
'கன்னித் தீவு' என்ற வார்த்தைகள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டோர்கள் மட்டுமல்ல சராசரி தமிழ் வாசகர்கள் கூட அறிந்தவை. தினத்தந்தியில் 47 வருடங்களாக தொடர்ந்து வெளிவரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கன்னித் தீவு. இது 1961 -இல் வெளிவர தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. தற்போதைய கன்னித் தீவு '17,226' நாட்களை தாண்டியுள்ளது.
தொடக்க காலத்தில் இரண்டாம் பக்க அடியில் வெளி வந்தது. பின்னர் இரண்டாம் பக்க மேற்பகுதியில் இன்றுவரை வெளியிடபடுகிறது. பாலன் என்ற ஓவியர் தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார்? 1961-இல் அவருக்கு வயது 20 என்றாலும் கூட தற்போது அவருக்கு 67 வயதாக இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. எனவே தற்போதுள்ள பாலனும், ஆரம்ப கால பாலனும் ஒருவரே என்பது கேள்விக்குரியதே! சித்திரங்களின் தரத்தை எடுத்துகொண்டாலும் கூட சற்று கூட ஒப்பிட முடியாத அளவிலேதான் இருக்கின்றன. சிந்துபாத், லைலா, மந்திரவாதி மூசா இவர்கள் தான் முக்கியமான பாத்திரங்கள். எனக்கு தெரிந்தவரை கன்னித் தீவு கதையை 'சுருக்கமாக' இப்படி சொல்லலாம்.
சிந்துபாத் ஒரு மன்னனின் இளம் தளபதி. லைலா இளவரசி. மூசா என்ற 'கொடிய' மந்திரவாதி 'கன்னித் தீவு' என்ற 'கன்னிகள்' நிறைந்த தீவில் அழகிய நங்கைகளை கொண்டு தனது அந்தபுரத்தை அலங்கரிப்பதையே பொழுதுப்போக்காக கொண்டவன். மூசா அடிக்கடி தனது மாயக் கண்ணாடியில் 'தற்போது உலக அழகி யார்?" என்று கேட்பான். மாயக் கண்ணாடியும் லேட்டஸ்ட் உலக அழகியை உடனடியாக காண்பிக்கும் (குளோபல் போசிசனின் சிஸ்டம்?) உடனே தனது மந்திரப்படையை சேர்ந்த அரக்கி, ராட்சசன், குட்டி பூதம் என யாரையாவது ஒருவரை அனுப்பி அந்த அழகியை தூக்கி வர செய்வான். (பெரும்பாலான அழகிகள் இளவரசிகளாக த்தான் இருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?)

அப்படித்தான் ஒரு பொன்மாலைப் பொழுதில் மாயக்கண்ணாடி லைலாவை மூசாவுக்கு காட்டிக் கொடுத்தது. சற்றும் தாமதிக்காமல் மூசா தனது பரிவாரங்களை அனுப்பி பெண் கேட்டான். அரசன் மறுக்கவே லைலாவை சிறிய உருவமாக்கி விட்டான். (இந்த இடத்தில் 'நடந்தது என்ன?' என்று சரியாக தெரியவில்லை, மூசாவே நேரடியாக வந்து பெண் கேட்டதாக கேள்வி பட்டிருக்கிறேன்..!) சிறிய உருவமான லைலாவை பழையபடி மாற்றும் பொறுப்பு நமது கதாநாயகன் சிந்துபாதிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிந்துபாத்தும் லைலாவை ஒரு பெட்டியில் போட்டு இடுப்பில் கட்டி கொண்டு தனது 'முடிவில்லா' பயணத்தை தொடர்கிறான்.

இந்த பயணத்தின் போது பல நாடுகள், கடல்கள், ஆறுகள், காடுகள் என கடக்கும் சிந்துபாத் எண்ணற்ற இடர்களை சந்திக்கிறான். லட்சிய வீரனின் ஒரே நோக்கம் தனது இளவரசியை இயல்பான வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே.

இது இப்படி நடந்து கொண்டிருக்க, கன்னித் தீவில் மூசாவை மகிழ்விக்க அந்தப்புர அழகிகள் ஆசையோடு அவனை நெருங்குவர், மூசாவோ 'தொலைந்து போங்கள்..! எனக்கு லைலா மட்டுமே வேண்டும்' என தனது 'கற்பில்' உறுதியாக இருப்பான். சில சமயங்களில் 'உலக அழகி யார்?' மூசா கேட்கும்போது 'லைலா' 'லைலா' என்ற தனது மாறாத பதிலால் மாயக்கண்ணாடி மூசாவை ரொம்பவும் வெறுப்பேற்றும்.

மூட் அவுட்டு ஆகி மாயக் கண்ணாடியில் 'லைலா எங்கே?" என மருகுவான். கண்ணாடியும் அன்றையை லைலா பற்றிய செய்தியை அப்டேட் செய்யும். உடனே தனது வலது கரத்தை (சீனியர்!) அழைத்து 'உடனே எனக்கு லைலா வேண்டும்' என ஆணையிடுவான். வலது கரம் அன்றைய நாள் யாருடுய கோட்டா என்பதை சரிபார்த்து ஏதாவது ஒரு பரிவாரத்தை லைலாவை தூக்கி வர ஏவி விடுவார். பரிவாரம் லைலாவை தூக்கி போக வர, சிந்துபாத் தனது சாகசத்தால் அதனை முறியடிப்பார். அப்புறம்.... வந்து... பிறகு... அப்பால... ம்... ம்... ம்... ம்... தொடரும்...

தொடர்ந்து வரும் ஒரே காரணத்தால் தமிழ் மக்களிடையே நீண்டுகொண்டே போகும் ஒரு நிகழ்வை குறிக்க 'கன்னித் தீவு' என்ற பதங்கள் பயன்படுத்தபடுகின்றன. 1981 இல் கன்னித் தீவு என்று ஒரு சினிமா வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் '"... இந்த கன்னித் தீவு மண்ணுக்கே எரு ஆக வேண்டியதுதானா? நம்ம சொந்த ஊருக்கு போவது எப்போ?...'' என்று ஒரு சக அடிமை கேள்வி கேட்க, புரட்சித் தலைவர், ''ஏன்... என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை..' என்று பாடத் தொடங்குவார். சமீபகால தமிழ் படங்களில் கூட
''சாக்லேட் சாக்லேட் பூவிலே ....
....
....
பேட்சிலர்க்கு வீடு கொடுத்தா தேங்க்ஸ் சொல்லுவோம்
தினத்தந்தி கன்னித் தீவு எப்போ முடியும்
தெருஞ்சுட்ட தேங்க்ஸ் சொல்லுவோம்...''
மற்றும்
ஒரு குத்து பாட்டில் கூட ...
"....
....
அட கண்ணாளனே கன்னி தீவு ரொம்ப ரொம்ப பெருசு...
பாரு நீதானையா சிந்துபாத்
அட வாடா வாடா வாடா
....
...."
கன்னித் தீவின் பாதிப்புகளை நாம் காண முடியும். கன்னித் தீவு எப்போது முடியும், லைலா எப்போது தனது சுய உருவை அடைவாள் என்பன தீராத கேள்விகளாக இன்றும் பல்வேறுத் தளங்களில் பேசப்படுகின்றன ..! உண்மையில் கன்னித் தீவு கதை முடியாத ஒரு கதையா என்பது விவாதத்திற்கு உரியது அல்ல! என்றோ முடிந்திருக்க வேண்டிய கதைதான்!
அறுபது, எழுபதுகளில் உலக பரிச்சயமற்ற, ஓரளவே படிப்பறிவை பெற்ற, சினிமாவின் மேல் அளவற்ற ஆர்வம் கொண்ட மக்கள் மத்தியில் தினத்தந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கன்னித் தீவும் மக்களால் விரும்பி படிக்கப் பட்டது.
தற்காலத்தில் மக்களின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி தொடர்கள் 'விரும்பி' நீடிக்கப் படுவது கண்கூடு. அது போல அன்று தெரிந்தோ தெரியாமலோ கன்னித் தீவு தினத்தந்தியின் ஒரு அடையாளமாகி போயிருக்கலாம். அந்த அடையாளத்தை தக்க வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தினத்தந்தி கன்னித் தீவு கதையின் போக்கு ஒரு வட்டத்திற்க்குள்லேயே சுற்றி வரும் ஒரு உபாயத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம்.
என்பது, தொண்ணூறுகளில் நான் கன்னித் தீவு கதையை ஒரு சலூனில் தொடர்ந்து படித்திருக்கிறேன். எனது அறிவுக்கு எட்டிய வரை 'கன்னித் தீவு வட்டம்' என்பதை பின்வருமாறு வரையறுக்கலாம்.
.... மந்திரவாதி மூஸாவுக்கு லைலா நினைவு வருகிறது.
.... மாயக்கண்ணாடியில் லைலாவின் லேட்டஸ்ட் லோகேசன் அறியபடுகிறது.
.... ஏதேனும் ஒரு பரிவாரம் லைலாவை கடத்தி வர அனுப்பப்படுகிறது...
.... பரிவாரத்தால் ஏற்பாடு இடர்களை சிந்துபாத் முறியடிக்கிறான்.
.... கடற்கரை/காடு/ நாடு என ஏதேனும் ஒரு இடந்தில் இருக்கும் சிந்துபாத் அப்பகுதியில் அதிகாரத்தில் இருக்கும் மன்னன்/தலைவனுக்கு ஏற்பபடும் ஏதேனும் ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்கிறான்.
.... மனம் மகிழும் மன்னன்/தலைவன் கப்பலோ, மந்திர பொருளோ, வாகனமோ கொடுக்கிறான்.
.... லைலாவை சுய உருவை அடைய செய்யும் லட்சியத்தை நோக்கி சிந்துபாத் தனது பயணத்தை தொடர்கிறான்.
.... மந்திரவாதி மூஸாவுக்கு லைலா நினைவு வருகிறது...
.... மாயக்கண்ணாடியில் லைலாவின் லேட்டஸ்ட் லோகேசன் அறியபடுகிறது...
.... ஏதேனும் ஒரு பரிவாரம் லைலாவை கடத்தி வர அனுப்பப்படுகிறது...
... அதே.... அதே.... அதே....!
தற்கால கணிப்பொறி புரோகிராம்களில் 'If.. then ... ', 'Do... until ..'' போன்ற கட்டளைகளை சரியான முறையில் கொடுத்தால் ஒரு செயலை சில பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவற்று நடத்தி கொண்டிருக்கலாம். இதே உத்திதான் இந்த 'கன்னித் தீவு வட்ட' உத்தியும்.
....கடலில் பயணம் செய்கையில் மூசாவின் ஆட்களால் கப்பல் சிதைக்கப் படுவது...
... கடலில் தத்தளிக்கையில் திமிங்கலத்தால் விழுங்கபடுவது....
... காட்டு மிராண்டிகளிடம் மாட்டி கொள்வது....
... லைலா சிலை பின்னால் இருந்து சாமி போல பேசுவதால் விடுவிக்கப்படுவது...
... எப்போதாவது லைலாவுடன் பேசுவது....
போன்ற காட்சிகளெல்லாம் சில பல மாதங்களுக்கு ஒருமுறை வந்து போகும் வழக்கமான காட்சிகள்தான்.
இந்த 'டெக்னிக்' பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வாய்ப்புகள் சற்று குறைவுதான். ஏனெனில் கன்னித் தீவு கதையை தொடர்ந்து சில பல மாதங்கள் படிப்பவர்கள் குறைவுதான். ஆட்டுக்குத் தாடி போல தினத்தந்திக்கு கன்னித் தீவு ஒரு வெற்று அடையாளம் மட்டுமே! போற்றி புகழ ஒன்றுமில்லை!
ஆரம்பத்தில் கூட சித்திரங்கள் கொஞ்சம் அக்கறையோடு வரையப்பட்டிருக்கின்றன. தற்போது.... சொல்லி கொள்ள முடியாது! ஒரு கதாபாத்திரத்தின் முக சாயலை தொடர்ந்து ஒரு சில கட்டங்களுக்கு கூட ஒரே மாதிரி வரைய முடிவதில்லை.

சமீபத்தில் வெளிவந்த கன்னித் தீவு தொடரை உங்கள் பார்வைக்கு கீழே தந்துள்ளேன். எவ்வளவு முயன்றும் தற்போதுள்ள மூசா, லைலா உருவங்களை சேகரிக்க முடியவில்லை. கிடைத்தால் வெளியிடப்படும்.
தொடக்கத்தில் தாடி வைத்திருந்த சிந்துபாத் காலத்திற்கேற்ப சவரம் செய்து ட்ரிம் ஆகியது எப்போது? கதை எந்த நாட்டை மையமாக கொண்டது? சிந்துபாத் லைலாவை காதலிக்கிறானா? கதாசிரியர் (அல்லது கதாசிரியர்கள்) யார்? மூலக் கதை ஏதேனும் உண்டா? சிந்துபாத் தமிழனா, அரேபியனா? அம்மன் எப்படி வருகிறாள்? மூசாவின் கன்னித் தீவு எங்கே உள்ளது? இதுவரை தொடர்ந்து கன்னித் தீவை படிப்பவர்கள் யாரேனும் உண்டா? லைலாவை பழைய உருவம் அடைய என்ன செய்ய வேண்டும்? என நிறையவே கேள்விகள்...!கன்னித் தீவு தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே!
எனது முந்தய பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய பின்னோடங்களுக்கு எனது பதிலை இங்கே காணுங்கள்.