___..•..____..•..___..•..____..•..___..•..____..•..___..•..____..•..___..•.___..•..____..•..___..•
சிலர் தங்களது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடுவர். சிலர் ஊரோடு கொண்டாடுவர். வெகுசிலரே தங்களுடைய பிறந்தநாளை உலகோடு கொண்டாடுவர். அந்த ஒரு சிலரில் நமது நண்பர் கிங் விஸ்வாவும் ஒருவர். உலக தமிழர்கள் உவகையோடு கொண்டாடும் இந்த உன்னத நாளை சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்படுகிறது பூந்தளிரின் முதல் இதழ் பற்றிய இந்த சிறப்பு பதிவு !
___..•..____..•..___..•..____..•..___..•..____..•..___..•..____..•..___..•.___..•..____..•..___..•
கேரளத்தில் பூம்பட்டா (வண்ணத்துப் பூச்சி) என்ற சிறுவர் இதழை வெற்றிகரமாக நடத்தி வந்த திரு. எஸ்.வி. பை அவர்கள் தமிழகச் சிறுவர்களை மகிழ்விக்க தமிழில் ஒரு சிறுவர் இதழை வெளியிட ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கான விளம்பரங்கள் 1982லேயே வெளியிடப்பட்டன. பல்வேறு காரணங்களால் திரு.பை அவர்களின் கனவு இரண்டு வருடங்கள் வரை நிறைவேறவேயில்லை.
1984ல் திரு.பை அவர்களின் கனவு நனவாயிற்று! அவரது கனவை நனவாக்கியவர் வேறு யாருமல்ல... நமது தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பிதாமகன் திரு. வாண்டுமாமா அவர்களேதான்!
எண்பதுகளில் கல்கி, இதயம் பேசுகிறது, கதிர், குங்குமம் போன்ற இதழ்களில் பணியாற்றி வந்தார் வாண்டுமாமா. சில நிறுவனங்களில் அவர் சந்தித்த கசப்பான அனுபவங்கள், குறைவான ஊதியம் போன்றவை அவரை தொடர்ந்து ஒரு பத்திரிக்கையில் பணியாற்ற விடவில்லை.
நல்லதொரு சிறுவர் இதழை வெளியிட வேண்டும் என்ற திரு. பையின் ஆர்வமும், நல்லதொரு நிறுவனத்தால் வெளியிடப்படும் சிறுவர் இதழில் பணியாற்ற வேண்டும் என்ற வாண்டுமாமாவின் தேடலும் ஒரு புள்ளில் முடிந்த நாள் தான் 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள். தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பொன்னாள்!
கோலாகலமாக நடந்த வெளியீட்டு விழாவில் அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. மோகன் அவர்களால் வெளியிடப்பட்ட முதல் பூந்தளிரை அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் அமுதசுரபியின் ஆசிரியருமான திரு. விக்கிரமன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடக்கத்தில் பூந்தளிரில் பூம்பட்டாவின் தமிழாக்க படைப்புகளும், டிங்கிள் பத்திரிக்கையின் காமிக்ஸ் ஸ்டிரிப்புகளும் வெளிவந்தன. ஆறு மாதங்களுக்கு பின்னர் வாண்டுமாமா தமிழ் இலக்கியம் சார்ந்த கதைகள், அறிவியல், பொது அறிவு, வேடிக்கை விளையாட்டுகள் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூம்பட்டா படைப்புகளை வெகுவாக குறைத்து விட்டார்.
வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்புகளும் வசதிகளும் சுதந்திரமும் பூந்தளிரில் வாண்டுமாவிற்கு திரு. பை அவர்களால் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை வரமாக பயன்படுத்தி வாண்டுமாமா பூந்தளிரை அற்புதமானதொரு சிறுவர் பத்திரிக்கையாக மெருகேற்றினார்.
பூந்தளிருடன் நமது இதிகாச, வரலாற்று கதைகளை காமிக்ஸ் வடிவில் வெளியிட்ட பூந்தளிர் அமர் சித்திரக்கதையும் வெளிவந்தது. ஆனால் பூந்தளிரை போல விற்பனையில் அது சாதனை படைக்கவில்லை. ஆனாலும் பூந்தளிர் நிற்கும் வரை அமர் சித்திரக்கதையும் வெளிவந்தது. நான் கூட 1986ல் இருந்த பூந்தளிர் வாங்கினாலும் பூந்தளிர் அமர் சித்திரக் கதையை வாங்கவில்லை. அதன் மதிப்பறிந்து பழைய புத்தகக் கடைகளில் தான் அவற்றை சேகரித்தேன்.
காமிக்ஸ் பூக்களில் முன்னரே பூந்தளிரைப் பற்றிய ஒரு விரிவான பதிவு வெளியிடப்பட்ட நிலையில் முதல் இதழின் சிற்சில பக்கங்களை படிப்பதை விட பார்ப்பதே சிறப்பு என்பது என் கருத்து!
முதல் இதழின் எடிட்டோரியல் உங்கள் பார்வைக்கு! இதழின் லோகோவிற்கு கொடுக்கப்ட்ட முக்கியத்துவத்தை காணுங்கள். பூந்தளிர் வாசகர்களால் மறக்கவியலாத லோகோ இது!
முதல் இதழின் உள்ளடக்கத்தை பார்த்தாலே பூந்தளிர் தமிழ் சிறுவர்களை கவர்ந்த ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
கபீஷ், காக்கை காளி உள்ளிட்ட 5 காமிக்ஸ் கதைகள் முதல் இதழில் வெளிவந்தன. முதல் இதழில் காக்கை காளியின் பெயர் 'காக்கா காளி'தான்.
கபீஷ், காக்கை காளி உள்ளிட்ட 5 காமிக்ஸ் கதைகள் முதல் இதழில் வெளிவந்தன. முதல் இதழில் காக்கை காளியின் பெயர் 'காக்கா காளி'தான்.
முதல் இதழில் வெளிவந்த கபீஷ் கதை கபீஷ் விரும்பிகள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கதை. இதன் மூலம் வேண்டியபோது நீளமாகும் வாலை கபீஷ் எவ்வாறு பெற்றான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவற்றுடன் ‘ஆகாயப்பயணம் ஆரம்பம்’, ‘அணிலை சந்தியுங்கள்’ ஆகிய காமிக்ஸ் வடிவ அறிவியல் உண்மைகளை கூறும் இரண்டு படைப்புகளும் வெளிவந்தன.
வாண்டுமாமா கிரேக்க புராணக் கதைகளை ‘கடவுளர்களின் கதை’யுடன் தொடங்கினார். கே. இராதாகிருஷ்ணன் அவர்களின் ‘வீரன் விஜயவர்மன்’ என்ற தொடர்கதை முதல் இதழிலேயே வெளிவரத் தொடங்கியது. இவற்றுடன் 6 சிறுகதைகள் வெளிவந்தன.
அட்டையுடன் சேர்த்து மொத்தம் 84 பக்கங்கள் உள்ள பூந்தளிர் 8 முழுப்பக்க விளம்பரங்களை கொண்டிருந்தது. அவற்றில் 7 பைகோவின் சொந்த நிறுவன விளம்பரங்கள். சிரிப்புத் துணுக்குகளை ஓவியர் விசுவும், கதைகளுக்கான படங்களை ஓவியர் செல்லம், கல்பனா, உமாபதி போன்றோரும் வரைந்திருந்னர்.
நன்றி: முதல் இதழை கொடுத்து உதவிய நண்பர் கிங் விஸ்வாவிற்கும் தனது வாழ்க்கை வரலாறான 'எதிர்நீச்சலில்' தனது பூந்தளிர் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாண்டுமாமாவிற்கும் எனது நன்றிகள்.