செவ்வாய், 9 டிசம்பர், 2008

காமிக்ஸ்களில் சில களைகள்!

காமிக்ஸ் படிப்பவர்களை தொடர்ந்து காமிக்ஸ் படிக்க தூண்டுவன ஹீரோக்களின் சாகசங்கள், காமெடிகள், அற்புதமான கதையோட்டம் எல்லாவற்றிக்கும் மேலாக நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் தரமான சித்திரங்கள் போன்றவையே.
 
01FineArtWork
 
அடிப்படையில் அச்சு ஊடகமாக இருந்ததாலும் ஒலி, ஒளி ஊடங்களை போல காமிக்சும் ஒரு ஊடகமே! (நன்றி: ஓவியர் ட்ராஸ்கி மருது) காமிக்ஸ் என்பது அச்சு, ஒளி, ஒலி மூன்றும் கலந்த ஒரு கலவையாக கூட கருதலாம். ஏனெனில் காமிக்ஸ் படிக்கும் ஒருவர் மேற்கண்ட மூன்றின் உணர்வையும் ஒரு சேர அனுபவிப்பார். பிற ஊடகங்களை போலவே காமிக்ஸ் உலகத்திலும் ஹீரோக்கள் ஒரு முன்மாதிரியாக, ஜெயிக்க மட்டுமே தெரிந்தவனாக, படிப்பவர்களுக்கு சந்தோசம் அளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். வேதாளன் (Phantom), டின் டின், டார்ஜான், சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் போன்றவர்கள் மிக எளிதாக எதிரிகளை வென்று வாகை சூடுவர். இது போன்ற கதைகள் சற்றே சலிப்பூட்டிய காலக்கட்டங்களில் தான் ப்ரூனோ பிரேசில் , கேப்டன் பிரின்ஸ், ப்ளூ பெர்ரி போன்ற நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் ஹீரோக்களும், லக்கி லுக் போன்ற காமெடி ஹீரோக்களும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர்.
 
02SuperHeros
சினிமாவை போலவே காமிக்ஸ் உலகத்திலும் ரஜினி, கமல், வடிவேலு, பசுபதி என வகை வகையாக ஹீரோக்கள் படைக்கபட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. (ஆனால் இவர்கள் விஜய், அஜித் விசிறிகளை போல கலாய்த்து கொள்வது எல்லாம் இல்லை).
 
03Heroes
 
பெரும்பாலும், காமிக்ஸ் வாசகர்கள் ஹீரோக்களை 'கதா நாயகனாக' தான் (கதையின் நாயகன்!) பார்க்கிறார்களே தவிர 'ஹீரோ வழிபாடாக' பார்ப்பதில்லை. அதனால்தான் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாக ப்ளூ பெர்ரி போன்றவர்களும் வாசகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். பொதுவாக கதாநாயகர்கள் அவர்கள் செயல்படும் நாட்டின் அரசியல், இன, மத பின்புலங்களை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் கதாநாயகர்களை உருவாக்கும் கதாசிரியர்களும் சற்றே கற்பனை வளம் மிக்க சக மனிதர்களே. அவர்கள் சேகரித்த அறிவு அவர்கள் சார்ந்த சமுதாய, அரசியல், மத சூழலில் இருந்து பெறப்பட்டவையே ஆகும். (இதனை சற்றே ஆழமாக காண இங்கே கிளிக் செய்யுங்கள்!)
 
பிற சமுதாயத்தை, மதத்தை, இனத்தை பற்றி கதாசிரியர் என்ன நினைக்கிறாரோ அவற்றையே கதாநாயகனும் பிரதிப்பளிக்கிறான். சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்! சில சமயங்களில் கதாசிரியரின் கட்டுப்பாட்டையும் கடந்து வெகு இயல்பாக மத, இன, அரசியல் துவேசங்கள் (அல்லது அறியாமை!) வெளிப்பட்டுவிடும். சில கதாசிரியர்கள் தங்களது இனவாத கருத்துகளை வலிந்து திணிப்பதும் உண்டு. உலகப்போரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்-களில் ஜெர்மனி போன்ற அச்சு நாடுகள் மோசமானதாக சித்திரிக்கப்பட்டது கதைக்கு அவசியம் என்பதும் மறுக்க இயலாத கருத்தே.
 
04tantorLR
பிற இன, மத, நாட்டு மக்களை பற்றி ஒரு வித கருத்துக்கோவைகளை உருவாக்குவதில் ஊடங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுய சிந்தனை இல்லாமல் அவற்றை அப்படியே ஏற்று கொள்வதும், பரப்புவதும் நகைப்புக்குரியது. ஹோலிவூட் படங்களை பார்க்கும் நம்மவர்கள் இந்த உலகத்தை அமெரிக்கர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நினைத்தால், நம்ம கோடம்பாக்க டூயட்களை பார்க்கும் அமெரிக்கன், தமிழன் 'அந்த' விசயத்துக்கு ஏன் இத்தனை மரங்களை கிராபிக்ஸ் கலக்கலுடன் சுற்றுகிறார்கள் என்று வியக்க மாட்டானா?
 
உதாரணமாக ஒரு பாகிஸ்தானியை அமைதியை விரும்பும் சாந்தரூபியாக நம்மால் கற்பனை செய்ய முடியுமா? முடியாது என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். ஏனெனில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாகிஸ்தானிகளை பகைவர்களாக, கொடூரர்களாகவே நமக்கு நமது ஊடகங்கங்கள் அறிமுகம் செய்துள்ளன. அதே சமயம் இந்தியர்களை இஸ்லாத்திற்கு எதிரிகளாகவே பாகிஸ்தானிய ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பாகிஸ்தானிய மக்களுக்கு போதித்து வருகிறார்கள். ஆனால் இரு தரப்பிலும் உண்மை முரண்பாடாகவே இருக்கிறது.
 
இந்த சூழ்நிலையில் ஒரு இந்திய கதாசிரியரால் உருவாக்கப்படும் ஒரு கதையில் பாகிஸ்தானும் , அதன் மக்களும் எதிர்மறையாகவே வெளிபடுத்தப்படுவார்கள். அது ஒரு வியாபார உத்தியாகவும், மிக இயல்பனதாகவுமே இருக்கும். தற்கால உலகமய சூழலில் கூட இந்த நிலைமை எனில் சென்ற நூற்றாண்டில் - தகவல் தொடர்பை பொறுத்தவரை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டால் கற்காலம்!- என்ன நிலைமை இருந்திருக்கும்? சராசரி மக்கள் பிற இனத்தவரை, பிற நாட்டவரை அரைகுறை அறிவும், இனத் திமிரும், தாங்கள் மட்டுமே அறிவாளிகள் மற்றவர்கள் எல்லாம் மூடர்கள் என்ற 'மூடநம்பிக்கையும்' கொண்ட சிலரிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டே மதிப்பிட்டுருப்பார்கள்.
 
இக்கால கட்டத்தில் உருவாக்கப்பட டின் டின், வேதாளன், டார்ஜான் போன்றவர்கள் இன துவேசத்துடன் செயல்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். குறிப்பாக டின் டினின் 'காங்கோவில் டின் டின்' என்ற படைப்பு நூலகங்கள், புத்தக கடைகளில் குழந்தைகள் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கறுப்பின மக்களையும், பிற கீழை நாட்டு மக்களையும் ஐரோப்பிய, அமெரிக்க கதாசிரியர்கள் தங்களுடைய கதைகளில் மட்டம் தட்டியே எழுதியிருக்கிறார்கள். (இது தொடர்பான காமிக்ஸ் டாக்டரின் மற்றொரு இடுகையை இங்கே காணுங்கள்!)
 
05Tin Tin in Congo-Wrapper
 
06TIC-01
 
07TIC-02
 
08TIC-03
 
09TIC-04
 
10TIC-05
 
11TIC-06
 12TIC-07
 
இந்தியர்கள் சம்பந்தப்பட்ட சில காமிக்ஸ்-களில், திரைபடங்களில் நாம் இவற்றை கவனித்திருப்போம். ஆனால் அதனை சப்தமின்றி ஏற்று கொள்வதே இயல்பாகி போயிருக்கிறது. ஏனெனில் நமது மனநிலை அப்படி உருவாக்கப்படிருக்கிறது. மக்களை அடிமைப்படுத்த வேண்டுமானால் முதலில் அவர்களுடைய கலாச்சாரம், மதம், மொழி குறித்த பெருமித உணர்வை அம்மக்களிடம் அகற்ற வேண்டும் என்பதே ஆதிக்கவாதிகளின் அடிப்படை விதி.
 
ஐரோப்பியர்கள் இந்தியா உள்ளிட்ட காலனி மக்களிடம் அவர்களுடைய நிறம், மொழி, கலாச்சாரம் போன்றவை கேலிக்குரியவை, வெள்ளையர்களின் நிறம், மொழி, கலாச்சாரம் மட்டுமே உயர்ந்தது என்ற கருத்தை ஆழ விதைத்தார்கள். இது பாமரர்களை விட படித்தவர்களிடமே மாற்ற முடியாத அளவுக்கு பதிந்து போனது. ஏனெனில் இவர்கள் படித்தது 'வெள்ளையர்களிடம்'. இந்தியாவில் நமது 'தாத்தா' சுதேசி சிந்தனைக் கொண்டிருந்தாலும் 'மாமா' வெள்ளைச் சிந்தனையுடன்தான் இந்தியாவை உருவாக்கினார். இதனால்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியாவின் வரலாற்றுப் பெருமிதம் அகற்றப்பட்டு இந்தியாவின் வரலாறு என்பதே ஒரு சில நூற்றாண்டுகள் தான் என்பது ஸ்தாபிக்கப்பட்டது. வெள்ளையர்களோ அல்லது வெள்ளையர்களால் 'பண்படுத்தப்பட்டவர்களோதான்' இந்தியாவை காப்பாற்ற தகுதி வாய்ந்தவர்கள் என்பதை விதியாக்கினார்கள். இதன் விளைவாகவே வெள்ளைத் தலைவிகள் இன்னும் நம்மை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து வரும் வாரிசுகளும் வெள்ளை துணையுடனே நம்மை ரட்சிப்பார்கள் என்ற நம்பிகையுடனே சராசரி இந்தியன் இருக்கிறான்.
 
நிற வெறி ஆட்சியாளர்களின் இந்த விஷ விதை இந்தியாவில் மிக கவனமாக மிஷனரிகளால் இன்றும் தொடரப்படுகிறது. மக்கள் தங்களுடைய 'கருப்பு' கடவுளை கூட வெள்ளையாக்க துணிகிறார்கள். ஊடகங்கள் இங்கிலாந்து ராணியின் இந்திய வருகையை 'ராணி இந்தியா வருகை' என்றே கூறி விசுவாசத்தை வெளியிடுகின்றன. சில வருடங்களுக்கு முன் சுற்றுலா பயணியின் விசாவுடன் இந்தியா வந்து 'ஏழைகளுக்கு' வருட கணக்கில் சேவை' செய்து வந்த மிசனரி ஆட்களுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் செய்தபோது நமது காவலர்கள் வெளிநாட்டு ஆட்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஆர்பாட்டக்காரர்களை கைது செய்த கூத்தும் நடந்தது. என்னே விசுவாசம்! கொஞ்சம் யோசித்து பாருங்கள். எந்த ஈரோப்பிய நாட்டிலாவது விசாக் காலம் முடிந்து தங்கும் இந்தியனுக்கு இப்படியா மரியாதை செய்வார்கள்?
 
இன்றும் கூட நடைமுறை வாழ்க்கையில் நாமே ஒரு ஆப்ரிக்கரை ஒருவித அச்சத்துடன் பார்ப்போம், ஆனால் ஒரு வெள்ளையரை மரியாதையுடன் பார்ப்போம். நம்மை அறியாமலே இவ்விதமான விழுமியங்கள் நமது மனதில் பதிந்துள்ளன. தெருவில் பர்சை அடித்து பிடிப்பட்டவன் நம்மில் ஒருவன் எனில் அவனை துவைத்து காய போட்டு விடுவோம். பர்சை அடித்தவன் ஒரு வெள்ளையன் எனில் நாமோ நமது காவல் துறையோ என்ன செய்வோம்... யோசியுங்கள்!
 
வெள்ளையர்கள் நம்மை கேவலப்படுத்துவதும், நாம் அவர்களை கௌரவப்படுத்துவதும் ஒரு புறம் இருக்கட்டும். நாம் நமது நாட்டிலேயே உள்ள மலைவாசி பழங்குடியினரை எப்படி நடத்துகிறோம்? அவர்கள் காட்டுமிராண்டிகள், அறிவிலிகள் என்ற மனோபாவத்துடன்தானே? பார்க்க போனால் மனிதன் தான் சாராத இனம், மதம், மொழி, நாடு குறித்த தவறான புரிதல்களுடந்தான் வளர்க்கபடுகிறான் என்று தெரிகிறது. இவ்வித தவறான விழுமியங்களை தலைமுறை தலைமுறைகளாக உயிர்ப்புடன் வைத்திருப்பதில் கதைகள், காப்பியங்கள், வரலாறுகள், ஊடகங்கள் போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன. அதிலும் சிறுவர்களுக்கு எழுதப்படும் கதைகள், காமிக்ஸ்கள், நாவல்கள் போன்றவை பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கின்றன. எனவேதான் மனித உரிமை ஆர்வலர்களின் கவனிப்புக்கு டின் டினின் காமிக்ஸ்கள் உள்ளாகி வருகின்றன.
 
13Luke Luke - No Smoking
தற்காலத்தில் பெரும்பாலான காமிக்ஸ் படைப்புகள் இது போன்ற பிற்போக்கு கருத்துகளும், தீய பழக்கங்களும் இல்லதாவாறே படைக்கப்படுகின்றன. துப்பாக்கி குழலுக்கு போட்டியாக புகை விட்டுகொண்டிருந்த நமது லக்கி லுக் கூட இப்போது புகைப்பதை விட்டு விட்டு புல் மென்று கொண்டு இருக்கிறார். (அன்புமணி கவனிக்க!)
 
இன வாத நஞ்சு உள்ள கதைகள் அவை உருவாக்கப்பட்ட காலத்தில் இயல்பானதாக, எதிர்ப்பின்றி இருந்திருக்கலாம். ஆனால் வெள்ளையர்கள் பதித்த அடிமை உணர்வை பெரும்பாலான மக்கள் கைவிட்டு வருவதால் அத்தகைய படைப்புகள் தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. இது குறித்து ஜனவரி 2008 - உயிர்மை இதழில் சு.கி. ஜெயகரன் 'சீமையிலிருந்து வந்த சித்திரக்கதை நாயகர்கள்' என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள் . காமிக்ஸ்-களின் பின்னால் இப்படி ஒரு கருத்தியலும் உண்டா என்ற வியந்து போவீர்கள்!
 








 ஒரு காமிக்ஸ் உருவாக்கும் போது கதை நடைபெறும் நாடு, கலாச்சாரம், மக்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியின் பிறகே உருவாக்கப்படுகிறது. இனவாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில பல படைப்புகள் தெரிந்தோ, தெரியாமலோ தவறான புரிதல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை குறிப்பிட்டு சிறுவர்களுக்கு காமிக்ஸ்களை மறுப்பது 'மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியது' போலாகி விடும். அது போன்ற காமிக்ஸ்களை மட்டும் தவிர்க்கலாம். அமெரிக்க மண்ணில் நடைபெறும் கதைகளை கொண்ட காமிக்ஸ்களில் செவ்விந்தியர்கள் பற்றி எப்படி கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் வெள்ளையர்களால் கொடுமைக்குள்ளானத்தை வாசகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். மேலும் உலகம் சுருங்கி விட்ட நிலையில் ஒரு இனம், நாடு பற்றி தவறான பிரச்சாரங்களை முன்பு போல அவ்வளவு எளிதாக மேற்கொண்டுவிட முடியாது என்பது சற்றே ஆறுதல் தரும் செய்திதான்.
 
நன்றி: சு.கி. ஜெயகரன், உயிர்மை, கிங் விஸ்வா
 
மேலும் அறிந்து கொள்ள:

1.............. 2 .................. 3................... 4...................

எனது முந்தய இடுகைக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!



9 கருத்துகள்:

  1. அய்யம்பாளயத்தாரே,

    உங்களின் மேல் நாங்கள் கொண்டுள்ள மரியாதை உங்களின் ஒவ்வொரு பதிவின் மூலமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றனது. உங்களின் அரசியல் பார்வையும், காமிக்ஸ் புத்தகங்களின் மேல் உங்களுக்குள்ள பறந்து விரிந்த உலகியல் பார்வையும் இதனால் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.

    டின் டின் போன்ற கதைகளும், பிற்காலத்தில் வந்த ஆஸ்டரிக்ஸ் கதைகளும் என்னால் மிகவும் வெறுக்கப் பட்டவை ஆகும்.

    ஏற்கனவே நான் கூறியது போல கதை ஆசிரியர் நினைத்தால் அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார். செவ்விந்தியர்களின் தலைவர் ஒரு வெள்ளையர் என்பது அநியாயத்தின் உச்ச கட்டம். இது எப்படி உள்ளது என்றால் அடுத்த போப் ஆண்டவர் ஒரு ஹிந்து என்பதை போல. ஆயிரம் தான் டெக்ஸ் நவஜோ தலைவர் ஆவதற்கு உண்மையான காரணங்கள் இருந்தாலும், அது ஒரு அபத்தமான செயல் ஆகும்.

    பல முறை நான் கலந்து கொண்ட காமிக்ஸ் பற்றிய கருத்தரங்குகளில் (பெரிதாக ஒன்றும் இல்லை - டாக்டரும் நானும் பேசினால் அது ஒரு கருத்தரங்கு) இது குறித்து பேசி உள்ளேன். மத துவேஷங்களை பரப்பும் விதமாக ஒரு உள் அர்த்ததுடனே சில கதைகள் (வேதாளன்) எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன். இதில் இரு வேறு கருத்து இருந்தால் என்னுடன் அடுத்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

    கிங் விஸ்வா
    Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்

    பதிலளிநீக்கு
  2. நண்பர் அ.வெ,

    அருமையான பதிவு,கட்டுரையை நான் படித்துள்ளேன், இக்கட்டுரை என்னை காமிக்ஸ்களை வேறுவிதத்தில் பார்க்க தூண்டியது.

    வழமை போலவே ஸ்கேன்கள் அற்புதம்.

    அடிமையின் கண்ணீரை எஜமானால் வரைய முடியும், ஆனால் உணர முடியுமா.

    இவர்கள் இவ்வாறு சித்தரிக்கப்பட்டதை எண்ணி உண்மயிலேயே எனக்கு வருத்தம் உண்டு. செவ்விந்தியர்களும் சரி, கறுப்பின மக்களும் சரி, இக் கதைகளை சிருஷ்டித்தவர்களை விட,மேன்மையான பாரம்பரியமும், தொன்மையும் கொண்டவர்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவும், கால் பந்தாட்டத்தில் கோல்களைப் போடவும், தாங்கள் உலகின் சிறந்த ஜனநாயகவாதிகள் என்பதை பறை சாற்றவும் இவர்கள் தேவை.

    உலகின் பெரிய மருத்துவ கம்பனிகளின் மருந்துகளை சோதனை செய்து பார்க்க இவர்கள் தேவை.

    குழுக்களிடையே மோதலை தூண்டி, ஆயுத வியாபாரம் செய்ய இவர்கள் தேவை.

    என்ன செய்வது நாயகர்களின் உலகம் இது.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. யோசிக்க வைத்துவிட்டீர்கள் வெங்கடேஸ்வரன்!!!

    பதிலளிநீக்கு
  4. நண்பரே, என்ன ஒரு அருமையான பதிவு. கருத்துக்கள் மிகுந்த ஓவியம் இது. ஊடங்களில் அவர் அவர் கலாச்சரதுகே ஏற்ப சில தனி மனித கருத்துக்களை புகுத்துவது காலம் சென்ற யுத்தி தானே. காமிக்ஸ் என்ற ஊடகத்திலயும் அது புகுந்தது ஒன்றும் அதிசயமான விஷயம் அல்லவே. அதை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    சமீபத்தில் நடந்த மும்பை பாதிப்பில் கூட, எவ்வளவு ஆங்கிலேயர்கள் மரணம் அடைந்தார்கள் என்று ஊடகங்கள் பதிந்ததே தவிர, கூடவே மறித்து போன நம் மக்களை பற்றி கூறியது குறைவே. வெளிநாட்டினரை மட்டும் மதிக்கும் இந்த காலம் சென்ற பழக்கத்தை மாற்ற முடியுமா?

    ஹிந்தியில் மிக புகழ் பெற்ற ராஜ் காமிக்ஸ், ஒரு முறை வெளியிட்ட இதழில், பாகிஸ்தான் தீவிரவாதியை, ஒரு அணு ஏவுகணையில் பிணைத்து அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது போல, ஒரு காட்சியை அட்டைபட்திலேயே வரைந்து இருந்தார்கள். எனது இங்கிலாந்து காமிக்ஸ் அன்பர், இதை பற்றி என்னிடம் வருத்தம் கூட தெரிவித்து இருந்தார். தேச பக்தியை வ்யாபாரம் ஆகும் உத்திகளில் இதுவும் ஒன்று தானே.

    எது எப்படியோ, எந்த விசயத்தில் உள்ள கேட்டதும் நல்லதும் போல காமிக்ஸ்களிலும் நல்ல விஷயங்கள் உண்டுதான். வளர்ந்த நமக்கு, கெட்டதையும், நல்லதையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கிறது. ஆனால் வளரும் சிறார்கள் இதை பார்த்து தங்கள் என்னோவோடங்களை அமைதுவிடாமல் இருந்தாலே போதும். அதற்க்கு உங்களின் இந்த பதிப்பு உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    தொடரட்டும் உங்கள் மேன் தங்கிய பனி.

    அன்புடன்,
    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    பதிலளிநீக்கு
  5. திரும்பவும் நான்,

    சு.கி. ஜெயகரன் எழுதிய கட்டுரையை இதன் மூலம் படிக்க உதவியதற்கு நன்றி. டார்ஜானுக்காக இருபது வருடம் கழித்து ஒரு வெள்ளைகார பெண்ணை ஜோடி சேர்த்து விடும், இன வெறியை அவர் மேற்கோள் காட்டி இருபது, மிகவும் அருமை.

    டார்ஜான், வேதாளர், போன்ற புகழ் பெற்ற கதை தொடர்கள் ஒரு காமிக்ஸ் பொக்கிஷம் என்று கருதினாலும்; இந்த ஆப்ரிக்க பழங்குடியினர் சம்பந்த பட்ட கதைகளின் பின்னணியில் இருந்த குரூர எண்ணங்கள், மேற்கத்திய மாட்டு பசங்க கதை தொடர்களில் பூர்வ குடி மக்களான, செவ்விந்தியர்களை சித்தரிக்கும் பாங்குக்கு சற்றும் குறைந்தது இல்லை. இவை மேட்டு குடி மக்கள் என்று தங்களை அறை கூவி கொள்ளும் மக்களின் அந்தரங்க பிரதிபலிப்பே. நம் மக்களும் இதற்க்கு சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சில பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாக்கள் கூட உதாரணமே.

    கட்டுரை ஆசியரின் மின்னஞ்சல் முகவரி எதுவும் உண்டா? அவருக்கு ஒரு "ஓ" போடலாம்.

    அன்புடன்,
    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    பதிலளிநீக்கு
  6. டார்ஜான், வேதாளன், டெக்ஸ் வில்லன், போன்ற சில பாத்திரங்களை உலக அளவில் உருவாக்கி அதன் மூலம் தங்களின் அரசியல், இன / மத துவேஷங்களை சில கீழ்த்தரமான கதாசிரியன்கள் பரப்பினர். இது போன்ற மட்டமான நோக்கம் கொண்ட கோமிக்க்குகளை தான் நாம் நம்முடைய இளம் பிராயத்தில் படித்தோம் என்று நினைக்கும் பொது அருவெறுப்பாக இருக்கின்றது.

    இந்த கொடுமைகளுக்கு எதிராக நான் ஆரம்பித்து உள்ள போர்ப் படையில் சேர்ந்து உங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்துங்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்.
    Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

    பதிலளிநீக்கு
  7. வருங்கால முதல்வர் நெருப்பு விரல் மாயாவி வாழ்க, மத்திய அமைச்சர் கரும்புலி வாழ்க, சிங்க தமிழன் கிங் விஸ்வா வாழ்க

    - பாசமுள்ள தொண்டன்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி

    பதிலளிநீக்கு
  9. > கிங் விஸ்வா

    //உங்களின் மேல் நாங்கள் கொண்டுள்ள மரியாதை உங்களின் ஒவ்வொரு பதிவின் மூலமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றனது. //

    :-) ரொம்ப உயரத்தில் வைத்து விடாதீகள். விழுந்தால் ரொம்ப வலிக்கும் எனக்கு..!

    > உங்களின் அரசியல் பார்வையும், காமிக்ஸ் புத்தகங்களின் மேல் உங்களுக்குள்ள பறந்து விரிந்த உலகியல் பார்வையும் இதனால் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.

    :-) இன்னமும் இந்த ஊர் நம்பளை நம்புதா?

    > ஷங்கர் விஸ்வலிங்கம்

    //உலகின் பெரிய மருத்துவ கம்பனிகளின் மருந்துகளை சோதனை செய்து பார்க்க இவர்கள் தேவை. குழுக்களிடையே மோதலை தூண்டி, ஆயுத வியாபாரம் செய்ய இவர்கள் தேவை.//

    :-) உண்மை! காலங்கள் தோறும் அடிமை முறை மாறி கொண்டுதான் இருக்கிறது.

    > முத்து விசிறி

    தங்களின் வருகை எங்களை பெருமை படுத்தியது. நன்றி.

    > ரஃபிக் ராஜா

    //சமீபத்தில் நடந்த மும்பை பாதிப்பில் கூட, எவ்வளவு ஆங்கிலேயர்கள் மரணம் அடைந்தார்கள் என்று ஊடகங்கள் பதிந்ததே தவிர, கூடவே மறித்து போன நம் மக்களை பற்றி கூறியது குறைவே. //

    :-) மிக பொருத்தமான நினைவூட்டல். நன்றி!

    //கட்டுரை ஆசியரின் மின்னஞ்சல் முகவரி எதுவும் உண்டா?//

    :-) மன்னிக்கவும். கிடைக்கவில்லை. ஆனால் அவரை பற்றிய ஒரு குறிப்பு உயிர்மை வலைப்பக்கத்தில் காணப்படுகிறது. இணைப்பு தந்துள்ளேன். பயன்படுத்தி கொள்ளவும்.

    > ஒலக காமிக்ஸ் ரசிகன்!

    //இந்த கொடுமைகளுக்கு எதிராக நான் ஆரம்பித்து உள்ள போர்ப் படையில் சேர்ந்து உங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்துங்கள்.//

    :-) தங்களின் அறைக்கூவலை தமிழ் கூறும் நல்லுலகம் கவனிக்கும் என்று நம்புகிறேன்.

    > சித்திர புத்தக ரசிகன்

    :-) நன்றிங்க அய்யா ... நன்றி!

    > பாசமுள்ள பாண்டியன்...

    :-) எனக்கென்ன அவங்களும் வாழ்த்திட்டு போகட்டுமே..! நன்றி!

    பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!