ஞாயிறு, 28 டிசம்பர், 2008

கன்னித் தீவு - முடிவற்றக் கதையா?


'கன்னித் தீவு' என்ற வார்த்தைகள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டோர்கள் மட்டுமல்ல சராசரி தமிழ் வாசகர்கள் கூட அறிந்தவை. தினத்தந்தியில் 47 வருடங்களாக தொடர்ந்து வெளிவரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கன்னித் தீவு. இது 1961 -இல் வெளிவர தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. தற்போதைய கன்னித் தீவு '17,226' நாட்களை தாண்டியுள்ளது. 

தொடக்க காலத்தில் இரண்டாம் பக்க அடியில் வெளி வந்தது. பின்னர் இரண்டாம் பக்க மேற்பகுதியில் இன்றுவரை வெளியிடபடுகிறது. பாலன் என்ற ஓவியர் தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார்? 1961-இல் அவருக்கு வயது 20 என்றாலும் கூட தற்போது அவருக்கு 67 வயதாக இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. எனவே தற்போதுள்ள பாலனும், ஆரம்ப கால பாலனும் ஒருவரே என்பது கேள்விக்குரியதே! சித்திரங்களின் தரத்தை எடுத்துகொண்டாலும் கூட சற்று கூட ஒப்பிட முடியாத அளவிலேதான் இருக்கின்றன. சிந்துபாத், லைலா, மந்திரவாதி மூசா இவர்கள் தான் முக்கியமான பாத்திரங்கள். எனக்கு தெரிந்தவரை கன்னித் தீவு கதையை 'சுருக்கமாக' இப்படி சொல்லலாம். 

சிந்துபாத் ஒரு மன்னனின் இளம் தளபதி. லைலா இளவரசி. மூசா என்ற 'கொடிய' மந்திரவாதி 'கன்னித் தீவு' என்ற 'கன்னிகள்' நிறைந்த தீவில் அழகிய நங்கைகளை கொண்டு தனது அந்தபுரத்தை அலங்கரிப்பதையே பொழுதுப்போக்காக கொண்டவன். மூசா அடிக்கடி தனது மாயக் கண்ணாடியில் 'தற்போது உலக அழகி யார்?" என்று கேட்பான். மாயக் கண்ணாடியும் லேட்டஸ்ட் உலக அழகியை உடனடியாக காண்பிக்கும் (குளோபல் போசிசனின் சிஸ்டம்?) உடனே தனது மந்திரப்படையை சேர்ந்த அரக்கி, ராட்சசன், குட்டி பூதம் என யாரையாவது ஒருவரை அனுப்பி அந்த அழகியை தூக்கி வர செய்வான். (பெரும்பாலான அழகிகள் இளவரசிகளாக த்தான் இருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?)

அப்படித்தான் ஒரு பொன்மாலைப்  பொழுதில் மாயக்கண்ணாடி லைலாவை மூசாவுக்கு காட்டிக் கொடுத்தது. சற்றும் தாமதிக்காமல் மூசா தனது பரிவாரங்களை அனுப்பி பெண் கேட்டான். அரசன் மறுக்கவே லைலாவை சிறிய உருவமாக்கி விட்டான். (இந்த இடத்தில் 'நடந்தது என்ன?' என்று சரியாக தெரியவில்லை, மூசாவே நேரடியாக வந்து பெண் கேட்டதாக கேள்வி பட்டிருக்கிறேன்..!) சிறிய உருவமான லைலாவை பழையபடி மாற்றும் பொறுப்பு நமது கதாநாயகன் சிந்துபாதிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிந்துபாத்தும் லைலாவை ஒரு பெட்டியில் போட்டு இடுப்பில் கட்டி கொண்டு தனது 'முடிவில்லா' பயணத்தை தொடர்கிறான். 

இந்த பயணத்தின் போது பல நாடுகள், கடல்கள், ஆறுகள், காடுகள் என கடக்கும் சிந்துபாத் எண்ணற்ற இடர்களை சந்திக்கிறான். லட்சிய வீரனின் ஒரே நோக்கம் தனது இளவரசியை இயல்பான வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே. 

இது இப்படி நடந்து கொண்டிருக்க, கன்னித் தீவில் மூசாவை மகிழ்விக்க அந்தப்புர அழகிகள் ஆசையோடு அவனை நெருங்குவர், மூசாவோ 'தொலைந்து போங்கள்..! எனக்கு லைலா மட்டுமே வேண்டும்' என தனது 'கற்பில்' உறுதியாக இருப்பான். சில சமயங்களில் 'உலக அழகி யார்?' மூசா கேட்கும்போது 'லைலா' 'லைலா' என்ற தனது மாறாத பதிலால் மாயக்கண்ணாடி மூசாவை ரொம்பவும் வெறுப்பேற்றும். 


மூட் அவுட்டு ஆகி மாயக் கண்ணாடியில் 'லைலா எங்கே?" என மருகுவான். கண்ணாடியும் அன்றையை லைலா பற்றிய செய்தியை அப்டேட் செய்யும். உடனே தனது வலது கரத்தை (சீனியர்!) அழைத்து 'உடனே எனக்கு லைலா வேண்டும்' என ஆணையிடுவான். வலது கரம் அன்றைய நாள் யாருடுய கோட்டா என்பதை சரிபார்த்து ஏதாவது ஒரு பரிவாரத்தை லைலாவை தூக்கி வர ஏவி விடுவார். பரிவாரம் லைலாவை தூக்கி போக வர, சிந்துபாத் தனது சாகசத்தால் அதனை முறியடிப்பார். அப்புறம்.... வந்து... பிறகு... அப்பால... ம்... ம்... ம்... ம்... தொடரும்...


தொடர்ந்து வரும் ஒரே காரணத்தால் தமிழ் மக்களிடையே நீண்டுகொண்டே போகும் ஒரு நிகழ்வை குறிக்க 'கன்னித் தீவு' என்ற பதங்கள் பயன்படுத்தபடுகின்றன. 1981 இல் கன்னித் தீவு என்று ஒரு சினிமா வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் '"... இந்த கன்னித் தீவு மண்ணுக்கே எரு ஆக வேண்டியதுதானா? நம்ம சொந்த ஊருக்கு போவது எப்போ?...'' என்று ஒரு சக அடிமை கேள்வி கேட்க, புரட்சித் தலைவர், ''ஏன்... என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை..' என்று பாடத் தொடங்குவார். சமீபகால தமிழ் படங்களில் கூட 

''சாக்லேட் சாக்லேட் பூவிலே ....
....
....
பேட்சிலர்க்கு வீடு கொடுத்தா தேங்க்ஸ் சொல்லுவோம்
தினத்தந்தி கன்னித் தீவு எப்போ முடியும்
தெருஞ்சுட்ட தேங்க்ஸ் சொல்லுவோம்...''

மற்றும் 

ஒரு குத்து பாட்டில் கூட ...

"....
....
அட கண்ணாளனே கன்னி தீவு ரொம்ப ரொம்ப பெருசு... 
பாரு நீதானையா சிந்துபாத் 
அட வாடா வாடா வாடா 
....
...."

கன்னித் தீவின் பாதிப்புகளை நாம் காண முடியும். கன்னித் தீவு எப்போது முடியும், லைலா எப்போது தனது சுய உருவை அடைவாள் என்பன தீராத கேள்விகளாக இன்றும் பல்வேறுத் தளங்களில் பேசப்படுகின்றன ..! உண்மையில் கன்னித் தீவு கதை முடியாத ஒரு கதையா என்பது விவாதத்திற்கு உரியது அல்ல! என்றோ முடிந்திருக்க வேண்டிய கதைதான்! 

அறுபது, எழுபதுகளில் உலக பரிச்சயமற்ற, ஓரளவே படிப்பறிவை பெற்ற, சினிமாவின் மேல் அளவற்ற ஆர்வம் கொண்ட மக்கள் மத்தியில் தினத்தந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கன்னித் தீவும் மக்களால் விரும்பி படிக்கப் பட்டது. 

தற்காலத்தில் மக்களின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி தொடர்கள் 'விரும்பி' நீடிக்கப் படுவது கண்கூடு. அது போல அன்று தெரிந்தோ தெரியாமலோ கன்னித் தீவு தினத்தந்தியின் ஒரு அடையாளமாகி போயிருக்கலாம். அந்த அடையாளத்தை தக்க வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தினத்தந்தி கன்னித் தீவு கதையின் போக்கு ஒரு வட்டத்திற்க்குள்லேயே சுற்றி வரும் ஒரு உபாயத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். 

என்பது, தொண்ணூறுகளில் நான் கன்னித் தீவு கதையை ஒரு சலூனில் தொடர்ந்து படித்திருக்கிறேன். எனது அறிவுக்கு எட்டிய வரை 'கன்னித் தீவு வட்டம்' என்பதை பின்வருமாறு வரையறுக்கலாம். 

.... மந்திரவாதி மூஸாவுக்கு லைலா நினைவு வருகிறது.

.... மாயக்கண்ணாடியில் லைலாவின் லேட்டஸ்ட் லோகேசன் அறியபடுகிறது.

.... ஏதேனும் ஒரு பரிவாரம் லைலாவை கடத்தி வர அனுப்பப்படுகிறது...

.... பரிவாரத்தால் ஏற்பாடு இடர்களை சிந்துபாத் முறியடிக்கிறான். 

.... கடற்கரை/காடு/ நாடு என ஏதேனும் ஒரு இடந்தில் இருக்கும் சிந்துபாத் அப்பகுதியில் அதிகாரத்தில் இருக்கும் மன்னன்/தலைவனுக்கு ஏற்பபடும் ஏதேனும் ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்கிறான்.

.... மனம் மகிழும் மன்னன்/தலைவன் கப்பலோ, மந்திர பொருளோ, வாகனமோ கொடுக்கிறான். 

.... லைலாவை சுய உருவை அடைய செய்யும் லட்சியத்தை நோக்கி சிந்துபாத் தனது பயணத்தை தொடர்கிறான்.

.... மந்திரவாதி மூஸாவுக்கு லைலா நினைவு வருகிறது...

.... மாயக்கண்ணாடியில் லைலாவின் லேட்டஸ்ட் லோகேசன் அறியபடுகிறது...

.... ஏதேனும் ஒரு பரிவாரம் லைலாவை கடத்தி வர அனுப்பப்படுகிறது...

... அதே.... அதே.... அதே....!

தற்கால கணிப்பொறி புரோகிராம்களில் 'If.. then ... ', 'Do... until ..'' போன்ற கட்டளைகளை சரியான முறையில் கொடுத்தால் ஒரு செயலை சில பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவற்று நடத்தி கொண்டிருக்கலாம். இதே உத்திதான் இந்த 'கன்னித் தீவு வட்ட' உத்தியும். 

....கடலில் பயணம் செய்கையில் மூசாவின் ஆட்களால்  கப்பல் சிதைக்கப் படுவது...
... கடலில் தத்தளிக்கையில் திமிங்கலத்தால் விழுங்கபடுவது....
... காட்டு மிராண்டிகளிடம் மாட்டி கொள்வது....
... லைலா சிலை பின்னால் இருந்து சாமி போல பேசுவதால் விடுவிக்கப்படுவது...
... எப்போதாவது லைலாவுடன் பேசுவது....

போன்ற காட்சிகளெல்லாம் சில பல மாதங்களுக்கு  ஒருமுறை வந்து போகும் வழக்கமான காட்சிகள்தான். 

இந்த 'டெக்னிக்' பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வாய்ப்புகள் சற்று குறைவுதான். ஏனெனில் கன்னித் தீவு கதையை தொடர்ந்து சில பல மாதங்கள் படிப்பவர்கள் குறைவுதான். ஆட்டுக்குத் தாடி போல தினத்தந்திக்கு கன்னித் தீவு ஒரு வெற்று அடையாளம் மட்டுமே! போற்றி புகழ ஒன்றுமில்லை! 

ஆரம்பத்தில் கூட சித்திரங்கள் கொஞ்சம் அக்கறையோடு வரையப்பட்டிருக்கின்றன. தற்போது.... சொல்லி கொள்ள முடியாது! ஒரு கதாபாத்திரத்தின் முக சாயலை தொடர்ந்து ஒரு சில கட்டங்களுக்கு கூட ஒரே மாதிரி வரைய முடிவதில்லை. 

சமீபத்தில் வெளிவந்த கன்னித் தீவு தொடரை உங்கள் பார்வைக்கு கீழே தந்துள்ளேன். எவ்வளவு முயன்றும் தற்போதுள்ள மூசா, லைலா உருவங்களை சேகரிக்க முடியவில்லை. கிடைத்தால் வெளியிடப்படும்.தொடக்கத்தில் தாடி வைத்திருந்த சிந்துபாத் காலத்திற்கேற்ப சவரம் செய்து ட்ரிம் ஆகியது எப்போது? கதை எந்த நாட்டை மையமாக கொண்டது? சிந்துபாத் லைலாவை காதலிக்கிறானா? கதாசிரியர் (அல்லது கதாசிரியர்கள்) யார்? மூலக் கதை ஏதேனும் உண்டா? சிந்துபாத் தமிழனா, அரேபியனா? அம்மன் எப்படி வருகிறாள்? மூசாவின் கன்னித் தீவு எங்கே உள்ளது? இதுவரை தொடர்ந்து கன்னித் தீவை படிப்பவர்கள் யாரேனும் உண்டா? லைலாவை பழைய உருவம் அடைய என்ன செய்ய வேண்டும்? என நிறையவே கேள்விகள்...!கன்னித் தீவு தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே!

எனது முந்தய பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய பின்னோடங்களுக்கு எனது பதிலை இங்கே காணுங்கள். 

செவ்வாய், 9 டிசம்பர், 2008

காமிக்ஸ்களில் சில களைகள்!

காமிக்ஸ் படிப்பவர்களை தொடர்ந்து காமிக்ஸ் படிக்க தூண்டுவன ஹீரோக்களின் சாகசங்கள், காமெடிகள், அற்புதமான கதையோட்டம் எல்லாவற்றிக்கும் மேலாக நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் தரமான சித்திரங்கள் போன்றவையே.
 
01FineArtWork
 
அடிப்படையில் அச்சு ஊடகமாக இருந்ததாலும் ஒலி, ஒளி ஊடங்களை போல காமிக்சும் ஒரு ஊடகமே! (நன்றி: ஓவியர் ட்ராஸ்கி மருது) காமிக்ஸ் என்பது அச்சு, ஒளி, ஒலி மூன்றும் கலந்த ஒரு கலவையாக கூட கருதலாம். ஏனெனில் காமிக்ஸ் படிக்கும் ஒருவர் மேற்கண்ட மூன்றின் உணர்வையும் ஒரு சேர அனுபவிப்பார். பிற ஊடகங்களை போலவே காமிக்ஸ் உலகத்திலும் ஹீரோக்கள் ஒரு முன்மாதிரியாக, ஜெயிக்க மட்டுமே தெரிந்தவனாக, படிப்பவர்களுக்கு சந்தோசம் அளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். வேதாளன் (Phantom), டின் டின், டார்ஜான், சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் போன்றவர்கள் மிக எளிதாக எதிரிகளை வென்று வாகை சூடுவர். இது போன்ற கதைகள் சற்றே சலிப்பூட்டிய காலக்கட்டங்களில் தான் ப்ரூனோ பிரேசில் , கேப்டன் பிரின்ஸ், ப்ளூ பெர்ரி போன்ற நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் ஹீரோக்களும், லக்கி லுக் போன்ற காமெடி ஹீரோக்களும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர்.
 
02SuperHeros
சினிமாவை போலவே காமிக்ஸ் உலகத்திலும் ரஜினி, கமல், வடிவேலு, பசுபதி என வகை வகையாக ஹீரோக்கள் படைக்கபட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. (ஆனால் இவர்கள் விஜய், அஜித் விசிறிகளை போல கலாய்த்து கொள்வது எல்லாம் இல்லை).
 
03Heroes
 
பெரும்பாலும், காமிக்ஸ் வாசகர்கள் ஹீரோக்களை 'கதா நாயகனாக' தான் (கதையின் நாயகன்!) பார்க்கிறார்களே தவிர 'ஹீரோ வழிபாடாக' பார்ப்பதில்லை. அதனால்தான் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாக ப்ளூ பெர்ரி போன்றவர்களும் வாசகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். பொதுவாக கதாநாயகர்கள் அவர்கள் செயல்படும் நாட்டின் அரசியல், இன, மத பின்புலங்களை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் கதாநாயகர்களை உருவாக்கும் கதாசிரியர்களும் சற்றே கற்பனை வளம் மிக்க சக மனிதர்களே. அவர்கள் சேகரித்த அறிவு அவர்கள் சார்ந்த சமுதாய, அரசியல், மத சூழலில் இருந்து பெறப்பட்டவையே ஆகும். (இதனை சற்றே ஆழமாக காண இங்கே கிளிக் செய்யுங்கள்!)
 
பிற சமுதாயத்தை, மதத்தை, இனத்தை பற்றி கதாசிரியர் என்ன நினைக்கிறாரோ அவற்றையே கதாநாயகனும் பிரதிப்பளிக்கிறான். சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்! சில சமயங்களில் கதாசிரியரின் கட்டுப்பாட்டையும் கடந்து வெகு இயல்பாக மத, இன, அரசியல் துவேசங்கள் (அல்லது அறியாமை!) வெளிப்பட்டுவிடும். சில கதாசிரியர்கள் தங்களது இனவாத கருத்துகளை வலிந்து திணிப்பதும் உண்டு. உலகப்போரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்-களில் ஜெர்மனி போன்ற அச்சு நாடுகள் மோசமானதாக சித்திரிக்கப்பட்டது கதைக்கு அவசியம் என்பதும் மறுக்க இயலாத கருத்தே.
 
04tantorLR
பிற இன, மத, நாட்டு மக்களை பற்றி ஒரு வித கருத்துக்கோவைகளை உருவாக்குவதில் ஊடங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுய சிந்தனை இல்லாமல் அவற்றை அப்படியே ஏற்று கொள்வதும், பரப்புவதும் நகைப்புக்குரியது. ஹோலிவூட் படங்களை பார்க்கும் நம்மவர்கள் இந்த உலகத்தை அமெரிக்கர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நினைத்தால், நம்ம கோடம்பாக்க டூயட்களை பார்க்கும் அமெரிக்கன், தமிழன் 'அந்த' விசயத்துக்கு ஏன் இத்தனை மரங்களை கிராபிக்ஸ் கலக்கலுடன் சுற்றுகிறார்கள் என்று வியக்க மாட்டானா?
 
உதாரணமாக ஒரு பாகிஸ்தானியை அமைதியை விரும்பும் சாந்தரூபியாக நம்மால் கற்பனை செய்ய முடியுமா? முடியாது என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். ஏனெனில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாகிஸ்தானிகளை பகைவர்களாக, கொடூரர்களாகவே நமக்கு நமது ஊடகங்கங்கள் அறிமுகம் செய்துள்ளன. அதே சமயம் இந்தியர்களை இஸ்லாத்திற்கு எதிரிகளாகவே பாகிஸ்தானிய ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பாகிஸ்தானிய மக்களுக்கு போதித்து வருகிறார்கள். ஆனால் இரு தரப்பிலும் உண்மை முரண்பாடாகவே இருக்கிறது.
 
இந்த சூழ்நிலையில் ஒரு இந்திய கதாசிரியரால் உருவாக்கப்படும் ஒரு கதையில் பாகிஸ்தானும் , அதன் மக்களும் எதிர்மறையாகவே வெளிபடுத்தப்படுவார்கள். அது ஒரு வியாபார உத்தியாகவும், மிக இயல்பனதாகவுமே இருக்கும். தற்கால உலகமய சூழலில் கூட இந்த நிலைமை எனில் சென்ற நூற்றாண்டில் - தகவல் தொடர்பை பொறுத்தவரை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டால் கற்காலம்!- என்ன நிலைமை இருந்திருக்கும்? சராசரி மக்கள் பிற இனத்தவரை, பிற நாட்டவரை அரைகுறை அறிவும், இனத் திமிரும், தாங்கள் மட்டுமே அறிவாளிகள் மற்றவர்கள் எல்லாம் மூடர்கள் என்ற 'மூடநம்பிக்கையும்' கொண்ட சிலரிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டே மதிப்பிட்டுருப்பார்கள்.
 
இக்கால கட்டத்தில் உருவாக்கப்பட டின் டின், வேதாளன், டார்ஜான் போன்றவர்கள் இன துவேசத்துடன் செயல்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். குறிப்பாக டின் டினின் 'காங்கோவில் டின் டின்' என்ற படைப்பு நூலகங்கள், புத்தக கடைகளில் குழந்தைகள் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கறுப்பின மக்களையும், பிற கீழை நாட்டு மக்களையும் ஐரோப்பிய, அமெரிக்க கதாசிரியர்கள் தங்களுடைய கதைகளில் மட்டம் தட்டியே எழுதியிருக்கிறார்கள். (இது தொடர்பான காமிக்ஸ் டாக்டரின் மற்றொரு இடுகையை இங்கே காணுங்கள்!)
 
05Tin Tin in Congo-Wrapper
 
06TIC-01
 
07TIC-02
 
08TIC-03
 
09TIC-04
 
10TIC-05
 
11TIC-06
 12TIC-07
 
இந்தியர்கள் சம்பந்தப்பட்ட சில காமிக்ஸ்-களில், திரைபடங்களில் நாம் இவற்றை கவனித்திருப்போம். ஆனால் அதனை சப்தமின்றி ஏற்று கொள்வதே இயல்பாகி போயிருக்கிறது. ஏனெனில் நமது மனநிலை அப்படி உருவாக்கப்படிருக்கிறது. மக்களை அடிமைப்படுத்த வேண்டுமானால் முதலில் அவர்களுடைய கலாச்சாரம், மதம், மொழி குறித்த பெருமித உணர்வை அம்மக்களிடம் அகற்ற வேண்டும் என்பதே ஆதிக்கவாதிகளின் அடிப்படை விதி.
 
ஐரோப்பியர்கள் இந்தியா உள்ளிட்ட காலனி மக்களிடம் அவர்களுடைய நிறம், மொழி, கலாச்சாரம் போன்றவை கேலிக்குரியவை, வெள்ளையர்களின் நிறம், மொழி, கலாச்சாரம் மட்டுமே உயர்ந்தது என்ற கருத்தை ஆழ விதைத்தார்கள். இது பாமரர்களை விட படித்தவர்களிடமே மாற்ற முடியாத அளவுக்கு பதிந்து போனது. ஏனெனில் இவர்கள் படித்தது 'வெள்ளையர்களிடம்'. இந்தியாவில் நமது 'தாத்தா' சுதேசி சிந்தனைக் கொண்டிருந்தாலும் 'மாமா' வெள்ளைச் சிந்தனையுடன்தான் இந்தியாவை உருவாக்கினார். இதனால்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியாவின் வரலாற்றுப் பெருமிதம் அகற்றப்பட்டு இந்தியாவின் வரலாறு என்பதே ஒரு சில நூற்றாண்டுகள் தான் என்பது ஸ்தாபிக்கப்பட்டது. வெள்ளையர்களோ அல்லது வெள்ளையர்களால் 'பண்படுத்தப்பட்டவர்களோதான்' இந்தியாவை காப்பாற்ற தகுதி வாய்ந்தவர்கள் என்பதை விதியாக்கினார்கள். இதன் விளைவாகவே வெள்ளைத் தலைவிகள் இன்னும் நம்மை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து வரும் வாரிசுகளும் வெள்ளை துணையுடனே நம்மை ரட்சிப்பார்கள் என்ற நம்பிகையுடனே சராசரி இந்தியன் இருக்கிறான்.
 
நிற வெறி ஆட்சியாளர்களின் இந்த விஷ விதை இந்தியாவில் மிக கவனமாக மிஷனரிகளால் இன்றும் தொடரப்படுகிறது. மக்கள் தங்களுடைய 'கருப்பு' கடவுளை கூட வெள்ளையாக்க துணிகிறார்கள். ஊடகங்கள் இங்கிலாந்து ராணியின் இந்திய வருகையை 'ராணி இந்தியா வருகை' என்றே கூறி விசுவாசத்தை வெளியிடுகின்றன. சில வருடங்களுக்கு முன் சுற்றுலா பயணியின் விசாவுடன் இந்தியா வந்து 'ஏழைகளுக்கு' வருட கணக்கில் சேவை' செய்து வந்த மிசனரி ஆட்களுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் செய்தபோது நமது காவலர்கள் வெளிநாட்டு ஆட்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஆர்பாட்டக்காரர்களை கைது செய்த கூத்தும் நடந்தது. என்னே விசுவாசம்! கொஞ்சம் யோசித்து பாருங்கள். எந்த ஈரோப்பிய நாட்டிலாவது விசாக் காலம் முடிந்து தங்கும் இந்தியனுக்கு இப்படியா மரியாதை செய்வார்கள்?
 
இன்றும் கூட நடைமுறை வாழ்க்கையில் நாமே ஒரு ஆப்ரிக்கரை ஒருவித அச்சத்துடன் பார்ப்போம், ஆனால் ஒரு வெள்ளையரை மரியாதையுடன் பார்ப்போம். நம்மை அறியாமலே இவ்விதமான விழுமியங்கள் நமது மனதில் பதிந்துள்ளன. தெருவில் பர்சை அடித்து பிடிப்பட்டவன் நம்மில் ஒருவன் எனில் அவனை துவைத்து காய போட்டு விடுவோம். பர்சை அடித்தவன் ஒரு வெள்ளையன் எனில் நாமோ நமது காவல் துறையோ என்ன செய்வோம்... யோசியுங்கள்!
 
வெள்ளையர்கள் நம்மை கேவலப்படுத்துவதும், நாம் அவர்களை கௌரவப்படுத்துவதும் ஒரு புறம் இருக்கட்டும். நாம் நமது நாட்டிலேயே உள்ள மலைவாசி பழங்குடியினரை எப்படி நடத்துகிறோம்? அவர்கள் காட்டுமிராண்டிகள், அறிவிலிகள் என்ற மனோபாவத்துடன்தானே? பார்க்க போனால் மனிதன் தான் சாராத இனம், மதம், மொழி, நாடு குறித்த தவறான புரிதல்களுடந்தான் வளர்க்கபடுகிறான் என்று தெரிகிறது. இவ்வித தவறான விழுமியங்களை தலைமுறை தலைமுறைகளாக உயிர்ப்புடன் வைத்திருப்பதில் கதைகள், காப்பியங்கள், வரலாறுகள், ஊடகங்கள் போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன. அதிலும் சிறுவர்களுக்கு எழுதப்படும் கதைகள், காமிக்ஸ்கள், நாவல்கள் போன்றவை பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கின்றன. எனவேதான் மனித உரிமை ஆர்வலர்களின் கவனிப்புக்கு டின் டினின் காமிக்ஸ்கள் உள்ளாகி வருகின்றன.
 
13Luke Luke - No Smoking
தற்காலத்தில் பெரும்பாலான காமிக்ஸ் படைப்புகள் இது போன்ற பிற்போக்கு கருத்துகளும், தீய பழக்கங்களும் இல்லதாவாறே படைக்கப்படுகின்றன. துப்பாக்கி குழலுக்கு போட்டியாக புகை விட்டுகொண்டிருந்த நமது லக்கி லுக் கூட இப்போது புகைப்பதை விட்டு விட்டு புல் மென்று கொண்டு இருக்கிறார். (அன்புமணி கவனிக்க!)
 
இன வாத நஞ்சு உள்ள கதைகள் அவை உருவாக்கப்பட்ட காலத்தில் இயல்பானதாக, எதிர்ப்பின்றி இருந்திருக்கலாம். ஆனால் வெள்ளையர்கள் பதித்த அடிமை உணர்வை பெரும்பாலான மக்கள் கைவிட்டு வருவதால் அத்தகைய படைப்புகள் தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. இது குறித்து ஜனவரி 2008 - உயிர்மை இதழில் சு.கி. ஜெயகரன் 'சீமையிலிருந்து வந்த சித்திரக்கதை நாயகர்கள்' என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள் . காமிக்ஸ்-களின் பின்னால் இப்படி ஒரு கருத்தியலும் உண்டா என்ற வியந்து போவீர்கள்!
 
 ஒரு காமிக்ஸ் உருவாக்கும் போது கதை நடைபெறும் நாடு, கலாச்சாரம், மக்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியின் பிறகே உருவாக்கப்படுகிறது. இனவாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில பல படைப்புகள் தெரிந்தோ, தெரியாமலோ தவறான புரிதல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை குறிப்பிட்டு சிறுவர்களுக்கு காமிக்ஸ்களை மறுப்பது 'மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியது' போலாகி விடும். அது போன்ற காமிக்ஸ்களை மட்டும் தவிர்க்கலாம். அமெரிக்க மண்ணில் நடைபெறும் கதைகளை கொண்ட காமிக்ஸ்களில் செவ்விந்தியர்கள் பற்றி எப்படி கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் வெள்ளையர்களால் கொடுமைக்குள்ளானத்தை வாசகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். மேலும் உலகம் சுருங்கி விட்ட நிலையில் ஒரு இனம், நாடு பற்றி தவறான பிரச்சாரங்களை முன்பு போல அவ்வளவு எளிதாக மேற்கொண்டுவிட முடியாது என்பது சற்றே ஆறுதல் தரும் செய்திதான்.
 
நன்றி: சு.கி. ஜெயகரன், உயிர்மை, கிங் விஸ்வா
 
மேலும் அறிந்து கொள்ள:

1.............. 2 .................. 3................... 4...................

எனது முந்தய இடுகைக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!