன்றும் புதிதல்ல. இருப்பினும் 'காமிக்ஸ்' என்பது தமிழக வெகுஜனத்தால் இன்னும் கண்டுகொள்ளவேபடவில்லை. வெகுஜன அங்கீகாரத்திற்காக காமிக்ஸ் பட்ட பாடுகளை காமிக்ஸ் ஆர்வலரும் புகழ்பெற்ற ஓவியருமான மருது அவர்கள் 'காமிக்ஸின் கதை' என்ற தலைப்பில் குமுதம் தீராநதியில் சொல்லியிருக்கிறார். படித்து பார்த்தீர்களானால் காமிக்ஸ் வாசகன் என்று சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்படத் தேவையில்லை என்பது நன்றாகவே புரியும். ஆம்! காலத்தால் முந்தியது காமிக்ஸ் கலையே!

நன்றி: ஓவியர் மருது, குமுதம் தீராநதி

சனி, 1 நவம்பர், 2008

வாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் சிற்பி!

நமது இல்லங்ளில் விழாக்கள் நடக்கும்போது கேமரா வைத்திருக்கும் நாம் போவோர் ருவோரையெல்லாம் போட்டோ எடுப்போம். நம்மை ஒரு போட்டோவில் கூ பதிய மறந்துவிடுவோம். அதுபோல உள்ளூர் கதைகள், உலக இலக்கியங்கள், புராங்கள், புதிர் கதைகள், அறிவியல் உண்மைகள், அறநெறிகள், வேடிக்கை விளையாட்டுகள், விந்தை செய்திகள் என எல்லாவற்றையும் நமக்கு அறிமுகம் செய்த வாண்டுமாமா தன்னை பற்றிய செய்திகளை ஏனோ நமக்கு தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் 'முற்போக்கு, பிற்போக்கு, விளிம்புநிலை, நவீனம், அது... இது...' என இருக்கிற இலக்கியத்தையும் கூறு போட்டு குழுக்கள்தான் உருவாகி கொண்டிருக்கின்றனவே தவிர குழந்தைகளுக்காக எழுதும் போக்கு சமீப ஆண்டுகளில் குறைந்துகொண்டே வருகிறது.

சிறுவர் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. இப்போக்கினால்தான் வாண்டுமாமா போன்றவர்கள் குடத்தில் இட்ட விளக்காகி போனார்கள்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமணியின் தமிழ் மணியில்? (அப்படித்தான் நினைக்கிறேன்) வாண்டுமாவை பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. நான் இதழியல் படித்தபோது தயாரித்த 'பாரதி' என்ற 'சிறுவர் இதழில்' அந்த கட்டுரையை 'சுட்டு' போட்டேன். உங்களுக்காக... சுட்டதை மீண்டும் சுட்டு இங்கே தந்துள்ளேன்.
வாண்டுமாமா விசிறிகள் அவரை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள் அன்புடன் அழைக்கிறேன். வரும் இடுகைகளில் வாண்டுமாவின் படைப்புகள், கதாபாத்திரங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த வலைப்பூவை சிறுவர் இலக்கியம் குறித்த செய்திகளுக்கு அர்ப்பணிக்க நினைக்கிறேன். காமிக்ஸ் பற்றிய செய்திகளையும் அவ்வபோது பூக்க செய்யலாம்.

நண்பர் விஷ்வாவின் குத்தல்களுக்கும், டாக்டர் சதீஷின் அவதூறுகளுக்கும் பதில் அளித்து விட்டேனா என வாசக பெருமக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்!

மீண்டும் சந்திப்போம் ..!

கொஞ்சம் சுய புராணம் ...

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கிராமத்தில்தான். எனது குழந்தை பருவத்தில் பள்ளி விட்டதும் அந்தி சாயும் வரை விளையாடுவோம். இருட்ட தொடங்கும் நேரத்திலேயே பெரும்பாலான வீடுகளில் சோறு ஆக்கி குழம்பு வைத்து விடுவார்கள். தெருவில் கிடக்கும் பட்டறை கல்லில் (சமதளமான கல்) சின்ன பசங்க எல்லோரும் சாப்பிடுவோம்.

அந்த நேரத்தில் தான் எங்கள் அப்பாயிகளும், அம்மாயிகளும் (பாட்டிகள்) எங்களுடைய தர்பாருக்கு வருவார்கள். பாவப்பட்ட நல்ல தங்காள் கதையிலிருந்து பழிவாங்கும் நல்ல பாம்பு கதை வரை சொல்லி கொண்டே இருப்பார்கள். மந்திரவாதி கதைகளும், கொல்லி வாய் பிசாசு கதைகளும் எங்களை ரொம்பவே மிரட்டியதுண்டு. சில கதைகள் ஒரே நாளில் முடியாமல் தொடர் கதைகள் ஆனதும் உண்டு.

பள்ளிக்கூடம் சென்று படிக்க கற்று கொண்டதும் கண்ணில் படும் காகிதங்களை எல்லாம் படிக்கும் ஓர் ஆர்வம் தோன்றியது. அப்படி படித்த ஒரு கதைதான் 'கபீஷ்' . கபீஷ் கதையில் இரண்டு பக்கங்கள் மட்டுமே எனக்கு கிடைத்தன. கதையின் முடிவு தெரியாமல் காகிதம் 'பொறுக்கும்' (டாக்டர் சதீஷ்! சந்தோசமா?) வேலையை என் கடமையாகவே கொண்டேன். இரண்டு வருடங்கள் கழித்து 1986-ல் அப்பா ஒரு பூந்தளிர் வாங்கி கொடுத்து எனது தீரா தாகத்தை தீர்த்து வைத்தார்.

பூந்தளிர் வாங்கியதும் நான் முதலில் படித்தது கபீஷ் தான். பூந்தளிரில் வாண்டுமாமா தன்னுடைய எல்லாவிதமான ஆற்றல்களையும் காட்டியிருப்பார். முதலில் அறிமுகமானதாலோ என்னவோ பூந்தளிரும் வாண்டுமாமாவும் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர். அதனால்தான் அவரை பற்றிய தகவல்களுக்கு முதலிடம் தருகிறேன்.

சுய புராணத்தில் நிறையவே மிச்சம் இருக்கிறது! நேரம் கிடைக்கும்போது (உங்களுக்குத்தான்..!) பேசலாம்...