ஞாயிறு, 28 டிசம்பர், 2008

கன்னித் தீவு - முடிவற்றக் கதையா?


'கன்னித் தீவு' என்ற வார்த்தைகள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டோர்கள் மட்டுமல்ல சராசரி தமிழ் வாசகர்கள் கூட அறிந்தவை. தினத்தந்தியில் 47 வருடங்களாக தொடர்ந்து வெளிவரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கன்னித் தீவு. இது 1961 -இல் வெளிவர தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. தற்போதைய கன்னித் தீவு '17,226' நாட்களை தாண்டியுள்ளது. 

தொடக்க காலத்தில் இரண்டாம் பக்க அடியில் வெளி வந்தது. பின்னர் இரண்டாம் பக்க மேற்பகுதியில் இன்றுவரை வெளியிடபடுகிறது. பாலன் என்ற ஓவியர் தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார்? 1961-இல் அவருக்கு வயது 20 என்றாலும் கூட தற்போது அவருக்கு 67 வயதாக இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. எனவே தற்போதுள்ள பாலனும், ஆரம்ப கால பாலனும் ஒருவரே என்பது கேள்விக்குரியதே! சித்திரங்களின் தரத்தை எடுத்துகொண்டாலும் கூட சற்று கூட ஒப்பிட முடியாத அளவிலேதான் இருக்கின்றன. சிந்துபாத், லைலா, மந்திரவாதி மூசா இவர்கள் தான் முக்கியமான பாத்திரங்கள். எனக்கு தெரிந்தவரை கன்னித் தீவு கதையை 'சுருக்கமாக' இப்படி சொல்லலாம். 

சிந்துபாத் ஒரு மன்னனின் இளம் தளபதி. லைலா இளவரசி. மூசா என்ற 'கொடிய' மந்திரவாதி 'கன்னித் தீவு' என்ற 'கன்னிகள்' நிறைந்த தீவில் அழகிய நங்கைகளை கொண்டு தனது அந்தபுரத்தை அலங்கரிப்பதையே பொழுதுப்போக்காக கொண்டவன். மூசா அடிக்கடி தனது மாயக் கண்ணாடியில் 'தற்போது உலக அழகி யார்?" என்று கேட்பான். மாயக் கண்ணாடியும் லேட்டஸ்ட் உலக அழகியை உடனடியாக காண்பிக்கும் (குளோபல் போசிசனின் சிஸ்டம்?) உடனே தனது மந்திரப்படையை சேர்ந்த அரக்கி, ராட்சசன், குட்டி பூதம் என யாரையாவது ஒருவரை அனுப்பி அந்த அழகியை தூக்கி வர செய்வான். (பெரும்பாலான அழகிகள் இளவரசிகளாக த்தான் இருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?)

அப்படித்தான் ஒரு பொன்மாலைப்  பொழுதில் மாயக்கண்ணாடி லைலாவை மூசாவுக்கு காட்டிக் கொடுத்தது. சற்றும் தாமதிக்காமல் மூசா தனது பரிவாரங்களை அனுப்பி பெண் கேட்டான். அரசன் மறுக்கவே லைலாவை சிறிய உருவமாக்கி விட்டான். (இந்த இடத்தில் 'நடந்தது என்ன?' என்று சரியாக தெரியவில்லை, மூசாவே நேரடியாக வந்து பெண் கேட்டதாக கேள்வி பட்டிருக்கிறேன்..!) சிறிய உருவமான லைலாவை பழையபடி மாற்றும் பொறுப்பு நமது கதாநாயகன் சிந்துபாதிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிந்துபாத்தும் லைலாவை ஒரு பெட்டியில் போட்டு இடுப்பில் கட்டி கொண்டு தனது 'முடிவில்லா' பயணத்தை தொடர்கிறான். 

இந்த பயணத்தின் போது பல நாடுகள், கடல்கள், ஆறுகள், காடுகள் என கடக்கும் சிந்துபாத் எண்ணற்ற இடர்களை சந்திக்கிறான். லட்சிய வீரனின் ஒரே நோக்கம் தனது இளவரசியை இயல்பான வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே. 

இது இப்படி நடந்து கொண்டிருக்க, கன்னித் தீவில் மூசாவை மகிழ்விக்க அந்தப்புர அழகிகள் ஆசையோடு அவனை நெருங்குவர், மூசாவோ 'தொலைந்து போங்கள்..! எனக்கு லைலா மட்டுமே வேண்டும்' என தனது 'கற்பில்' உறுதியாக இருப்பான். சில சமயங்களில் 'உலக அழகி யார்?' மூசா கேட்கும்போது 'லைலா' 'லைலா' என்ற தனது மாறாத பதிலால் மாயக்கண்ணாடி மூசாவை ரொம்பவும் வெறுப்பேற்றும். 


மூட் அவுட்டு ஆகி மாயக் கண்ணாடியில் 'லைலா எங்கே?" என மருகுவான். கண்ணாடியும் அன்றையை லைலா பற்றிய செய்தியை அப்டேட் செய்யும். உடனே தனது வலது கரத்தை (சீனியர்!) அழைத்து 'உடனே எனக்கு லைலா வேண்டும்' என ஆணையிடுவான். வலது கரம் அன்றைய நாள் யாருடுய கோட்டா என்பதை சரிபார்த்து ஏதாவது ஒரு பரிவாரத்தை லைலாவை தூக்கி வர ஏவி விடுவார். பரிவாரம் லைலாவை தூக்கி போக வர, சிந்துபாத் தனது சாகசத்தால் அதனை முறியடிப்பார். அப்புறம்.... வந்து... பிறகு... அப்பால... ம்... ம்... ம்... ம்... தொடரும்...


தொடர்ந்து வரும் ஒரே காரணத்தால் தமிழ் மக்களிடையே நீண்டுகொண்டே போகும் ஒரு நிகழ்வை குறிக்க 'கன்னித் தீவு' என்ற பதங்கள் பயன்படுத்தபடுகின்றன. 1981 இல் கன்னித் தீவு என்று ஒரு சினிமா வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் '"... இந்த கன்னித் தீவு மண்ணுக்கே எரு ஆக வேண்டியதுதானா? நம்ம சொந்த ஊருக்கு போவது எப்போ?...'' என்று ஒரு சக அடிமை கேள்வி கேட்க, புரட்சித் தலைவர், ''ஏன்... என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை..' என்று பாடத் தொடங்குவார். சமீபகால தமிழ் படங்களில் கூட 

''சாக்லேட் சாக்லேட் பூவிலே ....
....
....
பேட்சிலர்க்கு வீடு கொடுத்தா தேங்க்ஸ் சொல்லுவோம்
தினத்தந்தி கன்னித் தீவு எப்போ முடியும்
தெருஞ்சுட்ட தேங்க்ஸ் சொல்லுவோம்...''

மற்றும் 

ஒரு குத்து பாட்டில் கூட ...

"....
....
அட கண்ணாளனே கன்னி தீவு ரொம்ப ரொம்ப பெருசு... 
பாரு நீதானையா சிந்துபாத் 
அட வாடா வாடா வாடா 
....
...."

கன்னித் தீவின் பாதிப்புகளை நாம் காண முடியும். கன்னித் தீவு எப்போது முடியும், லைலா எப்போது தனது சுய உருவை அடைவாள் என்பன தீராத கேள்விகளாக இன்றும் பல்வேறுத் தளங்களில் பேசப்படுகின்றன ..! உண்மையில் கன்னித் தீவு கதை முடியாத ஒரு கதையா என்பது விவாதத்திற்கு உரியது அல்ல! என்றோ முடிந்திருக்க வேண்டிய கதைதான்! 

அறுபது, எழுபதுகளில் உலக பரிச்சயமற்ற, ஓரளவே படிப்பறிவை பெற்ற, சினிமாவின் மேல் அளவற்ற ஆர்வம் கொண்ட மக்கள் மத்தியில் தினத்தந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கன்னித் தீவும் மக்களால் விரும்பி படிக்கப் பட்டது. 

தற்காலத்தில் மக்களின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி தொடர்கள் 'விரும்பி' நீடிக்கப் படுவது கண்கூடு. அது போல அன்று தெரிந்தோ தெரியாமலோ கன்னித் தீவு தினத்தந்தியின் ஒரு அடையாளமாகி போயிருக்கலாம். அந்த அடையாளத்தை தக்க வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தினத்தந்தி கன்னித் தீவு கதையின் போக்கு ஒரு வட்டத்திற்க்குள்லேயே சுற்றி வரும் ஒரு உபாயத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். 

என்பது, தொண்ணூறுகளில் நான் கன்னித் தீவு கதையை ஒரு சலூனில் தொடர்ந்து படித்திருக்கிறேன். எனது அறிவுக்கு எட்டிய வரை 'கன்னித் தீவு வட்டம்' என்பதை பின்வருமாறு வரையறுக்கலாம். 

.... மந்திரவாதி மூஸாவுக்கு லைலா நினைவு வருகிறது.

.... மாயக்கண்ணாடியில் லைலாவின் லேட்டஸ்ட் லோகேசன் அறியபடுகிறது.

.... ஏதேனும் ஒரு பரிவாரம் லைலாவை கடத்தி வர அனுப்பப்படுகிறது...

.... பரிவாரத்தால் ஏற்பாடு இடர்களை சிந்துபாத் முறியடிக்கிறான். 

.... கடற்கரை/காடு/ நாடு என ஏதேனும் ஒரு இடந்தில் இருக்கும் சிந்துபாத் அப்பகுதியில் அதிகாரத்தில் இருக்கும் மன்னன்/தலைவனுக்கு ஏற்பபடும் ஏதேனும் ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்கிறான்.

.... மனம் மகிழும் மன்னன்/தலைவன் கப்பலோ, மந்திர பொருளோ, வாகனமோ கொடுக்கிறான். 

.... லைலாவை சுய உருவை அடைய செய்யும் லட்சியத்தை நோக்கி சிந்துபாத் தனது பயணத்தை தொடர்கிறான்.

.... மந்திரவாதி மூஸாவுக்கு லைலா நினைவு வருகிறது...

.... மாயக்கண்ணாடியில் லைலாவின் லேட்டஸ்ட் லோகேசன் அறியபடுகிறது...

.... ஏதேனும் ஒரு பரிவாரம் லைலாவை கடத்தி வர அனுப்பப்படுகிறது...

... அதே.... அதே.... அதே....!

தற்கால கணிப்பொறி புரோகிராம்களில் 'If.. then ... ', 'Do... until ..'' போன்ற கட்டளைகளை சரியான முறையில் கொடுத்தால் ஒரு செயலை சில பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவற்று நடத்தி கொண்டிருக்கலாம். இதே உத்திதான் இந்த 'கன்னித் தீவு வட்ட' உத்தியும். 

....கடலில் பயணம் செய்கையில் மூசாவின் ஆட்களால்  கப்பல் சிதைக்கப் படுவது...
... கடலில் தத்தளிக்கையில் திமிங்கலத்தால் விழுங்கபடுவது....
... காட்டு மிராண்டிகளிடம் மாட்டி கொள்வது....
... லைலா சிலை பின்னால் இருந்து சாமி போல பேசுவதால் விடுவிக்கப்படுவது...
... எப்போதாவது லைலாவுடன் பேசுவது....

போன்ற காட்சிகளெல்லாம் சில பல மாதங்களுக்கு  ஒருமுறை வந்து போகும் வழக்கமான காட்சிகள்தான். 

இந்த 'டெக்னிக்' பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வாய்ப்புகள் சற்று குறைவுதான். ஏனெனில் கன்னித் தீவு கதையை தொடர்ந்து சில பல மாதங்கள் படிப்பவர்கள் குறைவுதான். ஆட்டுக்குத் தாடி போல தினத்தந்திக்கு கன்னித் தீவு ஒரு வெற்று அடையாளம் மட்டுமே! போற்றி புகழ ஒன்றுமில்லை! 

ஆரம்பத்தில் கூட சித்திரங்கள் கொஞ்சம் அக்கறையோடு வரையப்பட்டிருக்கின்றன. தற்போது.... சொல்லி கொள்ள முடியாது! ஒரு கதாபாத்திரத்தின் முக சாயலை தொடர்ந்து ஒரு சில கட்டங்களுக்கு கூட ஒரே மாதிரி வரைய முடிவதில்லை. 

சமீபத்தில் வெளிவந்த கன்னித் தீவு தொடரை உங்கள் பார்வைக்கு கீழே தந்துள்ளேன். எவ்வளவு முயன்றும் தற்போதுள்ள மூசா, லைலா உருவங்களை சேகரிக்க முடியவில்லை. கிடைத்தால் வெளியிடப்படும்.



தொடக்கத்தில் தாடி வைத்திருந்த சிந்துபாத் காலத்திற்கேற்ப சவரம் செய்து ட்ரிம் ஆகியது எப்போது? கதை எந்த நாட்டை மையமாக கொண்டது? சிந்துபாத் லைலாவை காதலிக்கிறானா? கதாசிரியர் (அல்லது கதாசிரியர்கள்) யார்? மூலக் கதை ஏதேனும் உண்டா? சிந்துபாத் தமிழனா, அரேபியனா? அம்மன் எப்படி வருகிறாள்? மூசாவின் கன்னித் தீவு எங்கே உள்ளது? இதுவரை தொடர்ந்து கன்னித் தீவை படிப்பவர்கள் யாரேனும் உண்டா? லைலாவை பழைய உருவம் அடைய என்ன செய்ய வேண்டும்? என நிறையவே கேள்விகள்...!கன்னித் தீவு தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே!

எனது முந்தய பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய பின்னோடங்களுக்கு எனது பதிலை இங்கே காணுங்கள். 

27 கருத்துகள்:

  1. அய்யா,

    நாந்தான் முதலில் வந்து உள்ளேன். அதனால் என்னுடய புண்ணியம் அக்கௌன்ட் அதிகம் ஆகி விட்டது.

    இந்த கன்னி தீவு கதை தான் எனக்கு தெரிந்து உலகில் அதிக நாள் தொடர்ந்து வரும் ஒரு கதை (சீரிஸ் அல்ல, கதை; சீரிஸ் என்றால் இரத்த வெறியன் ஹகேர், கால்வின் ஹாப்ஸ், போன்றவை). அதற்கே பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. வெங்கி நண்பரே: கன்னித்தீவு பற்றி மற்ற பதிவர்கள் எல்லாம் குறிப்பு கூட இடாமல், வெறுத்து போய் இருப்பதிலேயே, அது மக்கள் இடையே தற்போது என்ன ஆர்வத்தை வளர்த்து இருக்கிறது என்று உலகே அறியுமே.

    பள்ளி பருவங்களில், என் அப்பா அவர் இளைஞராக இருந்த பொது படிக்க ஆரம்பித்த தொடர்கதை என்று கூறி இருந்ததால், அது எவ்வகை முடிவு அடையும் என்று ஒரு ஆவலில் தொடர்ந்து படித்து வந்தேன்.... ஆனால், ஒரே வட்டத்தை திரும்ப திரும்ப சுத்தி வந்து கொண்டு இருக்கும் ஒரு தொடர்கதை என்று எப்போது புரிய ஆரம்பித்தோ அன்றோடு அதை விட்டொழிந்து விட்டேன். அது அனேகமாக நம் கொள்ளு, எள்ளு பேரங்கள் கதையிலும் தொடரலாம்.

    இப்போது உள்ள கன்னித்தீவு ஓவியர் ஆரம்ப கால ஓவியரின் புனை பெயரில் வரைவது அந்த ஓவியத்தின் அவலட்சனத்தில் மூலம் தெளிவாக தெரிகிறது..

    சமீபத்தில் ஒரு படத்தின் விவேக் காமெடி ட்ராக்கில், சிந்துபாத் லைலா இடையே கள்ள காதல் என்று காமெடி கூட பண்ணி இருப்பார்கள். ஆனால் கதாசிரியர் ஆரம்ப காலங்களில் ஒரு வேளை இவர்கள் இடையே ஒரு காதல் வரும் வகையில் கரு உருவாகியிருபார் என்றாலும், கால போக்கில் அது தொடர்ந்து வெளி வரும் பாங்கில், இப்போது அது எதோ ஒரு மெல்லிய நட்பு உறவு போல தெரிகிறது... இப்போதைக்கு கதை முடியும் போல தெரியாததால் அதை நம் காலத்திற்கு முன் கண்டுபிடிப்பது இயலாத ஒன்றே :)

    ஒரு வேளை சமீபத்திய Batman,Superman சாகடித்து உலக செய்திகளில் இடம் பிடித்து போல, தினத்தந்தி குழுமத்தினர் கூட முயற்சி செய்தால், அனைத்து பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடங்களில் இது முதல் செய்தியாக வெளியாக அதிகம் காரணிகள் உள்ளன... அப்படியாவது ஒரேயடியாக இந்த கதையை முடித்தால் சரி.

    தங்கள் பதிவில் இது வெளியாகாமல், மொக்கை காமிக்ஸ் உலக நண்பர் பதிவேடில் வெளி ஆகி இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும் இல்லையா.... ஆனாலும் யாரும் எழுதாத விசயங்களை மையமாக கொண்டு நீங்கள் பதிவது ஒரு புது முயற்சியே.... தொடரட்டும் உங்கள் பனி.

    பி.கு.: 1. உங்கள் படங்களில், ஒன்று 250 எண் வரிசையில் உள்ளதே.... அப்படி என்றால் அது முதல் வருட தொடரில் இருந்து வந்தது தானே ? எப்படி இதை கையக படித்தினீர்கள் ?

    2. நல்ல வேலை, உங்கள் பதிவையும் கன்னி தீவு போல, தொடர்கதையாக எழுதாமல் இருந்தீர்கள். கோடி புன்னியமைய்யா உங்களுக்கு. :)

    ரஃபிக் ராஜா
    ராணி காமிக்ஸ் & காமிக்கியல்

    பதிலளிநீக்கு
  3. அண்ணோவ்..............


    ரொம்ப படிக்கிறீங்க.....


    அந்தக் கதை வெளியிடுவது ஒரு சடங்கு...


    பூமி இருக்கும்வரை அந்தக் கதை வரும்... வரும்.... வரும்.....

    பதிலளிநீக்கு
  4. நண்பர் அ.வெ,

    கன்னித்தீவை இதுவரை நான் படிக்கவில்லை, உங்கள் பதிவிலிருந்து அத்தீவிலிருந்து நான் தப்பியுள்ளேன் என்றே நம்புகிறேன்.

    இருப்பினும் தமிழில் சுருக்கப்பட்ட வடிவங்களில் பூம்புகார் பிரசுரம் வெளியிட்ட 1001 இரவுக் கதைகளில் ஒர் பகுதியான் சிந்துபாத் கதைகளை விரும்பி படித்துள்ளேன். ஆங்கில மொழியில் வெளியாகிய சிந்துபாத்தின் திரைப் படங்களையும் பார்த்து ரசித்துள்ளேன்.

    முன்னொரு காலத்தில் மாதந்தோறும் மாயாஜாலக் கதைகள் வெளியாகும். எழுதியவர் பெயர் ஞாபகமில்லை, ஆனால் அக்கதைகளில் மந்திரவாதிகளிற்கெல்லாம் தலைவனாக ஒர் மந்திரவாதி சித்தரிக்கப்படுவார். அவர் பெயர் மந்திரவாதி மங்கூஸா, ஆனால் இவர் தீமைகளிற்கு துணை போவதில்லை. டம்பிள்டோரை விட எனக்கு மங்கூஸாவை பிடிக்கும். இன்றும் சில வேளைகளில் அவர் பெயர் என்னை கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறது.

    உற்சாகத்துடன் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. From The Desk Of Rebel Ravi:

    Comics Pookal,

    Very nice to see the first few scans of the opening issues of Kanni theevu. Hats off to you.

    The story format that you have put is really good.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    பதிலளிநீக்கு
  6. நண்பரே,

    இதற்காக பல குத்து பாட்டுகளை கேட்டு மகிழ்ந்திருக்கிறீர்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். அந்த வைர வரிகளை போட்டு நம் அண்ணன் விஸ்வாவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள்.

    இளவரசன் விஸ்வா அவர்களோடு அளவளாவி கொண்டிருக்கும் சமயத்தில் அவர் தனக்கும் சிந்துபாத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை என்னிடம் எடுத்துரைத்தார். அவை அனைத்தும் ஒருபதிவிற்கு தேறும் என்பதால் இவ்விடம் வெளியிட இயலவில்லை.

    வித்தியாசமான கருவினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். தினத்தந்தியில் மேலும் பல இலக்கிய பகுதிகள் உள்ளன. உதாரணத்திற்கு ஆண்டியார் பாடுகிறார், சாணக்கியன் சொல்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றாக ஆராய்ந்து எழுதிஉள்ளீர்கள்... வாழ்த்துக்கள்..
    ஆனால் என்ன கொஞ்சம் ஓவராக ஆராய்ந்து விட்டீர்கள்

    பரவாயில்லை...தமிழ் காமிக்ஸ் உலகிற்கு ஒரு அருமையான தகவல்....

    பதிலளிநீக்கு
  8. 2008 ஆம் ஆண்டின் சிறந்த காமிக்ஸ் ப்ளாக்கர் அவார்ட் வென்ற திரு அய்யம்பாளையம் அவர்களே,

    புத்தாண்டு வாழ்த்துக்கள். இனி இந்த இடுகைக்கு செல்வோம்.

    //தினத்தந்தியில் 47 வருடங்களாக தொடர்ந்து வெளிவரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கன்னித் தீவு// உலகில் மிக அதிக நாட்கள் தொடந்து வெளி வரும் ஒரே கதை இது தான். இந்த உண்மையை நீங்கள் தான் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இதைப் போலவே நீங்கள் மேலும் பல அறிய இடுகைகளை இடுமாறு வேண்டுகிறேன்.

    //தொடக்க காலத்தில் இரண்டாம் பக்க அடியில் வெளி வந்தது. பின்னர் இரண்டாம் பக்க மேற்பகுதியில் இன்றுவரை வெளியிடபடுகிறது.// என்ன ஒரு மாற்றம்? இந்த மாற்றத்தால் தான் இப்போது பெட்ரோல் விலை குறைந்ததாக பங்கு மார்கெட் புலி திரு ஜோஸ் கூறுகிறார்.

    //'கன்னித் தீவு' என்ற 'கன்னிகள்' நிறைந்த தீவில்// அடடே என்ன ஒரு பெயர்க் காரணம்?

    //மாயக் கண்ணாடியும் லேட்டஸ்ட் உலக அழகியை உடனடியாக காண்பிக்கும் (குளோபல் போசிசனின் சிஸ்டம்?)// இதனால் தான் உங்கள் எழுத்துக்களை மக்கள் ரசிக்கிறார்கள். எப்படி இரண்டு விஷயங்களை நீங்கள் இணைக்கிறீர்கள்?

    //மூசா தனது பரிவாரங்களை அனுப்பி பெண் கேட்டான். அரசன் மறுக்கவே லைலாவை சிறிய உருவமாக்கி விட்டான். (இந்த இடத்தில் 'நடந்தது என்ன?' என்று சரியாக தெரியவில்லை, மூசாவே நேரடியாக வந்து பெண் கேட்டதாக கேள்வி பட்டிருக்கிறேன்..!)// அடடே, இப்படியும் நடக்குமோ?

    //சிந்துபாத்தும் லைலாவை ஒரு பெட்டியில் போட்டு இடுப்பில் கட்டி கொண்டு தனது 'முடிவில்லா' பயணத்தை தொடர்கிறான்// அடடே, இப்படியும் நடக்குமோ?

    //மூட் அவுட்டு ஆகி மாயக் கண்ணாடியில் 'லைலா எங்கே?" என மருகுவான். கண்ணாடியும் அன்றையை லைலா பற்றிய செய்தியை அப்டேட் செய்யும். உடனே தனது வலது கரத்தை (சீனியர்!) அழைத்து 'உடனே எனக்கு லைலா வேண்டும்' என ஆணையிடுவான்// மிகவும் ரசித்தேன் இந்த கட்டத்தை. தங்களுக்குள் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் ஒளிந்து உள்ளார்.

    //தொடக்கத்தில் தாடி வைத்திருந்த சிந்துபாத் காலத்திற்கேற்ப சவரம் செய்து ட்ரிம் ஆகியது எப்போது? கதை எந்த நாட்டை மையமாக கொண்டது? சிந்துபாத் லைலாவை காதலிக்கிறானா? கதாசிரியர் (அல்லது கதாசிரியர்கள்) யார்? மூலக் கதை ஏதேனும் உண்டா? சிந்துபாத் தமிழனா, அரேபியனா? அம்மன் எப்படி வருகிறாள்? மூசாவின் கன்னித் தீவு எங்கே உள்ளது? இதுவரை தொடர்ந்து கன்னித் தீவை படிப்பவர்கள் யாரேனும் உண்டா? லைலாவை பழைய உருவம் அடைய என்ன செய்ய வேண்டும்? என நிறையவே கேள்விகள்...!கன்னித் தீவு தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே// கன்னி தீவு தொடரை ஆரம்ப நாள் முதல் தொடர்ந்து படித்து மகிழ்ந்து வரும் நண்பர் ஜோஸ், குருவியார் அவர்களுக்கு கேள்விகள் எழுதும் நேஅரத்தில் (நயன்தாராவுடன் நான் ஊட்டியில் லூட்டி அடிக்க ஆசை. அவர் வருவாரா? போன்ற கேள்விகள்) இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கலாமே? நம்முடைய காமிக்ஸ் வட்டாரத்தில் வயதில் மூத்த பதிவாரளாகிய அவர் (நண்பர் முத்து விசிறிக்கு முதல் முதலில் காமிக்ஸ் கொடுத்தது அவர் தான்) இதற்கு என்ன செய்ய போகிறார்?

    கன்னி தீவு ஒரு தமிழ் கதையாகிய காரணத்தால் தான் சில பல விஷமிகள் இன்னும் இந்த பதிவில் பின்னுட்டம் இட வில்லை. அந்த தமிழ் இன துரோகி யார் என்பதை பின்னுட்டம் இடத நபர்களின் பெயரை கொண்டே நீங்கள் கண்டு பிடிக்கலாம். இதற்க்காக நீங்கள் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பதில்லை.

    நன்றியுடன் கிங் விஸ்வா.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    அய்யா அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    இது மாதிரி அரிய பதிவுகளை வெளியிட தமிழ் காமிக்ஸ் வலையுலகில் உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார். இதனால்தானே தலைசிறந்த தமிழ் காமிக்ஸ் வலைப்பூ என்று காமிக்ஸ் பூக்கள் ஒருமனதாக தேர்வாகியிருக்கிறது. பாராட்டுக்கள்! இந்த பாராட்டையும் புகழையும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    பதிலளிநீக்கு
  10. திரு அய்யம்பாளையம் அவர்களே,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    2008 ஆம் ஆண்டின் சிறந்த காமிக்ஸ் ப்ளாக்கர் அவார்ட் வென்ற பாராட்டு விழா எப்போது? அதற்கான விருந்து எங்கே?

    மூசா என்ற 'கொடிய' மந்திரவாதி 'கன்னித் தீவு' என்ற 'கன்னிகள்' நிறைந்த தீவில் அழகிய நங்கைகளை கொண்டு தனது அந்தபுரத்தை அலங்கரிப்பதையே பொழுதுப்போக்காக கொண்டவன் = அய்யா, எனக்கு ஒரு சந்தேகம். மூசா கன்னி'களை கொண்டு வந்து என்ன செய்வான்? மூஸா அவர்களை "உபயகப் படுத்தி" இருந்தால் அவர்கள் எப்படி கன்னிகளாக இருஉபார்கள்? அதனால் அந்த தீவிற்கு எப்படி கன்னி தீவு என்று பெயர் வரும்? எனவே, அந்த தீவிற்கு ஒன்று "கன்னி கழியும் தீவு" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் மூசா'விடம் ஏதோ குறை உள்ளது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள் அய்யா. என்னுடைய தலை வெடித்து விடும் போல இருக்கிறது.

    செழியன் - சென்னையிலிருந்து.

    பதிலளிநீக்கு
  11. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

    மிகவும் அருமையாக இருந்தது. வெகு விரைவில் நானும் ஒரு பதிவை இட்டு விடுகிறேன்.

    நன்றியுடன்,
    க.கொ.க.கூ

    பதிலளிநீக்கு
  12. வெங்கி... ராணி காமிக்ஸ் வலைபூவுக்கு உங்கள் sidebar ல் இருந்து இன்னும் சுட்டி அமைக்க வில்லை என்பதை நினைவு வூடவே இந்த பதிவே.... என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு... பொழப்புக்கு :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    பதிலளிநீக்கு
  13. திரு அ.வெ,

    இந்த கதை தான் நீண்ட நாட்களாக வெளிவரும் கதை என்றால் ஏன் இன்னும் தினத்தந்தி குழுமத்தினர் அதனை பிரபலம் செய்யாமல் இருக்கின்றனர்? கதையை விளக்க நீங்கள் கையாண்ட யுத்தி மிகவும் சிறப்பானது மட்டுமில்லாமல் சிரிப்பனதும் கூட. இந்த லட்சணத்தில்தான் அவர்கள் கதை சொல்லும் பாங்கு உள்ளது. ரத்னா பால பற்றி எழுதுவதாக கூறினீர்களே? எப்போது? விண்வெளி அண்ணல் எப்போது எங்களை காண வருவார்?

    காமிக்ஸ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான பதிவு. சுமார் 15 வருடங்களுக்கு முன் தினத்தந்தி குழுமத்தினர் பொன் விழா மலர் வெளியிட்டனர். அதில் கன்னி தீவு பற்றிய ஒரு கட்டுரை இடம் பெற்று இருந்தது. படித்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். அதில் ஆரம்ப காலத்தில் வந்திட்ட தொடர் படக்கதை துணுக்குகள் (COMIC STRIP) இடம் பெற்று இருந்தன.
    அதன் சித்திர தரம் அற்புதம். ஆனால் இப்போது வரும் தொடர் படக்கதை துணுக்குகள் மிகவும் மட்டரகமாக உள்ளது. குப்பை என்றே சொல்லலாம்.
    மேலும், இதர தினசரி இதழ்களிலும் சில தொடர் படக்கதை துணுக்குகள் இடம் பெற்று இருந்தன. எனக்கு நியாபகம் இருந்த வரை பட்டியல் இடுகிறேன்.
    1 . முகமூடி வீரர் மாயாவி - மலை மலர்.
    2 . பீர்பால் - தினமலர்.
    3 . இரும்புக்கை மாயாவி (ஸ்ரீகாந்த் படைத்து) - தின பூமி.
    மற்றபடி, தினசரி மற்றும் வரா இதழ்களில் வந்திட சித்திர கதைகளை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்யலாம். (ஏற்கனவே நண்பர் ரபிக் ஆரம்பித்து விட்டார் என எண்ணுகிறேன் - அவருடைய புதிய பதிவு சிறுவர் மலர் பற்றி)

    நண்பர் வெங்கி அவர்களே - உங்களிடம் இருந்து "பார்வதி சித்திர கதை" மற்றும் இதர வாண்டு மாமாவின் படைப்புகளை பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
    - siv

    பதிலளிநீக்கு
  15. கன்னித்த்தீவை தீவை வைத்து இப்படி ஒரு சுவாராசியமான பதிவா!!!

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    கிரி

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு ஆராய்ச்சீ நண்பனே.. வாழ்க உன் கொற்றம்..

    பதிலளிநீக்கு
  17. Hi,

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

    Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Thanks

    பதிலளிநீக்கு
  18. வலையுலக நண்பர்களே,

    தயவு செய்து பூவாசம் வீசும் எங்கள் வாழ்வில் புயல் வீச வைக்காதீர்கள்.

    எங்களையும் வாழ விடுங்கள்.

    காத்தவ்,
    புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
    வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.

    பதிலளிநீக்கு
  19. Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.

    A shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.

    பதிலளிநீக்கு
  20. அய்யம்பாளையம் அவர்களே,

    நீண்ட நாட்களாக நீங்கள் பதிவிடாமல் இருக்கிறீர்கள்.பணிச்சுமை அதிகமாகிவிட்டதோ?

    விரைவில் உங்களின் பதிவை எதிர்பார்கிறேன்.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    பதிலளிநீக்கு
  21. திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    இதற்கிடையில் என்னுடைய வலைப்பூவில் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) தோன்றும் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் கதை ஆகிய அறுந்த நரம்புகள் என்ற புத்தகத்தை அப்லோட் செய்து இருக்கிறேன்.

    நேரம் கிடைக்கின் படித்து மகிழவும்.

    புலா சுலாகி.
    தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்.

    நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக பதிவுகளும், கமெண்ட்'களும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதனை சரி செய்ய, சுஸ்கி-விஸ்கி மினி லயன் மூலம் அறிமுகம் ஆன அற்புத தொடர் பற்றிய திரைப்பட பதிவை இட்டு இருக்கிறேன்.

    காமிக்ஸ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  23. லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    பதிலளிநீக்கு
  24. காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    பதிலளிநீக்கு
  25. இந்த அமர காவியத்தை, தினத்தந்தி வாங்காமலே தினமும் படித்து தொடர நீங்கள் விரும்பினால், இந்த சுட்டியை ரீடரில் பதிந்து கொள்ளவும்:

    http://feeds.feedburner.com/tamilcartoons

    கூடவே, மற்ற தமிழ் கார்டூன்களும் கிடைக்கின்றன. இதை உருவாக்கிய அந்த புண்ணியவான் வாழ்க. நேரம் கிடைக்கும் போது பார்த்து சிரிக்க ஏதுவாக இருக்கும். எப்பதான் லைலாவுக்கு விடுதலை கிடைக்குமோ ?:).

    ரஃபிக் ராஜா
    ÇómícólógÝ - காமிக்கியல்

    பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!