ஞாயிறு, 9 நவம்பர், 2008

காலத்தால் முந்தியது காமிக்ஸ் கலையே!

தமிழ் கூறும் நல்லுலகில் 'காமிக்ஸ்' என்றாலே அது சின்னப்பசங்க சமாச்சாரம் என்ற எண்ணம் ஆழ வேருன்றி உள்ளது. இங்கு மட்டுமல்ல உலகெங்கும் அப்படிதான் இருந்திருக்கிறது. காலப்போக்கில் அந்த தவறான எண்ணம் மேலைநாடுகளில் மாறி விட்டிருக்கிறது. இங்கு மட்டும் காமிக்ஸ் வாசிப்பு அங்கீகரிக்கப்படாமலேயே தொடர்கிறது.

உண்மையில் காமிக்ஸ் வடிவில் செய்தி சொல்வது என்பது நமது ஆதி முன்னோர்களிடம் இருந்தே பரிணமித்து வந்திருக்கிறது. குகைச்சுவர்களில் தங்கள் அனுபவத்தில் கண்ட நிகழ்வுகளை குறியீடுகளாக வரைய தொடங்கிய மனிதன் பின்னர் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சித்திரங்களாக வரைய தொடங்கினான். இதுவே காமிக்ஸ் வடிவத்தின் தொடக்கம் என்று கூறலாம்.

03IndianCaveArt

ஆதி குறியீடுகள் எழுத்துக்களாக, மொழிகளாக பரிணாமம் அடைந்தபின் சித்திரங்களின் தேவை சற்றே குறைந்தது. மன்னர்களின் காலத்தில் அவர்கள் தங்களது புகழை, கலாச்சாரத்தை, கடவுளர்களின் கதையை காலங்கள் கடந்தும் நிலைக்க செய்ய விரும்பினர். இப்பணிக்கு சித்திரங்களும் சிற்பங்களுமே பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

04Athi_Comics_02

நமது கோயில்களில் உள்ள சித்திரங்களும் சிற்பங்களும் எதோ ஒரு கதையை இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருகின்றன. சித்தன்ன வாசல் ஓவியங்களும் கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், கீழப்பழூர் போன்ற எண்ணற்ற கோயில்களில் உள்ள சிற்பங்களும் நமது முன்னோர்களின் தொடர்பியல் திறனுக்கு சான்று பகிர்கின்றன.

மகாபலிபுரத்தில் உள்ள மகிசாசுர மர்த்தினி அசுரனை வதம் செய்யும் காட்சி, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புராணக் காட்சிகளை '3D' காமிக்ஸ்களாக கீழே காணுங்கள்.

'படம் பார்த்து கதை சொல்வது' நமக்கொன்றும் புதிதல்ல. இருப்பினும் 'காமிக்ஸ்' என்பது தமிழக வெகுஜனத்தால் இன்னும் கண்டுகொள்ளவேபடவில்லை. வெகுஜன அங்கீகாரத்திற்காக காமிக்ஸ் பட்ட பாடுகளை காமிக்ஸ் ஆர்வலரும் புகழ்பெற்ற ஓவியருமான மருது அவர்கள் 'காமிக்ஸின் கதை' என்ற தலைப்பில் குமுதம் தீராநதியில் சொல்லியிருக்கிறார். படித்து பார்த்தீர்களானால் காமிக்ஸ் வாசகன் என்று சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்படத் தேவையில்லை என்பது நன்றாகவே புரியும். ஆம்! காலத்தால் முந்தியது காமிக்ஸ் கலையே!

நன்றி: ஓவியர் மருது, குமுதம் தீராநதி

8 கருத்துகள்:

  1. அன்பிற்குரிய திரு. அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    அற்புதமான ஆய்வுக்கும், அருமையான கட்டுரைக்கும் பிடியுங்கள் பாராட்டுக்களை!

    தஞ்சை சிற்பங்களின் மிகப்பெரிய விசிறி நான். ஒவ்வொரு முறை தஞ்சை போகும் போதும் எனது கேமராவின் 1GB மெமரி கார்டு நிறையும் வரை சிற்பங்களை புகைப்படங்களாக சுட்டுத் தள்ளுவது வழக்கம். இருந்தும் கூட அங்குள்ள சிற்பங்களில் பாதி கூட நான் படம்பிடித்திருக்க மாட்டேன்.

    சித்தன்னவாசல் தவிர நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற இடங்களுக்கு நான் சென்றதில்லை. ஆனால் அங்கெல்லாம் போக வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் அருகில் உள்ள எந்தவொரு பழைமையான கோவிலுக்கு சென்றாலும் கதை சொல்லும் சிற்பங்களை காணலாம். நமக்கு தான் அவற்றை தேடிச் செல்லும் ஆர்வம் வேண்டும். பார்த்து ரசித்து முடிக்க நமக்கு தான் ஆயுள் போதாது.

    ஆனால் சித்தன்னவாசலில் இருக்கும் சிற்பங்கள் கவனிப்பாரின்றி அழிந்து வருகின்றன. பழங்கால ஓவியங்கள் எல்லாம் மருந்தின் பெயரில் மூடநம்பிக்கையினால் சுரண்டப்பட்டும், பொருப்பற்றவர்களால் காதலிகளின் பெயர்கள் கிறுக்கப்பட்டும் காணாமலே போய்விட்டன. தஞ்சையிலும் இதே நிலைதான். நம் பொக்கிஷங்களை நாமே பாதுகாக்காவிட்டால் வேறு எவர்தான் செய்வார்?

    பை தி வே, மீ த ஃபர்ஸ்ட்டு!

    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள், அசத்துங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    பதிலளிநீக்கு
  2. அய்யம்பாளையம் சார்,

    சே, ஜஸ்ட் மிஸ்ஸு, மறுபடியும், மீ த செகண்டு.

    பின்னிடேள். பேஷ், பேஷ். பிரம்மாதம். இந்த பதிவு உங்களை காமிக்ஸ் பற்றி ப்ளாக் வைத்திருக்கும் சின்ன பசங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்.

    (1) தமிழ் கூறும் நல்லுலகில் 'காமிக்ஸ்' என்றாலே அது சின்னப்பசங்க சமாச்சாரம் என்ற எண்ணம் ஆழ வேருன்றி உள்ளது = இதை பற்றி கொலை வெறி கவிஞ்சர் ஜோஸ் ரொம்ப அழகாக கூறி உள்ளார். காமிக்ஸ் என்பது சின்ன பசங்க சமாசாரம் என்பது திருக்குறளை "ரெண்டு ரெண்டு வரியில் இருக்குமே அதுவா?" என்று கேட்பதை போல என கூறி உள்ளார். மிகவும் சரியான ஒப்பீடு.

    (2) நமது ஆதி முன்னோர்களிடம் இருந்தே பரிணமித்து வந்திருக்கிறது = மிகவும் சரி. நினைவு படுத்தியதற்கு நன்றி.

    (3) நமது கோயில்களில் உள்ள சித்திரங்களும் சிற்பங்களும் எதோ ஒரு கதையை இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருகின்றன = அட்டகாசம். உதாரணமாக, மதுரை மீனாட்சியம்மன் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஒரு நாள் என்ன, பல நாட்கள் பார்த்து ரசித்து உள்ளேன் (நான் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்பது குறிப்பிட தக்கது)

    (4) மகாபலிபுரத்தில் உள்ள மகிசாசுர மர்த்தினி அசுரனை வதம் செய்யும் காட்சி, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புராணக் காட்சிகளை '3D' காமிக்ஸ்களாக கீழே காணுங்கள் = பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    (5) ஆம்! காலத்தால் முந்தியது காமிக்ஸ் கலையே! = இதை நான் வழி மொழிகிறேன்.

    (6) காமிக்ஸ் ஆர்வலரும் புகழ்பெற்ற ஓவியருமான மருது அவர்கள் 'காமிக்ஸின் கதை' என்ற தலைப்பில் குமுதம் தீராநதியில் சொல்லியிருக்கிறார் = கண்ட கண்ட புத்தகங்களை வாங்கி அதில் இருந்து ஸ்கான் போடும் கிங் விஸ்வா இந்த புத்தகத்தை பற்றி இன்னும் ஸ்கேன் போடாதது ஆச்சரியமே.

    இதெல்லாம் சரி. அந்த சுதந்திரத்துக்கு முன்னாடி உள்ள காமிக்ஸ் பற்றிய பதிவு என்னாச்சு சார்? மறந்துட்டேளா?

    பதிலளிநீக்கு
  3. நிறையவே சிந்திக்கதூண்டும் பதிவு,இப்படியான பதிவுகளை தவறாது பதிந்திடுங்கள்.
    உற்சாகத்துடன் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. எழுத்துகளே முதலில் சித்திர வடிவில் தோன்றியது தானே. நிறைய இதுபோன்ற கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
    நான் கொலை வெறி கவிஞரா? செழி, நீங்க யாரு ன்னு தெரியல? ஆனா நேர்ல ஒருநா மாட்டாமய போயிடபோறீங்க? அன்னைக்கு இருக்கு கச்சேரி.

    பதிலளிநீக்கு
  5. அய்யா,

    இது போன்ற இடுகையின் மூலம் தாங்களின் மேல் நாங்கள் வைத்து இருந்த மரியாதையை நீங்கள் காப்பற்றி கொண்டீர்கள். பாராட்டுக்கள்.

    இதை போன்ற பயனுள்ள இடுகைகளை வெளி இட்டீர்கள் என்றால் காமிக்ஸ் மற்றும் சிறுவர் இலக்கியத்தின் மேல் உள்ள தவறான கண்ணோட்டம் விலகும் என்பதே என் கருத்து,

    ஜோஸ், செழி என்னுடைய நண்பர் தான். நான்தான் உங்களை பற்றி அவரிடம் கூறி உள்ளேன். அதனால் தான் அவர் உரிமையுடன் அவ்வாறு எழுதி உள்ளார். நான் போண்டி வரும்போது அவரையும் அழைத்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பிற்கினிய அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் (எப்பா....) அவர்களே,

    பள்ளி பருவத்தில், பார்த்தசாரதி கோவில் மற்றும் ஏனைய ஆலயங்களுக்கு செல்லும் போது அங்கு தூண்களிலும் சுவர்களிலும் உள்ள ஓவியங்களின் ஊடே எண்ணங்கள் லயிக்க பயணித்த நியாபகங்கள் இன்றும் பசுமையாக இருக்கிறது. அதை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    வலைபூ வடிவமைப்பு, மற்றும் வண்ண தேர்வு மிகவும் அருமை. உங்கள் கணினித்துவம், முகவரி புகைபடதிலேலேயே தெரிகிறது. உங்கள் வலைபூ எதுவும் மாதிரி இல்லாத ஒரு புதுமை தெரிகிறது. தொடர்ந்து அந்த பாதையில் பயணிக்க வேண்டுகிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்
    - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

    பதிலளிநீக்கு
  7. டாக்டர் அய்யா > கோயில் சிற்பங்களின் மற்றொரு முகத்தை நன்றாகவே உணர்ந்துள்ளீர்கள். பழங்கோயில்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிசம்தான்!

    செழி> //இந்த பதிவு உங்களை காமிக்ஸ் பற்றி ப்ளாக் வைத்திருக்கும் சின்ன பசங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்// - இப்படி உசுபேத்தி உசுபேத்தி என் உடம்பை இரண களம் ஆக்கிடாதீங்க..! கிங் விஸ்வா -வை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் ஒரு 'பெரும் புள்ளி' !

    //மதுரை மீனாட்சியம்மன் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஒரு நாள் என்ன, பல நாட்கள் பார்த்து ரசித்து உள்ளேன் (நான் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்பது குறிப்பிட தக்கது)//

    கலையை ரசிக்க கடவுள் நம்பிக்கைத் தேவையில்லை. 'பகுத்தறிவு' இல்லாத 'பொது அறிவு' மட்டுமே போதுமானது.

    சங்கர் விஸ்வலிங்கம், கிங் விஷ்வா > நன்றி. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

    ஜோஸ் > //எழுத்துகளே முதலில் சித்திர வடிவில் தோன்றியது தானே//
    அருமையான கருத்து!

    ரபிக் ராஜா > //வலைபூ வடிவமைப்பு, மற்றும் வண்ண தேர்வு மிகவும் அருமை.//

    நன்றி. காமிக்ஸ் டாக்டரிடம் ஆலோசனைதான் அடிப்படைக் காரணம்.

    பதிலளிநீக்கு
  8. to Mr. King Viswa,

    I only wrote about Anil and Muyal Children's magazines of 1975. My email ID is R.vikhram@groupm.com. Please share with more details about them. Can I have photocopies of Anil & Muyal You have now. Thanks,

    பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!